ஊரவர் கெளவை எருவாக

குறள் 1147
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.
[காமத்துப்பால், களவியல், அலரறிவுறுத்தல்]

பொருள்

அலரறிவுறுத்தல் - அலர் + அறிவுறுத்தல்
அலர்  - பழிச்சொல்; மலர்ந்தபூ; மகிழ்ச்சி நீர் மஞ்சள் மிளகுகொடி.
அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா
உறுத்தல் - உறுத்துதல்; மிகுக்கை; ஒற்றுகை.


அம்பல் - சிலரறிந்து புறங்கூறுமொழி, கிசுகிசு, பழிச்சொல், பழிமொழி, பூ அலர்தற்குச் சிறிது முன்னுள்ள நிலை,

ஒரு விசயம் சிலருக்கு மட்டும் தெரிவது அம்பல். ஊரே அறிந்தால் அலர்.

அறிவுறுத்தல் - உபதேசித்தல், போதித்தல்

ஊரவர் - ஊரார், அன்னியர், (தன்னை வீடு, அலுவலுகம் போன்ற சுற்றத்தில் உள்ள மக்கள்)

கெளவை - kauvai   n. prob. hvay. 1. Sound,noise, roar; ஒலி குயிற் கெளவையிற் பெரிதே(ஐங்குறு. 369). 2. Disclosure; வெளிப்பாடு கற்பொடு புணர்ந்த கெளவை (தொல். பொ 41). 3. Ill-report, scandal, disrepute; பழிச்சொல் கல்லென்கெளவை யெழாஅக் காலே (ஐங்குறு. 131). 4. Affliction, distress; துன்பம் (பிங்.) 5. Toddy; கள் (பிங்.)  

எரு - உரம்; சாணி; வறட்டி; பசளை; மலம்

எருவாக - உரம்

அன்னை - தாய்; தமக்கை தோழி பார்வதி

சொல் - மொழி; பேச்சு; பழமொழி; உறுதிமொழி; புகழ்; மந்திரம்; சாபம்; கட்டளை; புத்திமதி; பெயர்ச்சொல்; வினைச்சொல்; இடைச்சொல், உரிச்சொல்என்னும்நால்வகைமொழிகள்; தமிழ்மொழியில்உள்ளஇயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்எனநால்வகைப்பட்டமொழிகள்; நாடகவரங்கில்பேசப்படும்உட்சொல், புறச்சொல்; ஆகாசச்சொல்என்பன; சத்தம்; நாமகள்; பேசச்செய்வதானகள்; நெல்.

அன்னைசொல் - தாயின் கடுஞ்சொல்

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.
நீளுதல் - நீடுதல்; பெருமையாதல்; ஓடுதல்; நீளுதல்; பரத்தல்; செழித்தல்; மேம்படுதல்; நிலைத்தல்; இருத்தல்; தாமதித்தல்; கெடுதல்; தாண்டுதல்; பொழுதுகடத்துதல்; தேடுதல்; பெருகுதல்.

நீராக நீளும் - பயிருக்கு (எரு மற்றும்) நீர் விட்டு செழுமையாய் வளர்வதுப் போல வளரும்

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

இந் நோய் - இந்த காதல் (காம) நோய்



முழுப்பொருள்
1) இந்த (களவு காதல்) காதல் ஊருக்கு தெரிய வர அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கிசு கிசு-த்து (அம்பல்) கொண்டது சென்று இப்பொழுது (அலர்கிறார்கள் - ) பலரும் அறிந்து வெளிப்படையாக பேசுகிறார்கள். இது அறிந்து பெண்ணின் தாய் அவளை கடுமையாக ஏசுகிறாள். 

காதலர்கள் இருவரும் பிரிந்து இருக்கும் போது அவர்கள் தவிக்கும் காதல் நோய் என்னும் பயிருக்கு ஊராரின் இத்தகைய அலர்ப் பேச்சு இக்காதலுக்கு உரமாகவும் (எருவாகவும்) தாயரின் கடுஞ்சொல் நீராகவும் அமைது பயிர் (காதல் நோய்) செழுமையாக வளர உதவுகிறது. 

2) பண்டைத் தமிழர் அகவாழ்வில் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே உருவான களவுப் புணர்ச்சியை அறிந்த ஊரார், தம்முள் அதுகுறித்துப் பேசிக்கொள்வது ‘அம்பல்’ என்றும் ‘அலர்’ என்றும் ‘கெளவை’ என்றும் கூறப்பட்டது. பழிதூற்றல், புறங்கூறல் எனவும் பொருள் கொள்ளலாம். சிலரிடையே முகக்குறிப்பால், கண்களால், செய்கையால் நிகழுதல் ‘அம்பல்’ எனப்படும்; பலரும் பேசத்தொடங்கினால் ‘அலர்’ எனப்படும்.அம்பலாலும் அலராலும் காதலரின் களவு வெளிப்படும்.

தீ வாய் அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர்
எனும் நற்றிணைப் பாடல் வாயிலாய், அலர் தூற்றலில் பெண்களே அதிகமதிகம் ஈடுபடுவர் என்பது புலப்படுகிறது.

ஒப்புமை
”ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னைசொல் நீர்ப்படுத்து
ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்
பேரமர் காதல் கடல்புரைய விளைவித்த
காரமர் மேனிநம் கண்ணன் தோழீ கடியனே” (திருவாய் 5.3:4)

பரிமேலழகர் உரை
வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தலைமகன் சிறைப்புறத்தானாதல் அறிந்த தோழி, 'ஊரவர் அலரும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும்' எனச் சொல்லெடுப்பியவழி அவள் சொல்லியது. இந்நோய் - இக்காமநோயாகிய பயிர்; ஊரவர் கெளவை எருவாக அன்னை சொல் நீராக நீளும் - இவ்வூரின் மகளிர் எடுக்கின்ற அலர் எருவாக அது கேட்டு அன்னை வெகுண்டு சொல்லுகின்ற வெஞ்சொல் நீராக, வளராநின்றது.

விளக்கம் 
('ஊரவர்' என்பது தொழிலான் ஆணொழித்து நின்றது. ஏகதேச உருவகம். சுருங்குதற்கு ஏதுவாவன தாமே விரிதற்கு ஏதுவாக நின்றன என்பதாம். வரைவானாதல் பயன்.) ---

மணக்குடவர் உரை
ஊரார் எடுத்த அலர் எருவாக அன்னை சொல்லும் சொற்கள் நீராக இந்நோய் வளராநின்றது. இஃது அலரின் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. இவையிரண்டிற்கும் வரைவானாதல் பயன்.

மு.வ உரை
இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

சாலமன் பாப்பையா உரை
இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.

நன்றி: ரிஷ்வன்

ஊராரின் பழிச்சொல்
உரமாகவும்
மாதாவின் கடுஞ்சொல்
நீராகவும்
காதலால் மலர்ந்த எம்
காமப்பயிர்
கருக விடாமல்
வளர உதவுகிறது.

நன்றி: தமிழ் மன்றம்

காதல் நோய்

அழுது அழுது காஞ்சனாவின் கண்கள் சிவந்திருந்தன. முகம் வீங்கிப்போய் இருந்தது.அம்மாவின் சொற்கள் ஈட்டிகளாக நெஞ்சில் பாய்ந்தன.

" இதோ பாரடி! அந்த மாடிவீட்டுக்காரங்க பரம்பரை பணக்காரங்க; நாம பரம ஏழைங்க; காதல் கத்திரிக்காய் எல்லாம் புத்தகத்துல படிக்கறதுக்கும்,சினிமாவுல பாக்குறதுக்குந் தாண்டி நல்லாயிருக்கும்; நிஜ வாழ்க்கைக்கு ஒத்துவராதுடி; கால்வயித்துக்கு கஞ்சி குடிச்சாலும் மானத்தோட வாழ்ந்திட்டு இருக்கோம். அதுல மண் அள்ளி போட்டுராதடி.அந்தப் பையன மறந்துடு; நானே நல்ல பையனாப் பாத்து உனக்குக் கட்டி வக்கிறேன். என் வார்த்தைய மீறி ஏதாச்சும் ஏடாகூடமா பண்ணினேன்னு வச்சுக்கோ, அப்புறம் இந்த அம்மாவ நீ உசிரோட பாக்கமாட்டே!"

" என்ன மன்னிச்சிடம்மா! உன் வார்த்தைய மீறி நான் எதுவும் செய்யமாட்டேன்" என்று சொல்லி தன் காலில் விழப்போனத் தன் மகளைக் கட்டி அணைத்துக் கொண்டாள் முனியம்மா.

" சரி,சரி அழாதே! குடத்த எடுத்துக்கிட்டு ஆத்துக்குப்போய் தண்ணி கொண்டா; சமையல் பண்ணனும்."

" சரி அம்மா!" என்று சொல்லிய காஞ்சனா குடத்தை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றாள்.

ஆற்றில் இறங்கி குடத்தைக் கழுவிக்கொண்டு இருந்தாள் காஞ்சனா. சற்று தூரத்தில் இருந்த இரண்டு பெண்கள், காஞ்சனாவின் காதுபடவே பேசத் தொடங்கினர்.

" விமலா! தெரியுமா சேதி " என்றாள் கமலா.

" சொன்னாத்தானே தெரியும் " என்றாள் விமலா.

" வெளக்கமாத்துக்கு பட்டுக் குஞ்சம் கேக்குது "

" கொஞ்சம் புரியிறமாதிரி சொல்லடி "

" இவ கெட்ட கேட்டுக்கு மாடிவீட்டுப் பையனுக்கு வலை வீசியிருக்கா! " என்று காஞ்சனாவை ஜாடை காட்டிப் பேசினாள் கமலா.

" நமக்கு எதுக்குடி ஊர்வம்பு? எவ எக்கேடு கெட்டுப்போனா நமக்கென்ன?" என்றால் விமலா.

குடத்தில் நீரை மொண்டு இடுப்பில் வைத்துக்கொண்டு நடந்தாள் காஞ்சனா. கண்களில் வழிந்த நீரைக் கைகளால் துடைத்துக்கொண்டாள்.

ஊரார் பேசிய ஏச்சுக்களையும், அன்னை பேசிய பேச்சுக்களையும் மீறி மாடிவீட்டுப் பையனுடைய நினைவுகள், மனத்திரையில் மீண்டும் மீண்டும் வருவதைக் காஞ்சனாவால் தடுக்கமுடியவில்லை.

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்.

கருத்து: ஊரார் பேசுகின்ற பழிச்சொல் எருவாகவும், அன்னைசொல் நீராகவும் துனணநிற்க, காதல் பயிரானது செழித்து வளர்கிறது.

No comments:

Post a Comment