தாமின் புறுவது உலகின்

குறள் 399
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு 
காமுறுவர் கற்றறிந் தார்.
[பொருட்பால், அரசியல், கல்வி]

பொருள்
தாம் - தனக்கு ; அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை.

இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை.

இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.

இன்புறல் -  v. noun. Enjoying plea sure, being happy, rejoicing, experiencing, delight, being satisfied, மகிழ்ச்சிபொ ருந்தல்.

இன்புறவது - இன்பம் தருகிற ஒன்றை

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

இன் - இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை

புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்.

கண்டு - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

உலகு + இன்புறக்கண்டு - பகிரும் பொழுது உலகில் உள்ளவர்களுக்கும் இன்பம் தருவதை கண்டு 

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்.
காமுறுவர்  - விரும்புதல்; வேண்டிக்கொள்ளுதல்.

காமுறுவர் - காமுறு - காமம் + உறு - விரும்புதல், வேண்டிக்கொள்ளுதல்

கற்று - கற்கை - படித்தல்; பயிலுதல்

அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

கற்றறிந் தார் - கற்றதனால் வரும் சிறப்பை/இன்பத்தை அறிந்தவர்கள்

முழுப்பொருள்
கற்றறிந்தார் எனப்படுபவர் நூல் பலவற்றை கற்று, அதனின் மெய்ப்பொருள் கண்டவர். தான் அறிந்ததனால் தான் பெற்ற பயன்களை அவர் நன்கு அறிவார்.
"அறிவதொவ்வொண்றும் அறியாமையையே" (நன்றி: ஜெயமோகன்) என்பது போல், கற்பதனால் வரும் முதல் பயன் அறியாமை நீங்கி தெளிவு. அவர் அறிந்ததனால் பிறருக்கு நன்மை செய்து அவர்கள் இன்பம் கொள்வதை கண்டவர். உதாரணமாக ஒரு அரசன் நெறி நூல்கள் பலவற்றை கற்று மக்களுக்கு நல்லூழ் செய்ய விழைகிறவன்.

ஆதலால் தானும் இன்பம்/நன்மை பெற்று மற்றவரும் இன்பம்/நன்மை கொள்கிறப் பொழுது அதனில் லயிப்பு வருவது இயல்பே. கரும்பு தின்ன கூலி வேண்டுமா ? அதைப்போல் கற்றறிந்தவர் மேலும் கற்கவே விழைவார் என்கிறது இக்குறள்.

உதாரணமாக - ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தர நாளும் புது புது மேம்பாடுகளை கற்று தங்கள் அறிவை உயர்த்திக்கொள்வார்கள், (இன்றைய காலகட்டங்களில்) மக்களவை உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர்கள், அதிகாரிகள் (Policy Makers) நூல்பலவற்றை கற்றும், உலகலில் செயலாற்றப்படும் நல்ல திட்டங்களை கற்று மக்களுக்கு நன்மை பயவிக்கும் கொள்கைகளையும் செயல்திட்டங்களையும் வரையறை செய்வார்கள். அப்படி மக்கள் நன்மை பெருவதை கண்டு இன்புற்று மேலும் பல நல்ல செயல்திட்டங்களில் முனைய மேலும் பலவற்றை கற்கவே முனைவர். 

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்” என்கிறது மூதுரை

மேலும் அஷோக்

உதாரணம் (நன்றி: தனமணி)
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந்தார்- என்ற குறளின் மூலம் கல்வியறிவு பெற்ற ஒவ்வொருவரும் தனது மகிழ்ச்சிக்கு காரணமான கல்வி, உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதைக் கண்டு மென்மேலும் அந்தக் கல்வி அறிவினை மேம்படுத்திக் கொள்ளவே விரும்புவர் என்று கருத்தினை வழங்கினார் வள்ளுவர். அவர் வழங்கிய கருத்துக்கேற்ப டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் தான் கற்ற கல்வியை அனைவரும் பெற்று வாழ்வில் உயர்ந்து மகிழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறந்த முன் உதாரணமாக விளங்கும் வகையில் நல்லாசிரியராகப் பணியாற்றி சிறந்த சமுதாயத்தினை உருவாக்கிடப் பாடுபட்டார்.

பரிமேலழகர் உரை
தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு - தாம் இன்புறுதற்கு ஏதுவாகிய கல்விக்கு உலகம் இன்புறுதலால் அச்சிறப்பு நோக்கி; கற்றறிந்தார் காமுறுவர் - கற்றறிந்தார் பின்னும் அதனையே விரும்புவர். 

விளக்கம் 
(தாம் இன்புறுதலானது, நிகழ்வின் கண் சொற்பொருள்களின் சுவை நுகர்வானும், புகழ் பொருள் பூசை பெறுதலானும், எதிர்வின்கண் அறம் வீடு பயத்தலானும், அதனான் இடையறாத இன்பம் எய்துதல். உலகு இன்புறுதலாவது: 'இம்மிக்காரோடு தலைப்பெய்து அறியாதன எல்லாம் அறியப்பெற்றோம்' என்றும், "யாண்டு பலவாக நரையில் மாயினேம்" (புறநா. 191) என்றும் உவத்தல். செல்வமாயின், ஈட்டல் காத்தல் இழத்தல் என்ற இவற்றான் துன்புறுதலும், பலரையும் பகையாக்கலும் உடைத்து என அறிந்து, அதனைக் காமுறாமையின் 'கற்றறிந்தார்' என்றும், கரும்பு அயிறற்குக் கூலிபோலத் தாம் இன்புறுதற்கு உலகு இன்புறுதல் பிறவாற்றான் இன்மையின் அதனையே காமுறுவர் என்றும் கூறினார்.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கற்று அறிந்தார் - சிறந்த நூல்களைக் கற்று அவற்றின் பொருளைச் செவ்வையாக அறிந்தவர்; தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு - தம் கல்வியால் தாம் இன்புறுவதொடு உலகமும் இன்புறுவது கண்டு; காமுறுவர்-மேன்மேலுங் கற்கவும் கற்பிக்கவும் விரும்புவர்.

தாமின்புறுதலாவது, நூல்களின் சொற்சுவை பொருட்சுவைகளாலும், தாம் இம்மையிற்பெறும் புகழ் பொருள் போற்றுதலாலும், மறுமையிற்பெறும் நற்பத நம்பிக்கையாலும், இடையறாது மகிழ்தல். உலகின்புறுதலாவது, இன்று செவிக்கினிய சிறந்த விருந்துண்டோ மென்றும், அறியாதபல அரும்பொருள்கள் எளிதாயறிந்தோம் என்றும், இத்தகைய சொற்பொழிவு கேட்டது எம் தவப்பேறேயென்றும், இன்னுஞ் சிலமுறை கேட்பின் யாமும் புலவராய் விடுவேமென்றும், பாராட்டி மகிழ்தல். தாமின்புறுவதை உலகுமின்புற்றுப் போற்றுவது, கரும்பு தின்னக்கைக்கூலி கொடுத்தாற்போன்று ஊக்குவதால் மேலுங் காமுறுவர் என்றார்.

இனி, இக்குறளை, கற்றறிந்தார் தாம் இன்புறுவது கண்டு உலகு.இன்புறக் காமுறுவர் என்று, கொண்டு கூட்டுப் பொருள்கோள் நடையாக மாற்றின், கண்டு என்னுஞ் சொல்லொடு பொருந்தாமையால், அது ஆசிரியர் கருத்தன்றென விடுக்க.

மு.வரதராசனார் உரை
தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.

சாலமன் பாப்பையா உரை
தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்.

நன்றி ரிஷ்வன்
தான் பெறும் கற்றறிவு
தனக் கின்பம் தருவதுடன்
ஊர் உலகிற்கும் தருவதால்
மேலும் கற்கவே விரும்புவர்
நாலும் அறிந்த அறிஞர்கள்.

No comments:

Post a Comment