ஐயப் படாஅது அகத்தது

குறள் 702
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் 
தெய்வத்தோ டொப்பக் கொளல்
[பொருட்பால், அமைச்சியல், குறிப்பறிதல்]

பொருள்
ஐயப் - ஐயம் - சந்தேகம்; அகப்பொருள்துறைகளுள்ஒன்று, ஐயக்காட்சி; ஐயவணி; இரப்போர்கலம்; பிச்சை; சிலேட்டுமம்; சிறுபொழுது; குற்றம்; மோர்.

படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; உதித்தல்; நிகழ்தல்; மனத்தில்தோற்றுதல்; பூத்தல்; ஒன்றன்மீதுஒன்றுஉறுதல்; மொய்த்தல்; அகப்படுதல்; புகுதல்; பெய்தல்; பெரிதாதல்; மேன்மையடைதல்; அழிதல்; சாதல்; மறைதல்; புண்காய்தல்; சாய்தல்; வாடுதல்; துன்பமடைதல்; தொங்குதல்; ஒலித்தல்; பாய்தல்; புதைக்கப்படுதல்; உடன்படுதல்; ஒத்தல்; பொறுத்தல்; முட்டுதல்.
படாஅ - படா - paṭā   adj. U. barā. Large, great;பெரிய

படாஅது

அகத்து - அகம் - அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

அது - அது

உணர்வானைத் - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

தெய்வத்தோடு - தெய்வம் -

ஒப்ப - ஒப்பு - பொருத்தம்; ஒருதன்மை; ஒப்புமை; உவமை; தகுதி; சமம்; இசைவு; அழகு; கவனம்; ஒப்பாரி; சாயல்; உடன்படுகை.

கொளல் - அதன் (செயலின்) மூலமாக அறிய வேண்டும்.

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
உடலோ பல அணுக்களால் கட்டப்பட்ட ஒரு தோற்றம். அணுவோ எல்லாம் வல்ல அருட்பேராற்றலின் நுண்ணிய சுழலலை. அணுவினால் கட்டப்பட்ட ஒரு தோற்றம் இந்த உடல். உடலுக்குள் அந்த நுண்ணியப் பொருளாக உள்ள அணுவோ உயிர். அணு திரட்சியில் உடலாகவும் இருக்கிறது. அதன் திணிவு இயக்க நிலையில் உயிராகவும் இருக்கிறது. உயிருக்கு மத்தியில் தொடங்கி பேரியக்க மண்டலம் முழுவதும் விரிந்து எல்லையற்ற விரிவு உடைய ஒரு அரூப நிலையே அறிவு.

நீ உன் உடலை நினைத்துப் பார். நீ புலன்கள் வரையில் உன்னை எல்லை கட்டிக் கொண்டு உடலே "நான்" என்று எண்ணுகிறாய். உடலில் உள்ள உயிரை நினைந்து பார். உலகிலுள்ள எல்லா உயிர்களோடும் பேரியக்க மண்டலத்தில் ஆற்றல்களமாக நிறைந்துள்ள பரமாணு மண்டலத்தோடும் ஒன்றுபட்டிருக்கிறாய். இந்த நினைவில் நீ ஆன்மாவாய் பேரியக்க மண்டலம் முழுவதும் பரவியுள்ள சக்தியாக உணர்கிறாய்.

அதற்கும் மேலாக நுணுகி நின்று உன் அறிவை நோக்கு. உயிராற்றலின் மையத்தில் தொடங்கி, உடலிலே பரவி பேரியக்க மண்டலம் முழுவதும் பரவி அதற்கு அப்பாலும் உள்ள பிரம்ம நிலையாய் சுத்தவெளியாய் உள்ளதை உணர்வாய். உனது அறிவின் உண்மை நிலையை உணர்ந்த பின் உனது அறிவின் விரிவே அன்பாக மலர்ந்து உயிர்கட்கு உதவி செய்து, உயிர்த்துன்பம் போக்கவும் எந்த உயிருக்கும் துன்பம தராமல் செயலை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும், என்ற விழிப்பு நிலையும் வந்து விடும். 

இந்த அறிவு நிலையிலேயே உன்னை உடலாகவும், உயிராகவும், அறிவாகவும் உணர்வாய், உனது அறிவு எல்லையற்றது; விரிந்து அரூபமாக உணரும் நிலையில் அறிவே தான் *பிரம்மம்* என்ற உண்மையை உணர்வாய்.

இந்த உள்ளொளியில் தன்முனைப்பு என்ற இருள் மறைந்து விடும். ஒருதலைப் பட்சம், வெறுப்புணர்ச்சி, பொறாமை, கடும்சொல் நீங்கி, நீ உன்னை, உத்தமப் பொருளான இறைவனாகவே காண்பாய், உன் அறிவை அறிந்த பேரறிவால் எந்த ஒன்றையும் குறிப்பால் உணர்ந்து தக்கபடி கடமையாற்ற முடியும். உன்னுடைய நிலையை உனக்கு உட்பொருளாகவுள்ள ஆன்மாவை உணர்ந்து கொண்டால் உடல், உயிர், மனம் என்ற மூன்றையும் அறிந்து கொள்ளும் அறிவு உண்டாகும். அந்த அறிவைக் கொண்டு எவருள்ளத்தும் எழும் எண்ணங்களையும் செயல்களையும் உணர்ந்து தக்கபடி வெற்றியோடு உன் கடமையாற்றலாம். அகம் என்பது ஆன்மாவை குறிப்பதாகும். அது மனிதனுடைய கருமையத்தில், இறைநிலையும் அதன் அளவற்ற ஆற்றலையும் சுருக்கி வைத்திருக்கும் தெய்வீக நிலையம். ஆன்மாவை உணர்ந்தவர் ஆன்மாவில் இயங்கும் அறிவை தெய்வமாகவே உணர்வார். ஆகையால் ஆன்மாவை அதன் இருப்பு இயக்கம் விளைவு இவைகளை சிறிது கூட சந்தேகமின்றி உணர்ந்து கொள்ள வல்லவர் இறைவனாகவே மதிக்கப்படத்தக்கவர் என்று அத்தகைய அறிவின் மதிப்பையும் அதையறிய வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறார் இக்கவியின் மூலம். 


பரிமேலழகர் உரை
அகத்தது ஐயப்படாது உணர்வானை-ஒருவன் மனத்தின்கண் நிகழ்வதனை ஐயப்படாது ஒருதலையாக உணர வல்லானை தெய்வத்தொடு ஒப்பக்கொளல்-மகனேயாயினும், தெய்வத்தொடு ஒப்ப நன்கு மதிக்க. 
விளக்கம் 

(உடம்பு முதலியவற்றான் ஒவ்வானாயினும், பிறர் நினைத்தது உணரும் தெய்வத் தன்மையுடைமையின், 'தெய்வத்தொடு ஒப்ப' என்றார்.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அகத்தது ஐயப்படாது உணர்வானை-ஒருவனது மனத்தின்கண் உள்ளதனை ஒருதலையாக உணரவல்லவனை; தெய்வத்தோடு ஒப்பக் கொளல்- வடிவால் மாந்தனாயினும் மதிநுட்பத்தால் தெய்வம்போன்றவனென்று கருதி,அதற்கேற்ப மதித்துப் போற்றுக.


உணர்தல் உள்ளத்தால் நுணுகியறிதல். மாந்தன் மாந்தனே யாதலின் 'தெய்வமாக' என்னாது 'தெய்வத்தோ டொப்ப' என்றார். 'படாஅ' இசைநிறை யளபெடை.

மணக்குடவர் உரை
பிறர் நினைத்ததனை ஐயப்படுதலின்றித் துணிந்து அறியவல்லாரைத் தேவரோடு ஒப்பக் கொள்க. 

மு.வரதராசனார் உரை
ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை 
அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்.

1 comment:

  1. அருமை அன்பரே
    அற்புதம் அன்பரே
    மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்

    ReplyDelete