முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி

குறள் 93
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் 
இன்சொ லினதே அறம்
[அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
முகத்தான் - முகத்து + ஆன்
முகம் - தலையில் நெற்றிமுதல் மோவாய் வரையுள்ள முன்புறம், வாயில், நோக்கு, வதனம்
ஆன் - அவ்விடம், இக்கணம்

அமர்ந்து - அமர் - விருப்பம்; கோட்டை போர் போர்க்களம் மூர்க்கம்

இனிது - இனி-மை, இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

நோக்கி - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்

அகத்தான் - அகம் + ஆன்
அகம் - இருப்பிடம்; பூமி மனை வீடு, உள் மனம், அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

ஆம் - நீர்; ஈரம் வீடு மாமரம் அழகு சம்மதங்காட்டும்சொல்; கேள்விப்பட்டதைக்குறிக்கும்சொல்; இகழ்ச்சிக்குறிப்பு; அனுமதி, தகுதி, ஊக்கம்குறிக்கும்சொல்; ஆவது ஆகிய சாரியை அசைநிலை தன்மைப்பன்மைவிகுதி; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

இன் - இனிமை

சொலினதே - சொல் + இனிதே

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

அறம் - தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல், சுகம்

முழுப்பொருள்
ஒருவரை வாசலில் (வாயிலில்) கண்ட உடன் (அல்லது முதல் முதலில் கண்ட உடன்), அவர் மீது, அன்புக்கொண்டு (விருப்பத்துடன்), இன்பம் தரும் மலர்ச்சியோடு அவரை காண வேண்டும். அதுப்போல உள் மனதில் இருந்து மகிழ்ந்து அவரிடம் இனிமையான நற்சொற்களை கூற வேண்டும். அதாவது அடுத்தவர் முகம் சுளிக்காத சோற்வூட்டாத சொற்கள். அதுவே அறம் என்கிறார் திருவள்ளுவர்.

இங்கே திருவள்ளுவர் ஒருவருக்கு பணம் காசு நகை கொடுக்க சொல்லவில்லை. இங்கே சொல்வது எல்லாம் பணம் கொடுத்து வாங்க தேவையில்லாத இனிய சொற்களை மட்டும் தான். ஆனால் அதற்கு தேவை மனது மட்டுமே.

இங்கே ஏன் திருவள்ளுவர் வாயிலில் (முதன் முதலில்) கண்ட உடன் இன்முகத்துடன் நோக்க வேண்டும் என்கிறார் ? எனக்கு என்ன தோன்றுவது என்றால் - ஒருவரை வரவேற்கும்/சந்திக்கும் பொழுது விருப்பம் இல்லாத மகிழ்ச்சியில்லாத முகத்தோடு இருந்தால், நாம் சந்திக்கும் நபருக்கு நம்மிடம் பேச ஒரு மனத்தடை உருவாகும். நாம் பல தடவை வீட்டில் பார்த்திருப்போம் - யாராவது ஒருவர் வீட்டில் முகம் கொடுத்து பேசவில்லை என்றால் ஏதோ தவறு இருக்கிறது என்று. இவ்வீட்டில் நாம் இங்கு வருவது இவருக்கு (ஒருவருக்கு) பிடிக்கவில்லை என்று நமக்கு புலப்படும். அதன் பிறகு நாம் அங்கு செல்வதை பொதுவாக தவிர்ப்போம். அதனை தவிற்கவே சந்திக்கும் பொழுதே இன்முகத்துடன் சந்திக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”விருந்துகண் டுள்ளம்
களிக்கு மங்கையர் முகமெனப் பொலிந்தன கமலம்’ (கம்ப.கார் 37)

பரிமேலழகர் உரை
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி - கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி; அகத்தான் ஆம் இன்சொலினதே அறம் - பின் நண்ணிய வழி, மனத்துடன் ஆகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே அறம். ('நோக்கி' என்னும் வினையெச்சம் 'இன்சொல்' என அடையடுத்து நின்ற முதல்நிலைத் தொழிற் பெயர் கொண்டது. ஈதலின் கண்ணது அன்று என்றவாறு. இவை இரண்டு பாட்டானும் இன்முகத்தோடு கூடிய இன்சொல் முன்னரே பிணித்துக் கோடலின், விருந்தோம்புதற்கண் சிறந்தது என்பது கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
முகத்தா னமர்ந்தினிது நோக்கி-ஒருவரைக் கண்டபொழுதே முகமலர்ச்சியோடு விரும்பி இனிதாக நோக்கி அகத்தான் ஆம் இன்சொலினதே அறம்-பின்பு நெருங்கியவிடத்து அக மலர்ச்சியோடு கூடிய இனிய சொற்களைச் சொல்லுதலை யுடையதே அறமாவது.

ஒருவரைக் கண்டபொழுதே ஒரு பொருளை யீதல் பொதுவாக இயையாமையின், முதற்கண் இன்முகங் காட்டலும் உடனும் அடுத்தும் இன்சொற் சொல்லுதலும் மக்களைப் பிணித்து மகிழ்விக்குந் தன்மையனவாதலின், விருந்தினரிடத்தும் இம்முறையைக் கையாள்வதே சிறந்ததென்றார்.

மணக்குடவர் உரை
கண்ணாலே பொருந்தி, இனிதாக நோக்கி மனத்தோடே பொருந்திய இன்சொல் சொல்ல வல்லவனாயின் அதுதானே யறமாம்.

மு.வரதராசனார் உரை
முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.

சாலமன் பாப்பையா உரை
பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
கனிவாகப் பார். இதமாகப் பேசு.

பொருள்: முகம் மலர்ந்து இனிது நோக்கி அகம் ஆம் இன் சொல்லினது அறம்‡ முகம் மகிழ்ந்து இனிமையாகப் பார்த்து அகத்தின் கண் (உவகையால்) உண்டாகும் இனிய சொல்லையுடைய செயல் அறம்.

அகலம்: அத்து இரண்டும் ஆனும் சாரியைகள். ‘ஆல்’ அசை. ‘அது’ என்னும் சுட்டுப் பெயர் அறத்திற்கு முதலாகிய செயலைச் சுட்டி நின்றது. ‘ஏகாரம்’ அசை. இன் சொல்லின் என்பது செய்யுள் விகாரத்தால் லகர வொற்றுக் கெட்டு நின்றது. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘முகத்தா னமர்ந்து’. மணக்குடவர், பரிமேலழகர் பாடம் ‘இன்சொலினதே’. தாமத்தர் பாடம் ‘இன்சொலஃதே’. தருமர், நச்சர் பாடம் ‘இன்சொலி னஃதே’.

கருத்து: மலர்ந்த முகத்தோடும் இனிய சொல்லோடும் உவந்த உளத்தோடும் செய்யப்படும் வினைகள் அறமாம்.

English Meaning - As I taught a kid - Rajesh
Whenever we meet or come across someone we should greet them with smile in our faces. Also, it is our duty to say heartfelt positive and kind words. i.e., we should not hurt others. Our face reflects our heart. Hence, smile in our face is mentioned first. Similarly our words reflects our heart. 

Questions that I ask to the kid
When we speak to others how should our words be?
How should we treat others when we meet them? How would you relate it to words?

No comments:

Post a Comment