விருந்து புறத்ததாத் தானுண்டல்

குறள் 82
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா 
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
[அறத்துப்பால், இல்லறவியல், விருந்தோம்பல் ]

பொருள்
விருந்து புதியராய் வருபவரை உணவளித்துப் போற்றுதல்; 

புறம் - வெளியிடம்; அன்னியம்; காண்க:புறத்திணை; புறக்கொடை; புறநானூறு; வீரம்; பக்கம்; முதுகு; பின்புறம்; புறங்கூற்று; அலர்மொழி; ஒருசார்பு; இடம்; இறையிலிநிலம்; ஏழனுருபுள்ஒன்று; திசை; காலம்; உடம்பு; மருதநிலத்தூர்; மதில்.

புறத்ததாத் தானுண்டல் சாவா 
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

புறத்து - தனியாக ,விலகி 

தான் படர்க்கைஒருமைப்பெயர்; தேற்றச்சொல்; அசைச்சொல்; முழுப்புடைவை; குழம்பில்போடப்படும்காய்கறித்துண்டம்; 'அதுவின்றிஇஃதுஒன்று'என்றுபொருள்படுவதோர்இடைச்சொல்.

உண்ணுதல் - உணவுஉட்கொள்ளுதல்; பொருந்துதல் நுகருதல்; அனுபவித்தல் இசைவாதல்.

சாவு - இறப்பு, பிசாசம்.

மருந்து - அமுதம்; ஔடதம்; பரிகாரம்; வசியமருந்து; சோறு; குடிதண்ணீர்; இனிமை; வெடிமருந்து; முள்ளுக்கடம்பு; புதற்புல்என்னும்புல்வகை

சாவா மருந்து - சாவில் இருந்து காப்பாற்ற கூடிய மருந்து 

பாற்று - உரியது.

பா - ஓர்உயிர்மெய்யெழுத்து(ப்+ஆ); பாட்டு; பரப்பு; தேர்த்தட்டு; கைம்மரம்; நெசவுப்பா; பஞ்சிநூல்; நிழல்; கடிகாரவூசி; காப்பு; பருகுதல்; தூய்மை; அழகு; பாம்பு; பூனைக்காலிக்கொடி.

பாற்றன்று  - உரியது அன்று; அழகு அல்ல;

முழுப்பொருள்
நம்மை நோக்கி வந்த விருந்தினர் புறத்தே அதாவது வெளியே இருக்கும் பொழுது, சாவில் இருந்து காப்பாற்றக் கூடிய மருந்தே ஆகினும், தனியே நாம் உண்பது, விரும்பத்தக்க செயலுக்கு உரியது இல்லை.

விருந்தினர் உண்ணாமல் நாம் மட்டும் தனியே எதனையும் உண்ணக் கூடாது என்றும் அவ்வாறு உண்பது இழிவான செயல் என்றும் உரைக்கிறார் வள்ளுவர் .

விருந்தோம்பல் என்பது அழகிய, என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு குறள். என் நண்பன் ஒருவனிடம் ஒரு முறை, உன் மனைவியிடம் என்ன எதிர்பார்க்கிறாய் என்று கேட்ட பொழுது சற்றும் தாமதிக்காமல் "விருந்தோம்பல்" பண்பு வேண்டும் என்றான். இந்த வித்யாசமான பதிலை கேட்டு நான் சிறிது திகைப்படைந்த பொழுது அவன் விளக்கமாக, ஒரு இல்லத்தரசியிடம் விருந்தோம்பல் பண்பு உள்ளது என்றால், மற்ற நற்பண்புகள் இயல்பாகவே அமைந்து இருக்கும் என கூறினான். சிந்தித்து பார்த்தால் எவ்வளவு சரியான கருத்து அது என்பது புலப்படும்.  வீட்டிற்கு யார் வந்தாலும் உடனே, அவர்கள் கேட்பதற்கு முன்பாகவே தண்ணீர் அருந்த கொடுப்பதில் இருந்து விருந்தோம்பல் ஆரம்பிக்க வேண்டும். 

மேலும்
இக்குறளுக்கு ஒற்றிய கருத்தை ஔவையாரும், கொன்றைவேந்தன் இல் ,
"மருந்தே யாயினும் விருந்தோ டுண்"என உரைக்கிறார் 

விருந்தோம்பல் என்பது, சங்கத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிக் கலந்தது என்பதை திருக்குறளை தவிர மட்டற்ற இலக்கியங்களிலும் காணலாம்.உதாரணமாக,

கண்ணகி கோவலனை விட்டுப் பிரிந்த நிலையில்
"அறவோர் களித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை (சிலம்பு)"

எனக் கூறி வருந்துகின்றாள்.இளங்கோவடிகள் 'தொல்லோர் சிறப்பின்' என்று விருந்துக்கு அடை கொடுத்துக் கூறியதால் தமிழரின் தொன்மையான பழக்க வழக்கம் என்பதும் ,முன்னோர் வகுத்த முறைப்படி விருந்தல் வேண்டும் என்பதும் புலனாம்.

இராமனைப் பிரிந்த சீதை விருந்தினர் வந்தால்,அவர்களை ஓம்ப இயலா நிலையை எண்ணி இராமன் என்ன துன்பம் அடைவானோ எனக் கலக்கமுறுகிறாள்

'விருந்து கண்டபோது என்னுறுமோ என விம்மும்' 
என்பது கம்பர் கூற்று விருந்திற்கான காரணம்.

இக் காலத்தில் மகளிர் விருந்தினரை வரவேற்று ஓம்புதலைப் பாவேந்தர் பாரதிதாசனும்

பொன்துலங்கு மேனி
புதுமெருகு கொள்ள மேனி
அன்றலர்ந்த செந்தா
மரையாக-நன்றே
வரவேற்பாள்' (குடும்ப விளக்கு)

விருந்தோம்பலின் சிறப்பு என்று கூறுகிறார் .

நன்றி:geotamil

”ஒப்புமை”
“அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே” (புறநா 182:2-3)
“மருந்தே யாயினும் விருந்தோ டுண்க” (கொன்றைவேந்தன்)

பரிமேலழகர் உரை
சாவா மருந்து எனினும் - உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும் ; விருந்து புறத்ததாத் தானுண்டல் - தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல்; வேண்டற்பாற்று அன்று - விரும்புதல் முறைமையுடைத்து அன்று.(சாவா மருந்து : சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. 'விருந்து இன்றியே ஒருகால் தான் உண்டலைச் சாவா மருந்து என்பார் உளராயினும் அதனை ஒழிக' என்று உரைப்பினும் அமையும். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பலின் சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
விருந்தினர் இற்புறத்தாராகத் தானே யுண்டல், சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் வேண்டும் பகுதி யுடைத்தன்று.

மு.வரதராசனார் உரை
விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.

சாலமன் பாப்பையா உரை
விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
அமுதமே ஆயினும் விருந்தாளிக்குத் தராமல் உண்ணாதே.

பொருள்: சாவா மருந்து என்னினும்‡ சாவாமைக்குக் காரணமாகிய அமிழ்தம் என்னினும், விருந்து புறத்து ஆக தான் (அகத்து) உண்டல் ‡ விருந்தினர் புறத்திருக்கத் தான்அகத்து உண்டல், வேண்டல் பாற்று அன்று‡ விரும்பற் பான்மைத்து அன்று.

அகலம்: சாவாமைக்குக் காரணமாகிய மருந்தினைச் சாவா மருந் தென்றார். அகத்து என்பது அவாய் நிலையான் வந்தது. பால்+து= பாற்று. பான்மைத்து ‡ தன்மைத்து. தருமர் பாடம் ‘புறத்ததாய்’. மற்றை நால்வர் பாடம் ‘புறத்ததா’. மணக்குடவர் பாடம் ‘வேண்டும்பாற் றன்று’. தாமத்தர் பாடம் ‘தானுண்ணல்’. ‘புறத்ததா’ என்னும் பாடத்தைக் கொள்ளுங்கால், ‘புறத்ததாக’ என்பது செய்யுள் விகாரத்தால் ஈறு கெட்டு நின்ற தெனக் கொள்ள வேண்டிய திருத்தலானும், ‘புறத்தது’ என்னும் வினையாலணையும் பெயர் ஈண்டு வேண்டாததும் பொருத்த மற்றது மானபடியாலும், ‘விருந்து புறத்திருக்க’ என்னும் நேரிய பொருளைத் தரும் ‘புறத்தாக’ என்பதே ஆசிரியர் பாடமெனவும், ‘புறத்ததா’ என்பது ஏடு பெயர்த் தெழுதியோனால் நேர்ந்த பிழை எனவும் கொள்க.

கருத்து: விருந்தினரை வீட்டின் வெளியே வைத்துவிட்டுத் தாம் வீட்டினுள் உண்டல் விரும்பத் தக்க தன்று.

No comments:

Post a Comment