பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்

குறள் 521
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் 
சுற்றத்தார் கண்ணே உள
[பொருட்பால், அரசியல்,சுற்றந்தழால்]

பொருள்
பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை.

அற்ற - அல்லாத, அல்லாமல்

கண்ணும் - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

பழைமை தொன்மை; தொன்மையானது; வழங்காதொழிந்தது; சாரமின்மை; முதுமொழி; நெடுநாட்பழக்கம்; பழங்கதை; மரபு; நாட்பட்டதால்ஏற்படும்சிதைவு.

பாராட்டுதல் - புகழ்தல்; அன்புகாட்டுதல்; பெருமிதம்உரைத்தல்; கொண்டாடுதல்; பலகாலம்சொல்லுதல்; விரித்துரைத்தல்; மனத்தில்வைத்தல்.

சுற்றத்தார் - உறவினர்; இனத்தார்; துணைவர்; பரிவாரம்

கண்ணே - கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

உள - உள்ள, உள்ளல், உள்கல், உள்குதல், நினை, எண்ணு, மதி

உள - உள்ளது, யாது அனைத்தையும் உண்டாக்க வேண்டும் என்று இருந்தால்

முழுப்பொருள்
ஒருவன் தன செல்வம் அனைத்தையும் இழந்து, வளம் குன்றி,பற்றற்ற நிலையில் உள்ள பொழுதும், அவனை விட்டு விலகி விடாமல், அவனிடம் கொண்ட பழைய உறவை பாராட்டி கொண்டாடி மகிழ்வது அவனது சுற்றத்தார் இடத்தில் உள்ளது என உரைக்கிறார் வள்ளுவர். அரசியல் இயலில் இக்குறளை வைத்துள்ளதனால், ஒரு அரசனோ அரசோ, எந்நிலையிலும் விலகாமல் பழைய நட்பு பெருமை பாராட்டும் வகையில் உள்ள சுற்றத்தாரை கொண்டதாக இருக்க வேண்டும் எனக் கருதலாம்.
  
மேலும்:
நன்றி: அசோக் 
ஔவையாரின் மூதுரையில், சுற்றத்தைப் பற்றி கூறும்போது, அற்ற குளத்தில் அறு நீர்ப்பறவை போன்றவர்கள் அல்லர் உண்மையான சுற்றம் என்பார். அந்த முழுப்பாடலும், அதனுடைய விளக்கமும்.
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வா ருறவல்லர் – அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு.
நீர் வற்றியதும், குளத்திலிருந்து நீங்கிவிடும் நீரில் வாழும் பறவைகளைப் போல துன்பம் வந்த போது நீங்கி விடுபவர்கள் சுற்றத்தார் ஆக மாட்டார்கள். அந்தக் குளத்திலுள்ள கொட்டிப்பூண்டையும், அல்லிக்கொடியையும், குவளைக் கொடியையும் போன்றவர்களாக சேர்ந்து, (நீர் ஏற உயர்ந்தும், நீர் குறையத் தாழ்ந்தும் இருத்தல் போல) இன்பத்தையும் துன்பத்தையும் ஏற்றுக் கொள்பவர்களே நல்ல சுற்றத்தவர் ஆவார்கள்.
நல்ல சுற்றம் எத்தகையது என்று சொல்லும் ஔவை, மற்றொன்றையும் சுற்றம் பற்றி கூறுவது கவனிக்கத் தக்கது.
“உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி “
சுற்றமும் பல நேரங்களில் உடனிருந்து கொல்லும் வியாதிபோன்றதாகையால், அவரிடத்தும் கவனமும் எச்சரிக்கையும் தேவையென்று உணர்த்துகிற பாடலும் மூதுரைப் பாடல்தான்.
ஒப்புமை
1) “காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனிற் பலராவர் - ஏலா
இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட
தொடர்புடையேம் என்பார் சிலர்” (நாலடி.113)

2) அல்லல் ஒருவர்க் கடைந்தக்கால் மற்ற்வர்க்கு
நல்ல கிளைகள் எனப்படுவார் - நல்ல
வினைமரபின் மற்றதனை நீக்கும் அதுவே
மனைமர மாய மருந்து (பழமொழி 53)

3) முன்னின்னா ராயினும் மூடும் இடர்வந்தால்
பின்னின்னா ராகிப் பிரியார் ஒருகுடியார் (பழமொழி 66)
பரிமேலழகர் உரை
பற்று அற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் - ஒருவன் செல்வம் தொலைந்து வறியனாய வழியும் விடாது தம்மோடு அவனிடைப் பழைமையை எடுத்துக் கொண்டாடும் இயல்புகள், சுற்றத்தார்கண்ணே உள - சுற்றத்தார்மாட்டே உள ஆவன.
(சிறப்பு உம்மை வறியனாயவழிப் பாராட்டப்படாமை விளக்கி நின்றது. பழைமை : பற்றறாக் காலத்துத் தமக்குச் செய்த உபகாரம். பிறரெல்லாம் அவன் பற்றற்ற பொழுதே தாமும் அவனோடு பற்றறுவர் ஆகலின்,ஏகாரம் தேற்றத்தின்கண்ணே வந்தது. இதனான் சுற்றத்தது சிறப்புக் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
பொருளற்ற கண்ணும் பழைமையைக் கொண்டாடி விடாதொழுகுதல் சுற்றத்தார்மாட்டே யுளவாம்.  இஃது இல்லாக் காலத்தினும் விடாரென்றது.
மு.வரதராசனார் உரை
ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.
சாலமன் பாப்பையா உரை
ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.

No comments:

Post a Comment