இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல்

குறள் 415
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே 
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்
[பொருட்பால், அரசியல், கேள்வி]

பொருள்
இழுக்கல் - வழுக்குகை; வழுக்குநிலம்; தளர்வு; தவறுதல்
உடை - ஆடை; செல்வம்; உடைமை; குடைவேலமரம்:சூரியன்மனைவி.
உழி - இடம்; பக்கம்; ஏழனுருபு; பொழுது; அளவு.  3. A particle of place, a form of the seventh case, ஏழனுருபு. (p.) அவன்வந்துழி. Where he came- நான்நடப்புழி. Where I shall walk- மரபுழியுய்த்து. Conducting (him) with de corum- என்னுழிவா. Come to me.
ஊற்றுக்கோல் - ஊன்றுகோல்
அற்றே - அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.
ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.
உடையார் - உடையவர்கள்

வாய்ச் சொல் - சொல்லும் வாய்ச் சொல்லை கேட்பது (கற்றாலும் கல்லாத போதும்). இங்கே வாய்மையான சொற்கள், சிறப்பு; சிறப்புடையபொருள்

முழுப்பொருள்
வாழ்வில் நன்னடத்தை மூலம் உலகம் ஓம்பிய நெறியினை பின்பற்றி உயர்ச்சி அடைந்த மக்கள் பலர் (சிறு சதவிகிதம் எனிலும் கூட). அத்தகையவர்கள் கூறும் சொல்லானதோ பேச்சுரைகளோ வாழ்க்கையை நல்வழியில் வாழவே பயன்படும். அவர்கள் பலவற்றை கற்று ஆராய்ந்து பின்பற்றியவர்கள். அவர்களிடம் இருக்கும் ஞானம் நாம் கற்கும் கல்வியை விட மேலானதாக இருக்கும் என்று தீர்க்கமாக சொல்ல முடியாவிட்டாலும் அவை நடைமுறைக்கு ஏற்றார் போல் இருக்கும் என்று சொல்ல முடியும். ஆகவே அவற்றை முழு கவனுத்துடன் ஆர்வமுடன் கேட்டு உள்வாங்க வேண்டும். அத்தகைய கேள்விச்செல்வம் மிகுந்த பயனுள்ளது என்று கீழே திருவள்ளுவர் சொல்கிறார்.

ஒருவர் தரையில் நடக்கும் பொழுதோ, மலையில் ஏறும் பொழுதோ வழுக்கி விழும் அபாயங்கள் உண்டு.  அத்தகைய அபாய நிலையில் நாம் சிந்தனை செய்ய சில நொடிகள் கூட இருக்காது. நம் கால்களும் கைகளும் ஊன்ற எதையாவது தேடும். அத்தகைய நிலைகளில் ஒரு ஊன்று கோல் கையில் இருந்தால் அவை பயனுள்ளதாக அமைந்து உயிரை காத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். நம் பயணத்தை தொடர முடியும்.

அதுப் போன்று வாழ்வில் சறுக்கும் பொழுது தளரும் பொழுது துன்பங்களை சந்திக்கும் பொழுது சவால்களை சந்திக்க நேரிடும் பொழுது மூத்தோர் ஒழுக்கமுடையோர் சொல் ஊன்று கோல் போல மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

இங்கே கற்றவர் என்றும் கூட கூறியிருக்கலாம். ஆனால் அவர் அப்படி கூறவில்லை. கற்றும் ஒழுக்கம் இல்லை என்றால் என்ன பயன் என்று ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறியுள்ளார். கல்லாதவர் ஆக இருப்பினும் ஒழுக்கம் உடையவர்களே சான்றோர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்று = வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்றுகோல் போல உதவும்; ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் - காவற்சாகாடு உகைப்பார்க்கு ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள். (அவாய்நிலையான் வந்த உவமையடையால் பொருள் அடைவருவிக்கப்பட்டது. ஊற்றாகிய கோல் போல உதவுதல் -தளர்ந்துழி அதனை நீக்குதல். கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார் அறிவிலராகலின், அவர் வாய்ச்சொல் கேட்கப்படாது என்பதுதோன்ற, 'ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்' 'வாய்'என்பது தீச்சொல்அறியாமையாகிய சிறப்புணர நின்றது. 'அவற்றைக் கேட்க' என்பதுகுறிப்பெச்சம்.)

மணக்குடவர் உரை
வழுக்குத லுண்டான விடத்து உதவும் ஊன்றுகோல் போலும்: ஒழுக்கமுடையார் கூறுஞ் சொற்கள்.

இது கேட்பது ஒழுக்கமுடையார்மாட்டென்பது கூறிற்று.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் - ஒழுக்க முடைய பெரியோர் வாய்ச் சொற்கள்; இழுக்கல் உடைஉழி ஊற்றுக்கோல் அற்றே -வழுக்கும் சேற்று நிலத்தில் நடப்பார்க்கு ஊன்றுகோல் உதவுவது போல, உலகில் வாழ்க்கை நடத்துவோர்க்கும் ஆட்சிசெய்வோர்க்கும் துன்பக்காலத்தில் உதவுந் தன்மையவே.

ஒழுக்கமில்லாதார் கல்வியுடையாரேனும் அன்பில ராதலின். அவர்வாய்ச்சொல் பயன்படாதென்பதுதோன்ற, 'ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்' என்றார். வாய் என்றது தீச்சொல் வந்தறியாமை யுணர்த்தி நின்றது. இனி, வாய்ச்சொல் என்பது தப்பாது பயன்படும் வாய்மைச்சொல் எனினுமாம். ஏ கா ர ம் தேற்றம்.

முந்தின குறளிற் பொதுப்படக் குறிக்கப்பட்ட கேள்வியறிவைப் பெறுமிடம் இங்கு வரையறுக்கப்பட்டது.

மு.வ உரை
கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.

சாலமன் பாப்பையா உரை
கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.

வழுக்குகிற நிலத்தில் ஊன்றுகோல் போல ,நம்மை சான்றோரின் சொற்கள் தாங்கிப் பிடிக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

“இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்”.

அந்த வரிகள் நினைவின் அடுக்குகளிலிருந்து வருபவையல்ல..ஆகாயத்தின் அடுக்குகளிலிருந்து அனுப்பப்படுபவை

நன்றி: ரிஷ்வன்
ஒழுக்கம் உடைய கற்றவரின் நற்சொல்
வழுக்கும் நிலத்தில் ஊன்று கோலாய்
தடுத்து நிறுத்தி துன்பத்தைப் போக்கும்.

No comments:

Post a Comment