கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி

குறள் 745
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் 
நிலைக்கெளிதாம் நீரது அரண்
[பொருட்பால், அரணியல், அரண்]

பொருள் 
கொளற்கு - ஒரு பண்டத்தைக் கொள்ளும் நோக்கம்
அரிதாய் - அரியது, அருமையானது
கொண்ட - உடைய
கூழ்த்து - பொருள், பயிர், பொன், உணவு, மா முதலியவற்றாற் குழையச்சமைத்த உணவுவகை
ஆகி - ஆக்கம்
அகத்தார் - மனை, அஸ்திவாரம். (உறவினர்களை அகத்தார் என்று கூறுவர்) (புறத்தாருக்கு / வேற்று மனிதர்களுக்கு எதிர்சொல்)
நிலைக்கு - குணம்
எளிது - எளியது; இலேசு; சுலபம்; அருமையற்றது; இலகு; தாழ்ந்தது
ஆம் - அழகு
நீரது - நிலை
அரண் - கவசம், கோட்டை

முழுப்பொருள்
உணவு என்பது மக்களுக்கு இன்றியமையாததாகும். ஆதலால் அதன் கையிறுப்பு மிக மிக அவசியம். எல்லா ஆண்டுகளும் மழை செழிப்பாக இருக்கும் என்று சொல்ல இயலாது. சில ஆண்டுகள் வறட்சி நிலவக்கூடும். அத்தகைய நிலைகளில் வேறு எவரையும் நம்பி இருக்கக்கூடாது. வறட்சி காலகட்டதிற்கும் ஆயுத்தமாக இருக்க வேண்டும். நாட்டுமக்கள் பசி பட்டினியால் வாடக்கூடாது.

அத்தகைய வறட்சிகாலகட்டங்களில் வெளியில் இருந்து வந்து போரிட்டு உணவை களவாட முனைவர் புறவோர். உணவை எளிதாய் கண்டரிய முடியாத கோட்டையை உடையதே சிறந்தது. ஆதலால் உணவை பாதுகாப்பதும் அரண் என்னும் இலக்கணத்தில் அடங்கும். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”ஒன்றே சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே
நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து
திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே” (புறநா.109:4-8)

“பற்பல தானியத்த தாகிப் பலருடையும்
மெய்த்துணையும் சேரல் இனிது” (இனியவை.18)

பரிமேலழகர் உரை 
கொளற்கு அரிதாய் - புறத்தாரால் கோடற்கு அரிதாய்; கொண்ட கூழ்த்து ஆகி - உட்கொண்ட பலவகை உணவிற்றாய்; அகத்தார் நிலைக்கு எளிதாம் நீரது அரண் - அகத்தாரது போர்நிலைக்கு எளிதாய நீர்மையையுடையதே அரணாவது. (கோடற்கு அருமை: இளை கிடங்குகளானும், பொறிகளானும் இடங்கொள்ளுதற்கு அருமை. உணவு தலைமைபற்றிக் கூறினமையின், மற்றுள்ள நுகரப்படுவனவும் அடங்கின. நிலைக்கு எளிதாம் நீர்மையாவது, அகத்தார் விட்ட ஆயுதம் முதலிய புறத்தார்மேல் எளிதில் சேறலும் அவர் விட்டன அகத்தார்மேல் செல்லாமையும், பதணப்பரப்பும் முதலாயின.)

மணக்குடவர் உரை 
பகைவரால் கொள்ளுதற்கு அரிதாய்த் தன்னகத்தே அமைக்கப்பட்ட உணவையும் உடைத்தாய் அகத்துறைவார்க்கு நிற்றற்கு எளிதாகும் நீரையுடைத்தாயிருப்பது அரணாவது.
எனவே, புறத்தார்க்கு நிற்றற்கரிதாகும் நீரையுடைத்தாதலும் வேண்டுமென்றவாறாயிற்று; தூரத்தில் நீரைப் பிறரறியாமல் உள்ளே புகுதவிடுதலும் வேண்டும் என்பதாம்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கொளற்கு அரிதாய்-உழிஞையாராற் கைப்பற்றுவதற்கு அரிதாய்; கொண்ட கூழ்த்து ஆகி- உள்ளிருப்பார்க்கு வேண்டிய பலவகை நுகர்ச்சிப் பொருள்களையும் உடையதாய்; அகத்தார் நிலைக்கு எளிது ஆம் நீரது-நொச்சிமறவனின் போர் நிலைக்கு எளிதான நிலைமையுடையதே; அரண்-சிறந்த கோட்டையரணாவது.

உழிஞையாராவார் உழிஞை மாலைசூடி நகரை முற்றுகையிடும் பகைவரான புறத்தார். நொச்சியாராவார் நொச்சிமாலைசூடி முற்றுகையிடப்பட்ட நகரைக் காக்கும் மறவரான அகத்தார். கொளற்கருமை, மரமடர்ந்த காவற்காட்டாலும் ஆழ்ந்து முதலைகள் பல கொண்ட அகழியாலும் அணுகுதற்கரிய மதிற்பொறிகளாலும் நேர்வதாம். கூழ் என்றது உணவும் நுகர்ச்சிப்பொருளும் செல்வமுமாகிய பல்வேறு பயன்பாட்டுப் பொருள்களை. நிலைக்கெளிய நீர்மையாவது, நொச்சியார் விடுத்த படைக்கலங்கள் உழிஞையாரை எளிதாய்த் தாக்குமாறும் உழிஞையார் விடுத்தவை நொச்சியாரைத் தாக்கா வாறும், மதிலுயர்வும் மறைவிடங்களும் பதணப் பரப்பு முடைமை. பதணம் மதிலின் மேற்றளம் அல்லது மதிலுண்மேடை.

மு.வ உரை
பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.

சாலமன் பாப்பையா உரை
பலநாள் முற்றுகையிட்டாலும் பகைவரால் கைப்பற்ற முடியாதது ஆகி, உள்ளிருப்பார்க்கு வேண்டிய உணவையும் உடையதாய் உள்ளிருப்போர் போரிட வாய்ப்பாகவும் இருப்பதே அரண்.

No comments:

Post a Comment