ஓஒ இனிதே எமக்கிந்நோய்

குறள் 1176
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் 
தாஅம் இதற்பட் டது
[காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல்]

பொருள்
- பதினோராம்உயிரெழுத்து; வினாவெழுத்து; விளரிஎன்னும்இசையின்எழுத்து; நீக்கம்; ஒழிவு; சென்றுதங்குகை; மதகுநீர்தாங்கும்பலகை; உயர்வுஇழிவுசிறப்புக்குறிப்பு; மகிழ்ச்சிக்குறிப்பு; வியப்புக்குறிப்பு; தெரிதல்குறிப்பு; நினைவுக்குறிப்பு; கொன்றை; பிரமன்; ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை; பிரிநிலை, ஐயம், அசைநிலைஇவற்றைக்காட்டும்ஓர்இடைச்சொல்.

- பத்தாம்உயிரெழுத்து; ஒவ்வுஎன்பதன்பகுதி; ஐம்பறவைகளுள்மயிலைக்குறிக்கும்எழுத்து

ஓஒ! -  அதிசயக்குறிப்பு, வியப்புக்குறிப்பு
இனிதே!- மகிழ்ச்சியானதே, இனிமையானதே, விருப்பத்திற்கானதே, நன்றானதே
எமக்கு
இந் நோய் - இந்த நோய்
செய்த - செய்து கொடுத்த
கண் - இந்த கண்களும்
தாம் இதற்பட்டது -  உறங்காமல் அழுதுக் கொண்ட இருக்கும் 

முழுப்பொருள்
தலைவி கூறுகிறாள் தலைவனின் பிரிவால் நான் வாடுகிறேன். துன்ப படுகிறேன். இல்லை இல்லை. அவரை காண முடியாமல் நான் துன்ப படுகிறேன். என்னால் நிம்மதியாக உறங்க முடியவில்லை

அடடே!! இந்த கண்களும் உறங்கவில்லை. நன்றாய் வேண்டும் இதற்கு. நான் காதல் வயப்பட முதற்காரணம் என் கண்களே. எனக்கு என் தலைவனை காட்டியவை கண்களே. தலைவனின் முகத்தை என் மனதில் ஆழ பதித்தவை என் கண்கள். ஆழ பதித்ததனால் கண்கள் மூடினாலும் அவரே கண் முன் வருகிறார். உறக்கம் இல்லை. இப்படி எனக்கு துன்பமே கடைசியில்.... ஆனால் இதிலும் ஒரு ஆறுதலும் மகிழ்ச்சியும்.  என்னை இந்நிலைக்கு ஆழ்த்திய இந்த கண்களும் உறக்கம் கொள்ளாமல் என்னை போன்றே தவிக்கிறதே. மகிழ்ச்சி மகிழ்ச்சி!!

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) எமக்கு இந்நோய் செய்த கண் தாம் இதன் பட்டது- எமக்கு அக் காமநோயினைச் செய்த கண்கள் தாமும் இத்துயிலாது அழுதற் கண்ணே பட்டது; ஓஒ இனிதே - மிகவும் இனிதாயிற்று. ('ஓ' என்பது மிகுதிப் பொருட்கண் வந்த குறிப்புச்சொல். 'தம்மால் வருத்தமுற்ற எமக்கு அது தீர்ந்தாற்போன்றது' என்பதாம்)

மணக்குடவர் உரை
எமக்கு இந்நோயைச் செய்த கண்கள் தாமும் இந்நோயகத்துப்பட்டது மிகவும் இனிது.

இது நின்கண் கலங்கிற்று; அஃதெனக்கு இன்னாதாயிற்று என்ற தோழிக்கு அது மிகவும் இனிதென்று தலைமகள் கூறியது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(இதுவுமது)

எமக்கு இந்நோய் செய்தகண் தாம் இதற்பட்டது-எமக்கு இக்காமநோயை வருவித்த கண்கள் தாமும் இத்துன்பத்துள் அகப்பட்டுக் கொண்டது; ஒ ஒ இனிதே-மிகவும் இனிதாவதே.

துன்பமென்றது தூங்கா தழுதலை.எம்மைத் துன்புறுத்தினார் துன்புறுவது. எம் துன்பந் தீர்ந்தாற் போல்வதென்பதாம். 'ஓ' மிகுதிப்பொருட் குறிப்புச்சொல். 'ஓ ஒ' 'தா அம்' இசைநிறையளபெடைகள். ஏகாரம்தேற்றம்

மு.வ உரை
எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!

சாலமன் பாப்பையா உரை
எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
காதலனைப் பிரிந்து வெந்தாள் மங்கை நல்லாள்
கண்ணுறக்கம் கொள்ளவில்லை கண்ணீர் வேறு
சாதலுக்கு வழி உண்டா என்றால் அவன்
சரியாக மனத்துக்குள் அமர்ந்துளானே
பேதலித்துப் போன பெண்ணாள் பேசுகின்றாள்
பிரிவில் அழும் கண்களினைப் பார்த்து பார்த்து
நீர் தந்த நோய் தானே அவரைப் பார்த்து
நீர் வழிய அழுங்கள் எனக்கு இனிமை ஈது

காரணமான கண்களே ......!!! (நன்றி கவிப்புயல் இனியவன்)
பூக்கள்
வாடுவதுபோல் ...
என் கண்களும் வாடுகின்றன ...
என் காதல் நோய்க்கு
காரணமான கண்களே ......!!!

நான்
வாடுவதுபோல் ..
என் கண்களும் வாடுகின்றன ...
ஒருவகையில் எனக்கு
இன்பம் தான் - என்னை வாட
வைத்த கண்கள் வாடுவதால் ...!!!

No comments:

Post a Comment