கற்றார்முன் கற்ற செலச்சொல்லி

குறள் 724
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற 
மிக்காருள் மிக்க கொளல்.

கற்றார்முன் - நூல்கள் பல கற்றவர்கள் இருக்கும் ஒரு அவை முன்; ஒருவர் பல துறைகளில் கற்றவராக இருக்கலாம்; பேசும் துறைக்கு சம்பந்தம் இல்லாமலே இருக்கலாம் ஆனால் கற்றவர் ஆவார். 

கற்ற - தாம் கற்றவை

செலச்சொல்லித் - செலுத்தல் 
செலுத்தல் - செல்¹(லு)-தல் 
-> To be effective; to have influence;பயனுறுதல். செல்வர்வாய்ச் சொற்செல்லும் (நாலடி,115). 
-> To last, endure, exist; நிலைத்திருத்தல்.செல்லாதவ் விலங்கை வேந்தர்க் கரசென (கம்பரா.இந்திரசித். 56)
எண்பொருளவாகச் செலச்சொல்லி -> Communicating your thoughts in language easy to be understood; சொல்ல வேண்டிய சிந்தனைகளை / கற்றவற்றை எளிமையாக மனதில் புரிந்துக்கொள்ளும் வகையில் சொல்லுதல்.

தாம்கற்ற - தாம் கற்றவை

மிக்காருள் - அதைவிட மிகுதியாக கற்றவரிடம்

மிக்க - மிகுதியாக கற்றவற்றை

கொளல் - அவர்க்ளின் மூலமாக கற்றுக்கொள்ள வேண்டும்.

  
 


முழுப்பொருள்
ஒருவர் ஒரு அவையில் பேசும் பொழுது அரிய வேண்டியவை சில:
1) அந்த அவையில் பலர் இருப்பர்
2) அவையில் இருப்போரில் பலர் தான் பேசும் தலைப்பில் தன்னை விட நன்கு கற்றோராக இருக்க கூடும்.
3) ஒரு வேளை தான் பேச கூடியவற்றில் அவையில் இருப்பவர்கள் நன்கு கற்றாராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் அடிப்படையில் அவர்களது துறையில் நன்கு கற்றவர்களக இருக்க கூடும்.

ஆக அத்தகைய கற்றவர்களிடம், சான்றோர்களிடம், தான் கற்றவற்றை அவர்கள் மனதில் பதியும் படி, அவர் தான் சொல்லும் கருத்தை ஏற்கும் அளவிற்கு விளக்கி பேச வேண்டும்.

அதுமட்டும் இன்றி, தான் கற்றவற்றைவிட அதிகம் கற்றோர் அந்த அவையில் இருக்க கூடும். அப்படி அதிகம் கற்றவரிடம் தான் கல்லாதவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்பதை நினைவுகூற வேண்டும். ஒருவரால் எல்லாம் கற்க கூடாமையில் என்பதை உணந்து மற்றவரிடம் கற்க வேண்டும். (கேள்வி முயல் என்று ஒளவையாரும் கூறியுள்ளார் என்பது இங்கு நினைவு கூர்கிறேன்).

ஏனேனில் ஒரு அவையில் பேசுகையில் ஒருவர் நமக்கு தெரியாத ஒன்றை சொன்னால் நாம் அதை கேட்டு, அவதானித்து சரியாய் இருப்பின் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வைத்துக்கொள்ள வேண்டும். அது அவையிற்கு நல்லதும், தனி நபருக்கும் நல்லது. அவை இன்னும் செழுமையடையும்

நம்மை விட அதிகம் கற்றவர் ஒரு இடத்தில் இருந்தால் அங்கு வாதம் வர வாய்ப்பு உண்டு. அதுவும் அடுத்தவர் சொல்வதை நாம் காது கொடுத்து கேட்காவிட்டால் வாதம் வருவது நிச்சயம். அத்தகைய வீண் வாதம் இல்லையென்றால் அவை நன்றாக செல்லும். அதற்கு இருவரும் ஒருவரிடம் இருந்து மற்றொருவர் கற்க வேண்டும். அதற்கான தீர்வைத்தான் திருவள்ளுவர் இந்த குறளில் சொல்கிறார். 

உதாரணம்:
1) ஒரு மேலாண்மை வணிக நிர்வாக (MBA) படிப்பில் பல்துறைகளில் இருந்து மாணவர்கள் இருப்பர். அவர்கள் பொறியியல், மருத்துவம், வணிகம், போன்று பல்வேறு துறைகளில் இருந்து வந்து இருப்பர். அவர்கள் குழு குழுவாக சின்ன சின்ன திட்டங்கள் செய்வர்.  அப்படி செய்கையில் ஒரு பொறியியல் படித்து இருந்த மாணவர் வணிக பயின்ற மாணவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

2) ஒரு நாட்டின் நிதியமைச்சர் ஒரு கருத்தரங்கில் பேசுகிறார். அவர் முன் பல துறைகளில் இருந்து அத்துறைகளில் இருந்து ஜாம்பவான்கள் வந்திருப்பர். ஆனால் நிதியமைச்சர் நிதி துறையில் மட்டுமே வல்லவராக இருப்பார். நிதியமைச்சர் மற்ற துறைகளின் ஜாம்பவான்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்க வேண்டும். அதன் படி செயல் பட வேண்டும்.

ஆத்திசூடி

ஞயம்பட உரை  பிறர் மகிழும்படி பேசு
கேள்வி முயல் கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய் 
எண் எழுத்து இகழேல் கணித அறிவியல், இலக்கியம் தூற்றாதே 
சான்றோர் இனத்து இரு அறிஞர்களின் குழுவிலே இரு 
சொற் சோர்வு படேல் பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே 
பிழைபடச் சொல்லேல்  குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே
பெரியாரைத் துணைக் கொள்  அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் 
பேதைமை அகற்று அறியாமையை போக்கு 
மேன்மக்கள் சொல் கேள் நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட 
மொழிவது அற மொழி சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல் 
வாது முற்கூறேல் வலியச் சென்று யாரையும் விவாதங்களுக்குக் கூப்பிடக் கூடாது. 
வித்தை விரும்பு கலைகளை ஆசையோடு கற்றுக் கொள் / திறமை வளர்க்க தேவையான வற்றை கற்றுக் கொள்
வீடு பெற நில் முக்திக்கான வழியை அடைய முயற்சி செய்ய வேண்டும். 
ஓரம் சொல்லேல் ஒருதலைப் பட்சமாகக் பேசக் கூடாது



 



பரிமேலழகர் உரை
அவர்மனம் கொள்ளுமாற்றாற் சொல்லி; தாம் கற்ற மிக்க மிக்காருள் கொளல் - அவற்றின் மிக்க பொருள்களை அம்மிக்க கற்றாரிடத்து அறிந்து கொள்க. எல்லாம் ஒருவற்குக் கற்றல் கூடாமையின், 
விளக்கம் 
(வேறு வேறாய கல்வியுடையார் பலர் இருந்த அவைக்கண் தாம் கற்றவற்றை அவர்க்கு ஏற்பச் சொல்லுக; சொல்லவே, அவரும் அவையெல்லாம் சொல்லுவர் ஆகலான், ஏனைக் கற்க பெறாதன கேட்டறியலாம் என்பதாயிற்று. அதனால் அவனது ஒருசார் பயன் கூறப்பட்டது.) -



மணக்குடவர் உரை
தாம் கற்றதனைக் கற்றவர்முன்பு இசையச் சொல்லித் தாம் கற்றதினும் மிகக் கற்றார்மாட்டு அவர் மிகுதியாகக் கூறும் பொருளைக் கேட்டுக் கொள்ளுதல் அவையஞ்சாமையாவது. 

மு.வ உரை
கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியைக் அறிந்து கொள்ள வேண்டும்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கற்ற கற்றார்முன் செலச்சொல்லி-தாம் கற்றவற்றை அவையல்லாத வேறு நூல்களை அல்லது தம்மினுங் குறைவாகக் கற்றோரவைக்கண், அவர் மனத்திற் பதியுமாறு எடுத்துச் சொல்லி; தாம் கற்ற மிக்க மிக்காருள் கொளல்-தாம் கற்றவற்றினும் மிகுந்தவற்றைத் தம்மினும் மிகுதியாகக் கற்றவரிடத்து அறிந்து கொள்க.

'மிக்காருள் மிக்க கொளல்' என்பதனால், 'கற்றார் முன்' என்பதற்குத் தம்மினுங் குறைவாகக் கற்றோரவைக்கண் என்று பொருள் கூறப்பட்டது. 'மிக்க' என்றது, ஒரு துறைப்பட்ட உயர்ந்த பொருள்களையும் பிறதுறைப்பட்ட வேறு பொருள்களையுமாம். பல்துறைக் கல்வியுடையார் ஒரே அவையினராயும் வெவ்வேறு அவையினராயுமிருக்கலாம் வெவ்வேறு துறைக்கல்வி கற்றவர் ஒருவருக்கொருவர் இருதலைப் பரிமாற்றஞ் செய்து கொள்ளலாமென்பது, இக் குறட்கருத்து.

No comments:

Post a Comment