காலைக்குச் செய்தநன்று என்கொல்

குறள் 1225
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் 
மாலைக்குச் செய்த பகை.
[காமத்துப்பால், கற்பியல், பொழுதுகண்டிரங்கல்]

பொருள்
காலை - பொழுது; வாணாள்; தருணம்; முறை; விடியற்காலம்; சூரியன்; பகல்; பள்ளியெழுச்சிமுரசம்; அடைப்பு; மீன்வகை.

காலைக்குச் - காலைப் பொழுதிற்கு

செய்த - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

நன்று - நல்லது; சிறப்பு; பெரிது; அறம்; இன்பம்; நல்வினை; உதவி; வாழ்வின்நோக்கம்; துறக்கம்; ஏற்கைக்குறிப்பு

செய்தநன்று  - நான் செய்த நன்மை

என்கொல் - என்ன அது ?

கொல் - A particle implying doubt; frequently interrogative or connected with inter rogative forms--as in காணார்கொல், will they not see--ஐயக்கிளவி

எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல்.

கொல் - கொல்லுதல் -  வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்

யான் - தன்மை யொருமைப் பெயர்

எவன்கொல்யான் - இப்படி என்னை கொல்லும், துன்புறுத்தும்

மாலை - அந்திப்பொழுது; இரவு; இருள்; சமயம்; குற்றம்; மரகதக்குற்றவகை; இயல்பு; குணம்; தொடுக்கப்பட்டது; தொடுத்தபூந்தொடை; மாதரணிவடம்; நூல்வகை; வரிசை; பாசம்; விறலி; பெண்.

மாலைக்குச்  - மாலைப் பொழுதிற்கு

செய்த - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

செய்த - நான் செய்த

பகை - எதிர்ப்பு; பகைவன்; மாறுபாடு; வெறுப்பு; தீங்கு; காண்க:பகைநரம்பு; வேற்றரசருடன்பகைகொள்ளுகை; கோளின்பகைவீடு; காமகுரோதம்முதலியஉட்பகை.

பகை - அபகாரம் / பகை என்ன ?

முழுப்பொருள்
மாலையிலும் (இரவிலும்) கூடியிருந்து காதல் செய்த காலங்களில் காலை பிறக்கிறதே அவரை பிரிவோமே என்று காலையினை திட்டிக் கொண்டு இருந்தாள் தலைவி. பின்புக் காலை எப்பொழுது செல்லும், மாலை எப்பொழுது வரும் என்று மாலைக்காக ஏங்கி மாலைப் பொழுதைப் போற்றிக் கொண்டு இருந்தாள் தலைவி. ஏன் என்றால் மாலையில் தான் யார் கண்ணுக்கும் படாமல் இவர்கள் ஒன்றாய் இருக்கலாம் அல்லவா ? இப்படி தயவு தாட்சனையமே இல்லாமல் காலை மேல் கோபம் கொண்டு இருந்தாள் ஆனால் எல்லையில்லா இன்பம் தந்த மாலைப் பொழுதை புகழ்ந்துக் கொண்டு இருந்தாள். காலையை விரும்பவில்லை. மாலையை விரும்பினாள். 

ஆனால், இன்றோ,  தலைவன் தலைவியை பிரிந்து சென்று விட்டார். ஆதலால் மாலையில் (இரவில்) இவர்கள் கூடி இருந்து பொழுதை தலைவன் இல்லமால் தலைவியால் கழிக்க முடியவில்லை. அவர்கள் கூடி இருந்த நினைவுகள் வலிய வந்து துன்புறுத்துகிறன. அது மட்டுமின்றி மாலைப் பொழுதில் அவள் தனியாக இருக்கிறாள். 

ஆனால் காலைப் பொழுதில் அப்படி இல்லை, அவளுக்கு உறுதுணையாக தோழிகள் என்று யாராவது உடன் இருப்பர். காலைப் பொழுதில் அவர்கள் கூடாததால் அவர்களின் கூடிய நினைவுகள் காலையில் மாலையளவுக்கு வருவதில்லை. 

ஆக இவரைப் பிரிந்து உள்ள பெரும் துயரத்தில் தலைவிக்கு காலைப் பொழுது மாலை என்னும் துன்பக் கடலை கடக்கும் ஒரு பெரும் கரையாக உள்ளது. கெட்டதிலும் ஒரு நன்மையாக காலைப் பொழுது உள்ளது. (blessing in disguise). அப்படி எனக்கு நன்மையாக இருக்கும் அளவிற்கு நான் என்ன நன்மை செய்தேன் காலைப்பொழுதிற்கு ? இப்படி ரணமாய் மாறும் அளவிற்கு மாறிய மாலைப்பொழுதிற்கு நான் என்ன அபகாரம் செய்தேன் ? தெரியவில்லையே என்கிறாள் தலைவி. 

இங்கே தலைவிக்கு பிரிவு ஏற்படுத்திய நேர்மாறான (180degree) மாற்றத்தை விளக்குகிறார் திருவள்ளுவர்.

என் வாழ்வில் இக்குறள் (முழுக்குறளுக்கு அல்ல. ஒரு சிறிய ஒப்புமை மட்டுமே)
நான் டெல்லியில் இருந்த காலத்தில் காலை அலுவலகத்திற்கு செல்வேன். எப்படா மாலை வரும், வீட்டுக்கு போகலாம்’னு இருப்பேன். ஆனா அவளுடன் அறிமுகம் பெற்றப் பிறகு அவளுடன் பேசுவது காலை பொழுதுகளில் மட்டும் தான். அதாவது அலுவலகத்துக்கு பஸ்சில் சென்று வரும் பொழுது மட்டும். ஆதலால், அதன் பின், எப்படா தூங்கி எழுந்து பஸ்’ல ஏறுவோம்னு இருக்கும். ஆக நான் விரும்பிய மாலைக்கு நான் செய்த தீங்கு என்ன ? அன்று நான் நேசிக்காத ஏசிய காலைக்கு நான் செய்த நன்மை என்ன ?


பரிமேலழகர் உரை
இதுவும் அது. காலையும், மாலையும், அவர் கூடிய ஞான்று போலாது இஞ்ஞான்று வேறுபட்டு வாராநின்றன; அவற்றுள், யான் காலைக்குச் செய்த நன்று என் - யான் காலைக்குச் செய்த உபகாரம் யாது? மாலைக்குச் செய்த பகை எவன் - மாலைக்குச் செய்த அபகாரம் யாது? 

விளக்கம் (கூடிய ஞான்று பிரிவர் என்று அஞ்சப்பண்ணிய காலை, அஃது ஒழிந்து இஞ்ஞான்று கங்குல் வெள்ளத்திற்குக் கரையாய் வாராநின்றது என்னும் கருத்தால், 'நன்று என்கொல்' என்றும், 'கூடிய ஞான்று இன்பம் செய்து வந்த மாலை அஃது ஒழிந்து இஞ்ஞான்றும் அளவில் துன்பஞ் செய்யாநின்றது' என்னும் கருத்தால், 'பகை எவன்கொல்?' என்றும் கூறினாள். பகை - ஆகுபெயர். தன்னோடு ஒத்த காலைபோலாது மாலை தன் கொடுமையால் துன்பம் செய்யாநின்றது என்பதாம்.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(இதுவுமது)
(காலையும் மாலையும் காதலர் உடனிடருந்த நாள் போலாது இன்று நேர்மாறான இயல்பு கொண்டுள்ளன. அவற்றுள்)யான் காலைக்குச் செய்த நன்று என்-நான் காலைப் பொழுதிற்குச் செய்த நன்கு யாது?; மாலைக்குச் செய்த பகை எவன்-மாலைப் பொழுதிற்குச் செய்த தீங்கு யாது?.

முன் பெல்லாம் நடுங்கத்தக்க பிரிவச்சம் உண்டு பண்ணிய காலை, இன்று அஃதொழிந்து, இரா வென்னும் துன்பக் கடலைக் கடந்தேறும் கரையாக மாறிற்று என்னுங் கருத்தால் 'நன்றென்கொல்' என்றும், முன்னாளில் எல்லை யில்லா இன்பஞ் செய்து வந்த மாலை இன்று இறந்து படுமளவு துன்பஞ் செய்கின்ற தென்னுங் கருத்தால் 'பகை யெவன் கொல்' என்றும் கூறினாள்.'கொல்' ஈரிடத்தும் அசை நிலை. 'பகை' ஆகுபொருளி.

மணக்குடவர் உரை
காதலர் பிரிவதன் முன்னம், பிரிவரென்று அச்சத்தைத் தந்த காலைப்பொழுது பிரிந்தபின்பு வருத்தாது ஒழிதற்கு யான் செய்த நன்மை யாதோ? அவரோடு இன்பம் நுகர்தற்கு நட்பாயிருந்த மாலைப்பொழுது பிரிந்த பின்பு வருத்துவதற்கு யான் செய்த பகைமை யாதோ? இது மாலையது பண்பின்மையை உட்கொண்டு தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?.

சாலமன் பாப்பையா உரை
காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை என்ன?.

நன்றி: ரிஷ்வன்
கூடியவர் பிரிவதன் முன்
காலைக்கு யான் செய்த
நன்மை என்ன?
வாடி இருக்கையில்
மாலைக்கு யான் செய்த
தீமை என்ன?

நன்றி: ஆத்திகம்
"ராத்திரியெல்லாம் கணவனோட கூடி முடிச்சு, சந்தோசமா எளுந்திரிக்கைல காலைப்பொளுது ரொம்பவே நல்லா இருக்கு.
அதே, சாயங்காலம் ஆச்சுன்னா, அவரு இன்னும் வரலியேன்னு ஒரே வருத்தாமா கீது.
இந்தக் கார்த்தாலைக்கு நான் செஞ்ச நல்லது இன்னா?
சாயங்காலத்துக்கு நான் இன்னா தீங்கு பண்ணினேன்னு அது இப்பிடி என்னை வாட்டுது?"

No comments:

Post a Comment