செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி

குறள் 112
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி 
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
[அறத்துப்பால், இல்லறவியல்,  நடுவு நிலைமை]

பொருள்
செப்பம் - செவ்வை; நடுநிலை; சீர்திருத்தம்; பாதுகாப்பு; செவ்வியவழி; தெரு; நெஞ்சு; மனநிறைவு; ஆயத்தம்.

உடையவன் - கொண்டவன், உரியவன்; பொருளையுடையவன்; கடவுள் செல்வன் தலைவன்

ஆக்கம் - காண்க:ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை (ஆகு-. 1. Achievement, accomplishing), உண்டுபண்ணுகை; படைப்பு, செல்வம், பொன், பெருக்கம், இலாபம், ஈட்டம், கொடிப்படை, திருமகள், மங்களகரம், வாழ்த்து, Increase, development; விருத்தி, 

சிதைவு - குற்றம்; கேடு.

இன்றி - இன்-மை. Without;இல்லாமல், 

எச்சத்திற்கு - எச்சம் - எஞ்சிநிற்பது, மிச்சம்; கால்வழி, மக்கள்; மகன்; எச்சில்; பறவைமலம்; ஒருமணப்பண்டம்; குறைவு; பிறப்பிலேவரும்குறை:குருடு, ஊமை, செவிடு, கூன், குறள், மா, மருள், உறுப்பில்பிண்டம்என்னும்எட்டுவகைஊனம்; எக்கியம், வேள்விசெல்வம்; முன்னோர்வைப்பு; தொக்கிநிற்பது; உருபுமுற்றுஎச்சங்கள்கொண்டுமுடியும்பெயர்வினைகள்; பெயரெச்சவினையெச்சங்கள்,  Work;காரியம்

ஏமாப்பு - பாதுகாப்பு; அரணாதல், வலியாகுதல்; செருக்கு; கருத்து.

உடைத்து - உடைதல் - இருக்கும்

முழுப்பொருள்
இக்குறளுக்கு பல உரைகள் “நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்” என்று எழுதப்பட்டு உள்ளது. ஆனால் எனக்கு சற்று அதிகமாகவும் தோன்றுகிறது.

நடுவுநிலையை பாதுகாக்கும் ஒருவன் அறத்தை பின்பற்றுவதால் அவன் தலைவன் எனலாம். நடுவுநிலை என்பது ஒரு செல்வமுமாகும். அத்தகைய செல்வம் குறையாமல் (/சிதைவின்றி) உயர்ந்துக்கொண்டே (/ஆக்கம்) இருக்கும்  - எப்போது என்றால் அவன் வரும் காலங்களிலும் நடுவுநிலையை தொடர்ந்து பாதுகாத்தால். அப்படி நடுவுநிலையை பாதுக்காத்தால் இந்த செல்வம் (புகழ், மனநிறைவு) அவர்காலத்திலும் அழியாது வருங்காலத்திலும் அழியாது. செல்வம் (புகழ், மனநிறைவு) உயர்ந்துக்கொண்டே இருக்கும். அது அவருடைய அடுத்த சந்ததியினருக்கும் ஒரு வாழ்க்கைக்கான வழிதடமாய் இருக்கும்.

ஒரு நீதியரசர் ஒரே ஒரு வழக்கிற்கு தவறான தீர்ப்பு அளித்தால் என்னவாகும்? ஒரு குண்டா பாலில் ஒரு துளி விஷம் கலந்ததுப்போல அவர் புகழ் குன்றி விடும்.

கலிதொகை இவ்வாறு கூறுகிறது
“செம்மையின் இகந்தொரீ இப் பொருள்செய்வார்க் கப்பொருள்
இம்மையும் மறுமையும் பகையாவ தறியாயோ” (கலி. 14:14-5)

இக்குறளுக்குத் தொடர்பில்லாவிட்டாலும், ஒரு கூடுதல் தகவல்: வள்ளுவர், “கற்றலைப்” பற்றியும், சிற்றினம் சேராமை பற்றியும் உள்ள குறள்களிலும் “எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்ற  சொற்றொடரையே சொல்லியிருப்பார். சங்க இலக்கியமான ஐந்திணை எழுபதிலும் இச்சொற்றொடர் பயன்பட்டிருக்கிறது.  புலவர்களுக்கு பிடித்த வெண்பா ஈற்றுச் சீர்களாயிருந்திருக்க வேண்டும்.  கீழ் கண்ட பாடலைப் படிக்கவும்.

பெருங் கை இருங் களிறு ஐவனம் மாந்தி,
கருங் கால் மராம் பொழில் பாசடைத் துஞ்சும்,
சுரும்பு இமிர் சோலை, மலை நாடன் கேண்மை
பொருந்தினார்க்கு ஏமாப்பு உடைத்து.

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
செப்பம் உடையவன் ஆக்கம் - நடுவு நிலைமையை உடையவனது செல்வம்; சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து - பிறர் செல்வம் போல அழிவு இன்றி அவன் வழியிலுள்ளார்க்கும் வலியாதலை உடைத்து. (விகாரத்தால் தொக்க எச்ச உம்மையான் இறக்கும் துணையும் அவன்றனக்கும் ஏமாப்பு உடைத்து என்பது பெற்றாம். அறத்தோடு வருதலின், அன்னதாயிற்று. தான் இறந்தவழி எஞ்சி நிற்பதாகலின் 'எச்சம்' என்றார்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
செப்பம் உடையவன் ஆக்கம்-நடுவுநிலைமை யுடையவனது செல்வம்; சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து-பிறர் செல்வம் போல் அழியாது அவன் வழியினர்க்கும் வலிமையாதலை யுடையது. வலிமை-பாதுகாப்பு.

எச்சவும்மை தொக்கது. ஒருவனுக்குப் பின் எஞ்சி நிற்பதாகலின் வழிமரபு எச்சமெனப்பட்டது.

மணக்குடவர் உரை
நடுவு நிலைமை யுடையவனது செல்வம் தன்னளவிலுங் கேடின்றியே நின்று, தன் வழியுள்ளார்க்குங் கேடுவாராமற் காவலாதலையுடைத்து. நடுவுநிலைமையுடையார் செல்வம் அழியாதென்றவாறு.

மு.வரதராசனார் உரை
நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

சாலமன் பாப்பையா உரை
நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
நீதிமானின் நற்பெயர் வம்சத்துக்கே பெருமை சேர்க்கும்.

பொருள்: செப்பம் உடையவன் ஆக்கம் ‡ நடுவு நிலைமையைப் பொருந்தியவனது செல்வம், சிதைவு இன்றி எச்சத்திற்கும் ஏமாப்பு உடைத்து - அழிவு இல்லாமல் (அவனுக்கேயன்றி அவன்) மக்கட்கும் காப்பாதலை யுடைத்து.

அகலம்: எச்சத்திற்கும் என்பதன் உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. செப்பம் - நேர்மை-நடுவு நிலைமை.

கருத்து: நடுவு நிலைமை யுடையவன் செல்வம் அழியாது.

No comments:

Post a Comment