விண்இன்று பொய்ப்பின்

குறள் 13
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
[அறத்துப்பால், பாயிரவியல், வான்சிறப்பு]

பொருள்
விண் - வானம்; மேலுலகம்; மேகம்; காற்றாடிப்பட்டத்தின்ஒருகருவி.

இன்று - இல்லை; இந்தநாள்; ஓரசைச்சொல்

பொய்த்தல் - பொய்யாதல்; தவறுதல்; பின்வாங்குதல்; கெடுதல்; பொய்யாய்ப்பேசுதல்; வஞ்சித்தல்

பொய்ப்பின் - ஏமாற்றினால் (மழை பெய்யவில்லை)

விரி - விரிந்தஅளவு; விரித்தல்; பொதியெருதின்மேலிடுஞ்சேணம்; திரை; விரியன்பாம்பு; காட்டுப்புன்னை; விரிக்கும்கம்பளம்முதலியன.

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

விரிநீர் - பரந்த நீர் பரப்பு -> கடல் நீர்; [உதாரணம் -> வங்காள விரிகுடா]

வியனுலகத்து - வியன் + உலகத்து
வியன் வானம்; பெருமை; சிறப்பு; வியப்பு; அகலம்; எண்ணின்ஒற்றை.

உலகம் உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி; உலகுயிர்கள்; திக்கு மக்கள்தொகுதி; உலகிலுள்ளஉயர்ந்தோர்ஒழுக்கம்; உயர்ந்தோர் உயர்குணம்; வானம்

வியனுலகம் - தேவலோகம், விரிந்து பரந்த பெரிய உலகம், பரந்தஉலகம்

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

நின்று - நில், எப்பொழுதும்; ஐந்தாம் வேற்றுமைப் பொருள்படவரும் ஒர்இடைச்சொல்.

உள்நின்று - உள்ளே நின்று

உடற்றுதல் - வருத்துதல்; சினமூட்டுதல்; போரிடுதல்; கெடுத்தல் செலுத்துதல்
உடற்றும் - வருத்தும்

உடற்று - வருத்துதல் உண்ணின்றுடற்றும் பசி (குறள், 13), 
        - சினமூட்டுதல். நின்னுடற்றியோர் நாடே (புறநா. 4). 
        - மூண்டுநடத்துதல். அமருடற்றினான் (பாரத.இராச. 50 ( To push on vigorously, as a campaignin war; )
        - போரிடுதல்
        - கெடுத்தல். ஒல்லுங் கரும முடற்றுபவர் (குறள், 818).

பசி - உணவுவேட்கை; வறுமை; தீ (பசியாறிப் போயிற்று - ஆறி என்ற வார்த்தை தீயினை ஆற்றுவதற்கோ ?))

 


 

  



முழுப்பொருள்
விண்இன்று பொய்ப்பின்
மழைத்தான் உணவு விளைவதற்கு மிக முக்கியமான தேவை. அம்மழையே உணவாகிறது என்று சொன்னால் மிகையல்ல.  மழைத் தான் மற்ற உயிரினங்களுக்கு ஆதரமாகவும் விளங்குகிறது. காடுகள் மழையை நம்பியே உள்ளன. காடுகள் மழையை செகரித்து, மலைகள் ஊறி மண் வளம் பெருகும். பின்பு சுனை, ஆறு என்ன மக்களுக்கு தண்ணீராய் வரும். 

அத்தகைய மழை நேரத்திற்கு வரவில்லை என்றால், ஏமாற்றினால் உயிரினங்கள் உணவில்லாமல் வருந்தும். 

விரிநீர் வியனுலகத்து உள்நின்று” என்று உலகத்தின் பரப்பளவை பெரிதாக பேசினாலும், அதைவிட மிக பெரிய நீர்ப் பரப்பான கடலின் நடுவில் இருந்தும் அந்த தண்ணீரை உணவு உற்பத்திச் செய்யப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா ? ஒருவேளை முடிந்தாலும் எப்படி காடுகளுக்கு அந்த தண்ணீரை கொண்டு செல்வது ? அத்தனை காடுகளுக்கும் அவ்வளவு தண்ணீர் காடு முழுக்க பாய்ச்ச முடியுமா ? சில தாவரங்கள் மண்ணில் வளராமல் மரங்களில் வளரும். அந்த உயிரினங்களுக்கு எப்படி தண்ணீர் கொண்டு செல்ல முடியும் ? ஆனால் அது மழையால் மட்டுமே முடியும். 

ஆனால் இயற்கையில் மேகம் கடலில் இருக்கும் தண்ணீரை முகந்து, பின்பு, மழையாக பொழிகிறது. அத்தகைய கடலை நாம் மாசு செய்யக் கூடாது

உடற்றும் பசி
பசி என்ற சொல்லின் பொருள் உணவுவேட்கை, வறுமை, தீ. உடற்று என்ற சொல்லின் பொருள் வருத்துதல், போரிடுதல். 

ஆக பசியினால் (மழையில்லாமல் உருவாக்கப் பட்ட உணவு பஞ்சத்தால்) மக்கள் வாடுவர் என்று எளிமையாக கூறலாம்.

ஆனால் பசி என்றென்பதற்கு தீ என்றும் பொருள். ஆகையால் அத்தகைய தீ எல்லா உயிரினங்களையும் அழித்து விடும். 

மற்றுமொரு கோணத்தில் பார்த்தால், தண்ணீர் இல்லாமல் உணவு இல்லை. உணவு இல்லை என்றால் பசி உருவாகும். ஆக தண்ணீருக்காக எல்லொரும் சண்டைக்கு முற்படுவர். ஆக தண்ணீருக்காக போர் நடக்கும். இதுவே அடுத்த மூன்றாம் உலகப் போரின் (நான் வைரமுத்துவின் மூ.உ.போ’வை இன்னும் படிக்க வில்லை) ஆதார நோக்காக இருக்கும் என்று புவியியல் வல்லுனர்களால் சொல்லப் படுகிறது. இதனை அய்யன் திருவள்ளுவர் அன்றே சொல்லி இருக்கிறார். 

இதனால் தான் மற்றுமொரு குறளில் நீர், மண், மலை, காடு, ஒரு நாட்டிற்கு எவ்வளவு பெரிய அரண் என்று திருவள்ளுவர் பாடியுள்ளார்.

காடும் உடைய தரண் (குறள் 742 அரண்)

மேலும்: அஷோக்

ஒப்புமை
“..............வானம்
துளிமாறு பொழுதினில் உலகம் போலும்” (கலி.25:27-8)
“வறந்தெற மாற்றிய வானமும் போலும்’ (கலி 146:14)
“மன்னுயிர் மடிந்த மழைமா றாமையம்” (அகநா 31:4)
“மாரிவளம் பொய்ப்பின் ஊர்க்கின்னா” 
“புயல்மறந்து மீன்சனிபுக் கூன்சலிக்கும் காலம்” (சம்பந்தர்.கழுமலம் 3)

மேலும்: குறள் திறன்



மழையும் சங்க தமிழும்
வழக்கமாக மன்னர்களைப் புகழும் போது மாரிபோல் வாரி வழங்குவான் என்பார்கள்.. ஆனால் இங்கே ஒருவர் தம் மன்னனைப் போல (சோழன்) மழை கருணையுடன் வாரி வழங்குகிறது என்கிறார்.(சிலப்பதிகாரம்)

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் 
நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளிபோல் 
மேல்நின்று தான்சுரத்த லான் 
                                 (சிலப்பதிகாரம்:1: 1-9 இளங்கோவடிவகள்)

முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவணமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.  ——– [ 16 /20 ]
                                (திருவெம்பாவை பாடல் -16 [மாணிக்கவாசகர்])

பரிமேலழகர் உரை 
விண் இன்று பொய்ப்பின் மழை வேண்டுங்காலத்துப் பெய்யாது பொய்க்கும் ஆயின்; விரி நீர் வியன் உலகத்துள் கடலால் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண்; நின்று உடற்றும் பசி-நிலை பெற்று உயிர்களை வருத்தும் பசி. 
விளக்கம் 
(கடலுடைத்தாயினும் அதனால் பயன் இல்லை யென்பார், 'விரி நீர் வியன் உலகத்து' என்றார். உணவு இன்மையின், பசியான் உயிர்கள் இறக்கும் என்பதாம்.)

மணக்குடவர் உரை
வானமானது நிலைநிற்கப் பொய்க்குமாயின், விரிந்த நீரினையுடைய அகன்ற வுலகத்திடத்தே பசியானது நின்று வருத்தாநிற்கும், எல்லாவுயிர்களையும். பொய்த்தல்- தன்றொழில் மறுத்தல். இது பசி என்று பொதுப்படக் கூறியவதனான் மக்களும் விலங்கும் பொருளுங் காமமுந் துய்க்கலாற்றாது துன்ப முறுமென்று கூறிற்று.

மு.வ உரை
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

சாலமன் பாப்பையா உரை
உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
கடல் நீரால் பயனில்லை. மழைநீரே உணவாகும்.

நன்றி: ராமநாதன் [Star Vijay: தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு]
உணவெல்லாம் விளைவித்து உணவாகும் மழையே உனைத்தடுக்க வழி செய்தால் மனித இனம் இல்லையே.

கார் இன்றே நீர் இல்லை
நீர் இன்றே ஊர் இல்லை
ஊர் இன்றே ஏர் இல்லை
ஏர் இன்றே சோறு இல்லை தமிழா

வாரி மணலை அள்ளிடுவோம்
வனப்புடை மரங்களை வெட்டிடுவோம்
கார்பனை வானில் நிறைத்திடுவோம்
கடலினில் அழுக்குகள் சேர்த்திடுவோம்
மாரியை பின்னர் வைதிடுவோம்
மழையின் கடவுளை சபித்திடுவோம்
சீரிய வேள்விகள் செய்திடுவோம்
சிந்திப்பதையும் மறந்து விட்டோம்!

 

 

தேவையான நேரத்திலெ நல்ல மழை பெஞ்சா… தென்மேற்குப் பருவக்காற்று தேனிப்பக்கம்….என்று ஜாலியா பாடலாம். அப்படி மழை தவறினா..இன்னா பண்றது??? சுத்தி கடல் பாத்து..எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி பாட வேண்டியது தான்.

No comments:

Post a Comment