இன்மையுள் இன்மை விருந்தொரால்

குறள் 153
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் 
வன்மை மடவார்ப் பொறை
[அறத்துப்பால், இல்லறவியல், பொறையுடைமை]

பொருள்
இன்மையுள் - வறுமையுள் எல்லாம் வறுமை யாதெனில்
இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.
விருந்து -  புதியராய்வருபவரைஉணவளித்துப்போற்றுதல்; காண்க:விருந்தினன்; புதுமை; நூலுக்குரியஎண்வகைவனப்புகளுள்ஒன்று.
ஒரால் - நீங்குகை
வன்மையுள் 
வன்மை - வலிமை; கடினம்; வன்சொல்; ஆற்றல்; வலாற்காரம்; சொல்அழுத்தம்; கோபம்; கருத்து; வல்லெழுத்து.
மடவார்ப் - மூடர்
பொறை -  பாரம், சுமை; கனம்; மலை; சிறுகுன்று; கல்; பூமி; பொறுமை; அடக்கம்; கருப்பம்; வலிமை.

முழுப்பொருள்
வறுமையுள் எல்லாம் மிகப் பெரிய வறுமை என்ன வென்றால்? வீட்டிற்கு வந்திருப்பவரை உபசரிக்காமல் இருப்பது. தனது வறுமையின் காரணமாகவோ அல்லது வேண்டுமென்ற வந்திருப்பவரை உபசரிக்காமல் இருப்பது.

அதேப்போல் வலிமையில் எல்லாம் வலிமை என்பது பொறுமை காப்பது. அதுவும் மூடத்தனமாக அறியாமல் செய்யும் பிழைகளை பொறுத்துக்கொள்வது. பிழைகள் செய்வது மனித இயல்பு. ஆதலால் அதனை பொறுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் எல்லா பிழைகளையும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று இல்லை. அறியாமல் செய்த பிழைகளையே திருவள்ளுவர் மடவார் என்கிறார்.

நமது வீடுகளில் மற்றும் அலுவகங்கலில் பல பலர் தவறுகளை செய்கின்றனர்.அவர்களிடம் நாம் பொறுமை காக்கவில்லை என்றால் நமது நிம்மதி தொலைந்துவிடும். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை” (குறள் 89)

பரிமேலழகர் உரை
இன்மையுள் இன்மை விருந்து ஒரால்-ஒருவனுக்கு வறுமையுள் வைத்து வறுமையாவது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது நீக்குதல்; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-அதுபோல வன்மையுள் வைத்து வன்மையாவது அறிவின்மையான் மிகை செய்தாரைப் பொறுத்தல். [இஃது எடுத்துக்காட்டு உவமை. அறன் அல்லாத விருந்து ஒரால் பொருளுடைமை ஆகாதவாறுபோல, மடவார்ப் பொறையும் மென்மையாகாதே வன்மையாம் என்பது கருத்து.].

மணக்குடவர் உரை
வலிமையின்மையுள் வைத்து வலியின்மையாவது புதுமையை நீக்காமை: வலியுடைமையுள் வைத்து வலியுடைமையாவது அறியாதாரைப் பொறுத்தல். புதுமை யென்றது கேட்டறியாதது. நீக்காமை- பொறுமை.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இன்மையுள் இன்மை விருந்து ஒரால் - ஒருவனுக்கு வறுமையுள் வறுமையாவது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது விடுதல் ; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை - அதுபோல வலிமையுள் வலிமையாவது அறிவிலார் செய்த மிகையைப் பொறுத்துக் கொள்ளுதல்.

இது ஓர் உவமியத்திற்கு வேறோர் உவமியத்தை உவமமாக்கிய எடுத்துக் காட்டுவமை. ஒரால்-ஒருவுதல். உவமியம் பொருள்.

மு.வரதராசனார் உரை
வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்

சாலமன் பாப்பையா உரை
வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது.

பொருள்: விருந்து ஒரால் இன்மையுள் இன்மை - விருந்தினரை விலக்குதல் வறுமையுள் வறுமை ; மடவார்ப் பொறை வன்மையுள் வன்மை - (மிகை செய்த) மடையரைப் பொறுத்தல் வலிமையுள் வலிமை.

அகலம்: மடவார் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை. மிகை செய்தற்குக் காரணம் மடமை என்பதைக் குறிக்கவே ‘மடவார்ப் பொறை’ என்றார். வன்மையுள் வன்மை அறிவுடைமை, ‘அறிவற்றங் காக்குங் கருவி’ என்றா ராகலின். இன்மையுள் இன்மை அறிவின்மை, ‘அறிவின்மை யின்மையு ளின்மை’ என்றாராகலின். ‘ஒப்பமுடித்தல்’ என்னும் உத்தியால் மடவார்ப் பொறைக்குக் காரணமாய அறிவுடைமையைக் கூறும் இக் குறளில் விருந்தொராலுக்குக் காரணமாய அறிவின்மையையும் கூறினார்.

கருத்து: அறிவில்லாதார் செய்த பிழைகளைப் பொறுத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment