மாலையோ அல்லை மணந்தார்

குறள் 1221
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.
[காமத்துப்பால், கற்பியல், பொழுதுகண்டிரங்கல்]

பொருள்
மாலையோ

அல்லை - அல்லிக்கொடி; தாய்; அல்லி. Water-lily;அல்லி;

மணத்தல் - மணம்புரிதல்; புணர்தல்; கூடியிருத்தல்; அணைத்தல்; கலத்தல்; வந்துகூடுதல்; நேர்தல்; பொருந்துதல்.
மணந்தார் - திருமணம் செய்துக்கொண்டு கூடியவர்

உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்

உண்ணும் - உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்

வேலை - தொழில்; செயல்; வேலைப்பாடு; காண்க:வேலைத்திறன்; உத்தியோகம்; காலம்; கடற்கரை; கடல்; அலை; கானல்; கரும்பு; வெண்காரம்.

நீ- ஒர்உயிர்மெய்யெழுத்து(ந்+ஈ); முன்னிலைஒருமைப்பெயர்.
வாழி - வாழ்க என்னும் பொருளில் வரும் வியங்கோள் சொல்; ஓர்அசைச்சொல்.

பொழுது - காலம்; தக்கசமயம்; வாழ்நாள்; கணம்; சிறுபொழுதுபெரும்பொழுதுகள்; சூரியன்

முழுப்பொருள்
ஒரு நாளில் பல பொழுதுகள் உண்டு - காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை. ஒவ்வொரு பொழுதுக்கும் ஒரு தன்மை உண்டு.பொதுவாக காலை நேரங்களில் அந்த நாளை துவங்கி அந்நாளுக்கு ஆயுத்தமாகி வேலைக்கு சென்று வீடு திரும்புவோம். இரவு/ யாமத்திலும் வைகறையிலும் கூடிவிட்டு உறங்கிவிடுவோம். ஆதலால் மாலை என்பது மிக முக்கியமான ஒரு பொழுது.

திருமணத்திற்கு முன்பு காதலன் காலையெல்லாம் உழைத்துவிட்டு காதலியை தேடி வந்து மாலையில் வருவான். அந்த நேரத்தில் தான் அவர்கள் அன்பு பொழிந்துக்கொள்வார்கள். ஆதலால் மாலைக்காக காத்திருக்காத மாலை வராதா என்று ஏங்காத  காதலர்கள் அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். திருமணத்திற்கு முன்பு இருந்த நேரத்தில் மாலைக்காக காத்திருந்தனர். இந்த மாலை பொழுதிற்காகவே வாழ்ந்தனர். மாலையில் காதலருடன் இருக்கும் பொழுதே அவர்களுக்கு அந்த நாளுக்கான ஆக்சிஜன் (Oxygen) என்றே சொல்லலாம். மாலையின் நினைவுகளை காலையில் அசைப்போட்டு அசைப்போடு நேரத்தை கழித்தனர்.

ஆனால் இப்பொழுதோ காதலர் காதலியை மறந்துவிட்டு வேலை வேலை என்று சதாசர்வ காலமும் வேலையை கட்டிக்கொண்டு அழுகிறார். வீட்டில் ஒருத்தி இருக்கிறாளே என்று கூட இல்லை அவருக்கு. காலையில் எல்லா வேலையும் முடித்துவிட்டு அவருக்காக காத்திருக்கிறேன். ஆனால் அவரோ இன்னும் வரவில்லை. அவரின் நினைவோ என்னை பாடாய் படுத்துகிறது. அழகிய பொழுது, தென்றலின் குளுமை, மெதுவாக வீசூம் மார்கழியின் வாடை காத்து, பூக்களை போல தேகமும் பூத்து வீசும் வாசம், நட்சத்திர விண்மீன்கள் ஒடி வந்து வானத்தை நமக்காக அலங்கரிக்கும், ஏகாந்த மோகங்கள் லீலை செய்யும் இந்த வேலையில் என்னை தவியாய் தவிக்க விட்டு இருக்கிறார் என் காதலர். அவரின் நினைவுகளோ என்னை கொல்கிறது.  இப்படி அவர் இல்லாத மாலையில் ஒவ்வொரு கணமும் கொல்கிறாயே மாலையே - நீ நான் விரும்பிய மாலையே அல்ல.

இங்கே அவள் நியாயமாக கணவன் மீது கோபம் கொள்ள வேண்டும். ஆனால் காதலர் மீது கொண்டுள்ள காதலால் இவள் கோபத்தை மாலையின் மீது காட்டுகிறாள். இதனை காதலன்மீது கொண்ட காதலாகவும் பார்க்கலாம்/சொல்லலாம்.

கலித்தொகை வரிகள் மகளிரின் அந்நிலையை இவ்வாறு கூறுகின்றன.

“வாலிழை மகளிர் உயிர்பொதி அவிழ்க்கும்
காலை ஆவ தறியார்
மாலை என்மனார் மயங்கி யோரே” (கலி: 119:14,6)

”ஐதேந் தகலல்குல் ஆவித் தழலுயிராக்
கைசோர்ந் தணலூன்றிக் கண்ணீர் கவுளலைப்பக்
கண்ணீர் கவுளலைப்பக் கையற்று யாம் இனையப்
புண்ணீரும் வேலின் புகுந்ததால் மாலை” (சீவக. 2050)

சிறுபொழுது
காலை – காலை 6 மணி முதல் 10 மணி வரை.
நண்பகல் – 10 மணி முதல் 2 மணி வரை.
எற்பாடு – 2 மணி முதல் 6 மணி வரை.
மாலை – 6 மணி முதல் இரவு 10 மணி வரை.
யாமம் – இரவு 10 மணி முதல் 2 மணி வரை.
வைகறை – இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

காற்று
வாடை - வடக்கில் இருந்து வீசும் காற்று
சோழகம் - தெற்கில் இருந்து வீசும் காற்று
கொண்டல் - கிழக்கில் இருந்து வீசும் காற்று

கச்சான் (காற்று) - மேற்கில் இருந்து வீசும் காற்று

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது, மாலைப்பொழுது வந்துழி, அதனைக் கண்டு தலைமகள் இரங்குதல். 'கனா முந்துறாத வினையில்லை' (பழமொழி.2) என்பதுபற்றிப் பகற்பொழுது ஆற்றிஇருந்தாட்கு உரியதாகலின், இது கனவு நிலை உரைத்தலின் பின் வைக்கப் பட்டது.]

(பொழுதொடு புலந்து சொல்லியது.) பொழுது - பொழுதே; நீ மாலையோ அல்லை - நீ முன்னாள்களின் வந்த மாலையோ எனின் அல்லை; மணந்தார் உயிர் உண்ணும் வேலை - இருந்த ஆற்றான் அந்நாள் காதலரை மணந்த மகளிர் உயிரையுண்ணும் இறுதிக்காலமாய் இருந்தாய். (முன்னாள் - கூடியிருந்த நாள். 'அந்நாள் மணந்தார்' எனவே, பின் பிரிந்தாராதல் பெறுதும். வாழி என்பது குறிப்புச் சொல். 'வாலிழை மகளிர் உயிர்ப்பொதி அவிழ்க்குங்காலை' (கலித்.நெய்தல்.2) என்றாற்போல, ஈண்டுப் பொதுமையாற் கூறப்பட்டது. 'மாலை நீ அல்லை' எனவும் பாடம். வேலை என்பது ஆகுபெயர். வேலை என்பதற்கு வேலாயிருந்தாய் என்பாரும் உளர்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(பொழுதொடு புலந்தது)

பொழுது - மாலைப்பொழுதே!; நீ மாலையோ அல்லை - நீ முன்னாட்களில் வந்த மாலைப்பொழுதே யல்லை ; மணந்தார் உயிர் உண்ணும் வேலை - காதலரை மணந்து பிரிந்த மகளிரைக் கொல்லும் இறுதிக் காலமாகவே யிருக்கின்றாய், இந்நாள்.

முன்னாள் காதலரொடு கூடியிருந்த நாள்.தன்னைப் போற் காதலரைப் பிரிந்த பிறரையும் உளப்படுத்தி 'மணந்தார்' என்றாள். 'வாழி' யென்பது எதிர்மறைக்குறிப்பு.வேலை எல்லை; இங்கு வாழ்நாளெல்லையைக் குறித்தது.வேலையென்பதற்கு வேலாயிருந்தாய் என்றுரைப்பர் மணக்குடவ பரிதி பரிப்பெருமாளார்.

மணக்குடவர் உரை
பொழுதே! நீ வெப்பமுடையை யானமையான் மாலையோ எனின் அல்லை: முன்பு கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பதாகியவொரு வேலாயிருந்தாய். இது மாலைப்பொழுது கண்டு தலைமகள் ஆற்றாமையாற் கூறியது.

மு.வரதராசனார் உரை
பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!.

சாலமன் பாப்பையா உரை
பொழுதே! நீ வாழ்க! முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா நீ என்றால் இல்லை; திருமணம் செய்து கொண்ட பெண்களின் உயிரை வாங்கும் பொழுது நீ.

No comments:

Post a Comment