தகுதி எனவொன்று நன்றே

குறள் 111
தகுதி எனவொன்று நன்றே பகுதியால் 
பாற்பட்டு ஒழுகப் பெறின்
[அறத்துப்பால், இல்லறவியல்,  நடுவு நிலைமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தகுதி - பொறுமை; பொருத்தம்; தகுதிவழக்கு; மேன்மை; நல்லொழுக்கம்; நடுவுநிலைமை; ஆற்றல்; அறிவு; கூட்டம்; தடவை; குணம்; நிலைமை.
என ஒன்றும்  - என்ற ஒரு நிலைப்பாடு
நன்றே - நன்மை பயக்கும்
பகுதியான் -  நட்பு, பகை, நெருங்கியவர், அயலவர், அக்கறையின்மையை ஆகிய சார்பு காரணிகள்
பாற்பட்டு  - இவையாதும் இல்லாமல் இருந்தால்
ஒழுகப்பெறின் - ஒழுக்கமாக இருந்தார் ஆனால்

முழுப்பொருள்
வாழ்வில் நாம் பல சந்தர்ப்பங்களை சந்திக்கிறோம். அதில் நாம் நண்பர்களையும், பகைவர்களையும், நம் நாட்டினவர்களையும், அயல்நாட்டினவர்களையும் ஓவ்வொரு நாளும் காண்கிறோம். ஒரு வழக்கிற்காகவோ, ஒரு விவாதத்திற்காகவோ, ஒரு பிரச்சினைக்காகவோ ஒரு முடிவு எடுக்கும் பொழுது எந்த ஒரு பக்கமும் சார்பு இல்லாமல் நடுவுநிலைமையோடு இருப்பதே சாலச்சிறந்தது ஆகும். அதுவே அறம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது, பகை ,நொதுமல்,நட்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்பநிற்கும் நிலைமை .இது நன்றி செய்தார்மாட்டு அந்நன்றியினை நினைத்தவழிச் சிதையுமன்றே? அவ்விடத்துஞ் சிதையலாகாது என்றற்குச் செய்ந்நன்றி அறிதலின்கண் வைக்கப்பட்டது.)

தகுதி என ஒன்றே நன்று - நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று; பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின் - பகை, நொதுமல் நட்பு எனும் பகுதிதோறும், தன் முறைமையை விடாது ஒழுகப் பெறின். (தகுதி உடையதனைத் 'தகுதி' என்றார்."ஊரானோர் தேவகுலம்" என்பது போலப் பகுதியான் என்புழி ஆன் உருபு'தோறு'ம் தன் பொருட்டாய் நின்றது. 'பெறின்' என்பது அவ்வொழுக்கத்து அருமை தோன்ற நின்றது. இதனான் நடுவுநிலைமையது சிறப்புக் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின்-பகை நட்பு நொதுமல் என்னும் முத்திறத்தும் முறைமை தவறாது ஒழுகப் பெறின்; தகுதி என ஒன்றே நன்று-நேர்மை என்று சொல்லப்படும் ஒர் அறமே நல்லதாம்.

தகுதி என்ற சொல்லால் இங்குக் குறிக்கப்பட்டது நடுவுநிலை. தமிழரின் ஏமாளித்தனத்தினால் 'யோக்கியதை' என்னும் வடசொல் வழக்கூன்றவே தகுதி என்னும் தகுந்த தமிழ்ச்சொல் வழக்கு வீழ்ந்தது. ஏகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. 'பகுதியான்' என்பது பகுதிதொறும் என்று பொருள் படுதலால், ஆனுருபு உடனிகழ்ச்சிப் பொருளது. 'பெறின்' என்பது அவ்வொழுக்கத்தின் அருமை தோன்ற நின்றது.

மணக்குடவர் உரை
நடுவு நிலைமை யென்று சொல்லப்படுகின்ற தொன்று நல்லதே: அவரவர்நிலைமைப் பகுதியோடே அறத்தின்பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின்.

மு.வ உரை
அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை
பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
சார்பெடுக்காமல் நடுநிலை காப்பது  நல்லறமே.

பொருள்: தகுதி என ஒன்று நன்றே - நடுவு நிலைமை என்று சொல்லப்பட்ட (ஒழுக்கம்) ஒன்று அறனே யாம்; பகுதியார்பால் பட்டு ஒழுக பெறின் - (மேற்கூறிய நான்கு) திறத்தினர்கண்ணும் பொருந்தி ஒழுகப் பெற்றால்.

அகலம்: அவ்வப் பகுதியினர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்த வழி நடுவு நிலைமை அறமாம் என்ற வாறு. தகுதியானது பகுதியின்பாற் பட்டொழுகப் பெறின் அறமாம் என்றமையால், ‘தகுதி என ஒன்று’ என்பதற்கு ‘நடுவு நிலைமை என்று சொல்லப்பட்ட ஒழுக்கம் ஒன்று’ என்று பொருள் உரைக்கப்பட்டது. நொதுமலர் - அயலார். நான்கு பகுதியார் இன்னின்னார் என்று மேற் கூறப்பட்டுள்ளனர். அப் பகுதியார்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களைப் பற்றிக் கூறும் அதிகாரங்களில் கண்டு கொள்க. ஏகாரம் தேற்றத் தின்கண் வந்தது. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘பகுதியாற்’. ‘பகுதி’ என்பதற்கு ஈண்டுப் பொருத்தமான பொருள் காணுதல் அரிதாகலானும், வேண்டுவதாய ‘ஆர்’ விகுதியை விடுத்து, வேண்டாததாய ‘ஆல் உருபை அல்லது அசையை ஆசிரியர் சேர்க்க மாட்டா ராகலானும் ‘பகுதியாற்’ என்பது ஏடு பெயர்த் தெழுதியோனால் நேர்ந்த பிழை யயனக் கொள்க.

கருத்து: பிறர்க்குச் செய்ய வேண்டிய கடமைகளை நடுவாக நின்று செய்யின், அந் நடுவு நிலைமை ஓர் அறமாம்.

Thirukkural - Management - Thoughts
To lead a virtuous life is very difficult, as that demands a person to keep himself away from hatred, jealous, anger, blame, and revenge. Kural 111 fairly says that being fair and firm is always fair.

Great is impartiality,  not swayed 
By hate, apathy or love.

However, being fair is a challenge too. When a person practices the practices of keeping himself balanced and impartial, he will obtain the qualities of a virtuous person.


English Meaning - As I taught a kid - Rajesh
If a person needs one virtue then it is neutrality because one has to practice neutrality / impartiality unfailingly towards all sections (foes, friends, strangers).  And this neutrality is a discipline too.

Questions that I ask to the kid
What is one great virtue a person should have?

No comments:

Post a Comment