தீயவை தீய பயத்தலால்

குறள் 202
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
[அறத்துப்பால்ம, இல்லறவியல், தீவினையச்சம்]

பொருள்
தீயவை – தீயசெயல்; துன்பம்; கீழ்மக்கள்கூட்டம்.

தீய – தீமையான; போலியான

பயத்தலால் பயத்தல் - விளைதல்; உண்டாதல்; பலித்தல்; கிடைத்தல்; படைத்தல்; பெறுதல்; கொடுத்தல்; பூத்தல்; இயற்றுதல்; நிறம்வேறுபடுதல்; அச்சமுறுதல்.

தீயவை – தீயசெயல்; துன்பம்; கீழ்மக்கள்கூட்டம்.

தீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஈ); பஞ்சபூதத்துள்ஒன்றாகியநெருப்பு; வேள்வித்தீ; கோபம்; அறிவு; தீமை; நஞ்சு; நரகம்; விளக்கு; உணவைச்செரிக்கச்செய்யும்வயிற்றுத்தீ; வழிவகை.

தீயினும் – சுட்டு பொசுக்கி நீராக்கிவிடும் வெந்தீயைக் காட்டிலும் கொடியதாகச் சுடுமென

அஞ்சுதல் - பயப்படுதல்

அஞ்சப்படும் – பயப்படப்படும்

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
தீமை பயக்கும் செயல்கள் பழிச் செயல் என்றும் பாவம் என்றும் வழங்கப்படுகின்றன. செயல்கள் எதிலும் தீமை என்பது இல்லை. மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றால் எண்ணம், சொல், செயல்கள், ஆகிய மூன்றுவகை வினைகளை ஆற்றுகிறோம். எந்த வினையானாலும் தனக்கும், பிறர்க்கும், தற்காலத்திலும் பிற்காலத்திலும், உடலுக்கும், மனத்துக்கும் துன்பம் எழாதபடி அளவோடும் முறையோடும் காத்துக் கொண்டால், அதுவே அறவழியாகும், நல்வினைகள் ஆகும். அவ்வாறன்றி நமது செயல் தனக்கோ பிறர்க்கோ, உடலுக்கோ மனத்துக்கோ துன்பம் விளைக்குமேயானால் அதுவே பழிச்செயல். இத்தகைய தீய செயல்கள்தான் துன்பத்தை விளைவித்து இறைஞானம் பெறுவதைத் தடை செய்கிறது. தீயைக் கண்டு எவ்வாறு அஞ்சியும், ஒதுங்கியும் நிற்கிறோமோ அதுபோல தீய விளைவுகளையும் கண்டு அஞ்சிச் செயலாற்றி நலமுடனும், வளமுடனும் வாழ வேண்டும் என்று கூறுகிறது இந்தக் குறள்

மேலும்: அஷோக்

ஆத்திச்சூடி
இயல்பு அலாதன செய்யேல்.
அழகு அலாதன செய்யேல்.
கீழ்மை அகற்று
நன்மை கடைப்பிடி
நுண்மை நுகரேல்
தீவினை அகற்று
நைவினை நணுகேல்
குணமது கைவிடேல்
கெடுப்பது ஓழி
கோதாட்டு ஒழி
கௌவை அகற்று
மனம் தடுமாறேல்.
மோகத்தை முனி.
வேண்டி வினை செயேல்.
வெட்டெனப் பேசேல்.
உத்தமனாய் இரு.
வாது முற்கூறேல்.
முனைமுகத்து நில்லேல்.
மூர்க்கரோடு இணங்கேல்.
துன்பத்திற்கு இடம் கொடேல்.
சூது விரும்பேல்
செய்வன திருந்தச் செய்
நிலையில் பிரியேல்
பிழைபடச் சொல்லேல்.
தூக்கி வினை செய்.
சுளிக்கச் சொல்லேல்
கொள்ளை விரும்பேல்
ஞயம்பட உரை
கடிவது மற.
ஔவியம் பேசேல்
இணக்கம் அறிந்து இணங்கு
வஞ்சகம் பேசேல்.

எனக்கு தர்மம் எதுவென்று நன்றாகத் தெரிகிறது. ஆனால் என் மனம் தர்மவழி செல்ல மறுக்கிறது. அதர்மம் எதுவென்று நன்கு அறிந்திருந்தும் என்னால் அதர்மத்தை விட்டு விலக முடியவில்லை. என்னுள் மிகவும் சக்திவாய்ந்த ஏதோவொன்று இருந்துகொண்டு என்னை தர்மத்தைச் செய்யவிடாமலும் அதர்மத்தைச் செய்யும்படியும் தூண்டுகிறது” - என்று துரியோதனன் தன் தீய செயல்களை நியாயப்படுத்துகிறான்.

பாபத்தின் பயன் துன்பம் என்று மனிதன் நன்கு அறிவான். இப்பொழுது ஆற்றும் பாபச்செயல் இன்பமாக இருந்தாலும் இனிய பயனைத் தந்தாலும் பிற்காலத்தில் நிச்சயம் துன்பம் விளைவிக்கும். ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான்’ என்பது உறுதி. காரியகாரண சம்பந்தம் உடனே வெளிச்சமாகாவிட்டாலும் பாபச்செயலின் விளைவிலிருந்து மனிதன் தப்ப முடியாது. ஏனெனில் ‘அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்.’ இயற்கையின் நியதி இதுவே. ஆகையால் தீவினை தவிர்க்கப்படவேண்டும். பாபச் செயல்கள் செய்ய அஞ்சவேண்டும். திருவள்ளுவரும் ‘தீவினையச்சம்’ பற்றி குறிப்பிடுகையில்

தீயினும் அஞ்சப் படும் தீயவை தீய பயத்தலால் தீயவை
என்று கூறுகிறார்.
மாறாக அறம் செய்ய விரும்ப வேண்டும். அறவழி நடப்பவன் பயமறியமாட்டான்.

இதையேதான், ‘அறம் செய விரும்பு’ என்று தன் ஆத்தி சூடியில் முதல்வரியிலேயே சொன்னார் ஔவை மூதாட்டி.

ஆயினும் ஒரு நோயாளி உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று அறிந்தும் சபலப்பட்டு தகாத, உடலுக்கு ஒவ்வாத உணவை உண்டு விடுவது போல மனிதன் தெரிந்தே ஏன் தவறு செய்கிறான் என்பது அர்ஜுனனின் கேள்வி.

பரிமேலழகர் உரை
தீயவை தீய பயத்தலான்-தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான்; தீயவை தீயினும் அஞ்சப்படும் - அத்தன்மையவாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும். 
விளக்கம்
(பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின், தீயினும் அஞ்சப்படுவதாயிற்று.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தீய தீயவே பயத்தலால்-ஒருவன் தனக்கின்பங் கருதிச் செய்யும் தீவினைகள் இம்மையிலும் மறுமையிலும் துன்பங்களையே தருதலால்; தீயவை தீயினும் அஞ்சப்படும்-அத்தீவினைகள் தீயினும் மிகுதியாக அஞ்சப்படத்தக்கனவாம்.

தீயானது தொட்டவரைச் சுடினும் எரிப்பினும், சமைத்தலும் குளிர் போக்கலும் நோய் நீக்கலும் கொடுவிலங்கு விரட்டலுமாகிய நன்மைகளையுஞ் செய்தலாலும்; தீவினையானது செய்த காலத்தில் மட்டுமன்றிப் பின்பு வேறொரு காலத்திலும் வேறொரிடத்திலும் வேறோ ருடம்பிலுஞ் சென்று சுடுதலாலும், எவ்வகை நன்மையுஞ் செய்யாமையாலும்; 'தீயவை தீயினும் அஞ்சப்படும்' என்றார். தீவினை நன்மை செய்யாமை பற்றியே 'தீயவே' என்னும் பாடம் இங்குக் கொள்ளப்பட்டது.

மணக்குடவர் உரை
தீத்தொழிலானவை தமக்குத் தீமை பயத்தலானே, அத்தொழில்கள் தொடிற் சுடுமென்று தீக்கு அஞ்சுதலினும் மிக அஞ்சப்படும்.

மு.வரதராசனார் உரை
தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

சாலமன் பாப்பையா உரை
நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.

தீயவே தீய பயத்தலாற் றீயவை
தீயினு மஞ்சப் படும்
பொருள்: தீய தீயவே பயத்தலால் - தீ வினைகள் தீய பயன்களையே விளைத்தலால், தீயவை தீயினும் அஞ்ச படும்-(ஒருவன்) தீய வினைகளைத் தீயினும் மிக அஞ்ச வேண்டும்.

அகலம்: தீயானது தீயவும் நல்லவும் பயத்தலானும், தீய வினை தீயவே பயத்தலானும், தீய வினைகளைத் தீயினும் அஞ்ச வேண்டும் என்றார். முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘தீயவை தீய’. அது பிழைபட்ட பாடம், ‘ஏ’ இன்றியமை யாத தாகலான்.

நன்றி: Moving Moon
உலகினில் வாழும் எவ்வோர்
.. உயிர்க்குமே உதவா வண்ணம்
நலமெலாம் அழிக்கும் தீதால்
.. நன்மைகள் கிடையா தென்றும்;
பலவித அழிவைத் தூண்டும்
.. பண்பிலார் செய்தீஞ் செய்கை
அலைதழல் தீயின் மேலாய்
.. அளவிலா அச்சம் சேர்க்கும்

தனக்கு இன்பம் தரும் என்று எண்ணி ஒருவன் ஒருவன் செய்யும் தீய செயல்கள் பின் தீமையே தருதலால் அத்தகைய தீயசெயல்கள் நெருப்பைக் காட்டிலும் கொடியன என்று அஞ்சி அவற்றை விலக்க வேண்டும் .

Thirukkural - Management - Values
Be a person of values, as a person is known for and by his values. “Values,” according to Oxford Advanced Learner's Dictionary (1996, p. 1319), “are morals or professional standards of behavior, principles.” “Values are relatively permanent desires that seem to be good in themselves,” (Stoner, 1995). Keep away from bad things as indulging in bad things brings more bad things to one's life. Valluvar warns us through Kural 202 that bad things, events or people are feared more than fire as the damage caused by bad things is more dangerous and irreversible. Bad things do more harm or damage than fire. People with values will not do valueless things. So, value people with value more than people without values.

Fear evil more than fire
As sin tends to sin.

No comments:

Post a Comment