கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

குறள் 332
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் 
போக்கும் அதுவிளிந் தற்று.
[அறத்துப்பால்,துறவறவியல், நிலையாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
கூத்தாட்டு - நடிப்பு, நடனம்.
கூத்தாட்டு - கூத்து / நாடகம் / திரை (சினிமா)
கூத்து - நடனம்; பதினொருவகைக்கூத்து; நாடகம்; தெருக்கூத்து; வியத்தகுசெயல்; கேலிக்கூத்து; குழப்பம்:நாடகம் பற்றி அமைந்த ஒருகடைச்சங்கநூல்.

அவைக்குழாம் - அவை + குழாம்
அவை - மாந்தர்கூட்டம்; அறிஞர்கூட்டம்; சபாமண்டபம் புலவர் நாடகஅரங்கு; பன்மைச்சுட்டு; அப்பொருள்கள்

குழாம் - கூட்டம்; சபை; பலர் சேர்ந்த கூட்டம், திரள்

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

அவைக்குழாத் தற்றே - அவையில் திரளாக கூடுவது. இங்கே இதைப்போன்ற அவைகளில் சிறுக சிறுக கூட்டம் கூடும்.

பெருஞ் - பெரிய - பெரிதான; மூத்த; இன்றியமையாத.

செல்வம் - கல்வி; அழகு; செழிப்பு; நுகர்ச்சி; துறக்கம்; ஐசுவரியம்; மகளிரின்கொஞ்சற்பேச்சு.

பெருஞ்செல்வம் - பெரிய செல்வம்

போக்கும் - போதல் - செல்லுதல்; அடைதல்; உரியதாதல்; பிறத்தல்; நீண்டுசெல்லுதல்; தகுதியாதல்; நெடுமையாதல்; நேர்மையாதல்; பரத்தல்; நிரம்புதல்; மேற்படுதல்; ஓங்குதல்; நன்குபயிலுதல்; கூடியதாதல்; பிரிதல்; ஒழிதல்; நீங்குதல்; கழிதல்; மறைதல்:காணாமற்போதல்; மாறுதல்; கழிக்கப்படுதல்; வகுக்கப்படுதல்; சாதல்; முடிவாதல்; ஒலியடங்குதல்; தொடங்குவதைக்குறிக்கும்துணைவினை; பகுதிப்பொருளையேவற்புறுத்தும்துணைவினை

அது - அது (இங்கே செல்வத்தை குறிக்கிறது)

விளி - ஓசை; இசைப்பாட்டு; கொக்கரிப்பு; சொல்; அழைப்பு; எட்டாம்வேற்றுமை; 
விளி - viḷi   II. v. i. perish, die, சா; 2. suffer, வருத்தப்படு; 3. be angry.
விளிவு, v. n. wrath, கோபம்; 2. death, சாவு.
விளி - viḷi  
க்கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To be ruined, spoiled; to perish, கெட. (குவலை.) 2. To become extinct, to die, சாக. 3. To turn about, மறிய. 4. To suffer, வருத்தப்பட. 5. To be angry, கோபிக்க. (p.) விளியாதுநிற்கும்பழி. Imperishable disgrace; an indelible stigma.
விளிவு, v. noun. Wrath, கோபம். 2. Death, சாவு. (சது.)
விளிந் தற்று - விளிந்து + அற்று
விளிதல் - இறத்தல்; அழிதல்; குறைதல்; கழிதல்; ஓய்தல்; சினத்தல்; நாணமடைதல்; அவமானமடைதல்; வருத்தப்படல்; மறிதல்; சொல்லுதல்.

விளிந்து (விளியும்) - இறந்து அழியும் / ஒழியும்

அற்று -  அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

முழுப்பொருள்
ஒரு திரையரங்கில் (அல்லது நாடக அரங்கில், அல்லது கூத்து நடக்கும் மேடைக்கு) மக்கள் சிறிது சிறிதாக கால இடைவேளைகளுடன் வருவர்.

அதாவது ஒரு 6:30 மணி காட்சியிற்கு 5:45 ஒருவர் வருவார், 6:00 மணிக்கு பத்துப் பேர் வருவர், 6:15க்கு நூறுப் பேர் வருவர், 6:20க்கு இருநூறுப் பேர் வருவர், 6:25க்கு ஐம்பதுப் பேர் வருவர் இறுதியில் 6:30 மணிக்கு சிலர் வருவர். கடைசியில் 6:30 மணிக்கு மக்களால் முழுவதுமாக அரங்கம் நிறைந்துவிடும். 

ஆனால் திரைப்படம் நிறைவடைந்தவுடன் (நாடகம் / கூத்து முடிந்தவுடன்) மக்கள் உடனடியாக திரைப்பட அரங்கை விட்டு வெளியேருவர். அவர்கள் நான் 6:00 மணிக்கு வந்தேன், 6:15க்கு வந்தேன், 6:30க்கு வந்தேன் என்று முன்னும் பின்னுமாக வருகின்ற போது வந்த கால இடைவேளைகளுடன் வெளியேறுவத்தில்லை. அவர்கள் உடனடியாக செல்கின்றனர். மேலும், அங்கு திரையரங்கிற்கு வந்தோர் அங்கேயே தங்கிவிடுவதில்லை. தங்கவும் வரவில்லை. அவர்கள் சென்றுவிடுவார்கள்.

மேலும் சினிமாவுக்கோ, கூத்து மேடைக்கோ செல்ல அனுமதிக்கும் வழி ஒன்றாகத்தான் இருக்கும்;கூத்து முடிந்து வெளியேறும் வழியோ பல வழிகளிலும் இருக்கும்.

கூத்தோ,நாடகமோ,சினிமாவோ பார்க்கச் செல்லும் மக்கள் மகிழ்வான உற்சாகமான மனநிலையில் செல்வார்கள்; கூத்து முடிந்து திரும்பும்போதோ அயற்சியும், சோர்வும் நிரம்பிய மனநிலையில் ஓய்வெடுக்க விரும்பி வெளியே ஓடுவோம்.

இதைப்போன்றதே செல்வம். வரும்பொழுது சிறுக சிறுக வரும். பெருஞ்செல்வமாகும். வரும் பொழுது மனதிற்கு உற்சாகம் ஊட்டக்கூடியதாக இருக்கும். ஆனால் செல்லும் பொழுது ஒரேயடியாக மிக சில நிமிடங்களில் (நேரத்தில்) வெளியே செல்லும். இறந்து அழியும் தன்மை வாய்ந்தது செல்வம். போகும்போதோ சோர்வையும் அயற்சியையும் விட்டுச் செல்லும்.

இவ்வாறு செல்வத்தின் நிலையாமையை விளக்குகிறார் திருவள்ளுவர்.

செல்வத்தின் நிலையாமையை உணர்ந்து செல்வத்தின் மீது அதீத பற்றோ உயர் மதிப்போ வைத்துக்கொள்ள கூடாதே தவிர செல்வத்தை உதாசீனப் படுத்தக்கூடாது. அறம், பொருள், இன்பம், வீடு என்பதே நாம் தரிக்க வேண்டிய நான்கு வேடங்கள். அறம் என்ற கடமைகளை ஆற்றி பொருள் ஈட்டி வாழ்வை நடத்தினால் தான் இன்பத்தை நுகரமுடியும். மூன்றும் சமநிலையில் பேணுவது அவசியம். பொருள்செயல்வகை அதிகாரத்தில் பொருளின் அவசியத்தையும் கூறியுள்ளார் திருவள்ளுவர். 
 

ரஜினி முத்து படத்தில் சொல்லுவதுப் போல் :  வந்தாலும் யேனு கேக்க முடியாது. போனாலும் யேனு கேக்க முடியாது. 

ஒப்புமை
கோடியர் நீர்மை போல முறைமுறை
ஆடுநர் கழியும் இவ் வுலகம் (புறநா 29:23-4)

நன்றி: இலங்கை ஜெயராஜ் (காணொளி)

மற்றும்
போக்கும் என்ற சொல்லில் ஒரு ‘ம்’ விகுதி போட்டிருக்கிறார் பாருங்கள், போக்கு அது விளிந்தற்று என்று சொல்லவில்லை. போக்கும்’ என்கிறார்.

அதாவது போவதும் என்று சொல்வதன் மூலம் செல்வம் வருவதும்’ இருப்பதும்’ அப்படியே கூத்தாட்டத்தில் போது நடிகர்கள், நாடக சம்பவங்கள் நடக்கும் செயல்களுக்கொப்பானவை என்பது நாயனாரின்(பழைய கேரள முதல்வர் அல்ல !) கூற்று.

கூத்து நடக்கையில் நாம் காணும் அனைத்தும் உண்மையானவை அல்ல; பார்க்கும் கதை பொய், நடிக்கும் பாத்திரங்கள் பொய், நிகழும் நிகழ்ச்சிகள் பொய், கூத்து முடிந்த பின் பார்த்தால் வெண் திரை மட்டுமே மிச்சமிருக்கும்.

செல்வமும் வந்து நீங்கிய பின் இருப்பது வெறுமை மட்டுமே..
செல்வத்தின் தோற்றமும், இருப்பும், அழிவும் காணல் நீர் போலப் போய்விடுகிறது.

ஆக ஒரு கூத்தைப் பார்த்த வள்ளுவரின் சிந்தனையில் இத்தனை விதயங்களும் தோன்றியிருக்கின்றன.

கூத்தின் தன்மை, நடிகர்கள், கதை முதலியவர்றில் நிகழ்வு, கூத்து முடிந்த பின் உள்ள வெறுமை ஆகிய அனைத்தையும் செல்வத்திற்கு ஏற்றிய சிந்தனைத்திறன்தான் வியப்படைய வைக்கும் ஒன்று.

நன்றி: சங்கபல்கை

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
நிலையாமை என்ற அதிகாரத்தில் இக்குறள் வருவதால் செல்வம் நிலையாமை குறித்து தெளிவான அறிவு பெற்று, அதனை நல்ல வழிகளில் பயன்படுத்த வேண்டும் என்று எடுத்துரைப்பதே இக்குறளின் நோக்கம்.

உடலியக்கத் தேவைக்கு ஏற்ற பொருட்கள் மீதும், புலன்களுக்கு இன்பமளிக்கும் பொருட்கள், மக்கள் மீதும் பழக்கப் பதிவுகளால் மனிதருக்கு விருப்பம் மேலிடுவது இயற்கை. பொருள், இன்பம் இரண்டையும் முயற்சியின்றியே பெறுவதற்கு அதிகாரமும், புகழும் உதவுவதால் - பொருள், புலனின்பம், அதிகாரம், புகழ் என நான்கு வகைகளில் மனிதனிடம் அவா உயர்ந்து கொண்டே போகிறது. இந்த நான்கு வாழ்க்கை வளங்களும் நிலைப்பதேயில்லை. இந்நான்கும் எந்த் அளவு கிட்டினாலும் மனம் நிறைவு பெறாது. மேலும் இத்தகைய அவாவை அடிப்படையாகக் கொண்டு ஏற்படும் மிகு முயற்சியால், உடலுக்கும் மனதுக்கும் துன்பம். முயற்சியில் நினைத்தபடி வெற்றி கிட்டா விட்டால் சோர்வு ஏற்பட்டுத் துன்பம். இந்நான்கில் வெற்றி கிட்டினால் அவற்றைத் துய்க்கும்போது அளவு முறை மீறல், மாறல் ஆகிய விளைவுகளாலும் துன்பமே. எனவே பொருட்செல்வம் நிலையற்றது என அறிந்து, வருவதிலும் போவதிலும் மனம் சலிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறுகிறார் வள்ளுவர். மேலும் கூத்தாட்டவைக் குழாத்தற்றே பெருஞ்செல்வம் என்பது ஒரு ஆழ்ந்த கருத்தை விளக்குகிறது. கூத்து தொடங்கும்போது ஒருவர், இருவராகச் சிறுசிறு கூட்டமாக வந்து சேர்வார்கள். சபை நிரம்பப் பல மணித் துளிகள் செல்லும். இதுபோலவே செல்வம் வரும்போது கொஞ்சம் கொஞ்சமாக நீண்டகால அளவில் வந்து சேரும்.

அப்படிச் சேரும் செல்வம் போகும்போது, கூத்து முடிந்தவுடன் மக்கள் ஒரு நொடியில் எப்படிக் கலைந்து போய் விடுவார்களோ, அது போல செல்வம் போகும் போது குறுகிய நேரத்தில் மறைந்து போகும் என்பதாகும்.

இத்தகைய நிலையாத செல்வங்களை அது வந்தடைந்த போதே நல்ல விளைவைத் தரும் முறையில், திட்டமிட்டுச் செலவு செய்து பயனடைந்து விட வேண்டும் என்பது குறிப்பிட்டுக் காட்டபடுகிறது இப்பாவின் மூலம்.

பரிமேலழகர் உரை
பெருஞ்செல்வம் கூத்தாட்டு அவைக்குழாத்தற்று - ஒருவன் மாட்டுப் பெரிய செல்வம் வருதல் கூத்தாடுதல் செய்கின்ற அரங்கின்கண் காண்போர் குழாம் வந்தாற்போலும், போக்கும் அது விளிந்தற்று - அதனது போக்கும் அக்கூத்தாட்டு முடிந்தவழி அக்குழாம் போயினாற்போலும். (பெருஞ்செல்வம் எனவே, துறக்கச் செல்வமும் அடங்கிற்று. போக்கும் என்ற, எச்ச உம்மையான், வருதல் பெற்றாம். அக்குழாம் கூத்தாட்டுக் காரணமாக அரங்கின் கண் பலதிறத்தால் தானே வந்து, அக்காரணம் போயவழித் தானும் போமாறுபோல, செல்வமும் ஒருவன் நல்வினை காரணமாக அவன்மாட்டுப் பல் திறத்தால் தானே வந்து அக்காரணம் போயவழித் தானும் போம் என்றதாயிற்று.).

மணக்குடவர் உரை
கூத்தாட்டுக் காண்டற்கு அவைக் கூட்டம் திரண்டா லொக்கும் பெருஞ்செல்வத் திரளும்; அந்த அவை யெழுந்து போனாற் போலும் அது போமாறும்

மு.வரதராசனார் உரை
பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக செல்வம் சேரும். நாடகம் முடிந்ததும கூட்டம் கலைவது போல் மொத்தமாய்ப் போய்விடும்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: பெரும் செல்வம் கூத்து ஆடு அவை குழீஅற்று - பெருஞ்செல்வம் (வருதல்) கூத்தாட்டு அவை கூடினாற் போலும்; போக்கும் அது விளிந்து அற்று‡ (பெருஞ் செல்வம்) போதலும் கூத்தாட்டு அவை (கூத்து முடிந்தவுடன்) போயினாற் போலும்.

அகலம்: குழுவி யற்று என்பது இன்னிசை நோக்கிக் குழீஇ யற்று என நின்றது. குழீஇயற்று, விளிந்தற்று என்பன வினையயச்சத் தொகைகள். அவை முறையே ‘குழீஇயினா லற்று’, ‘விளிந்தா லற்று’ என விரியும். முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘அவைக் குழாத் தற்றே’. அவைக் குழாத்தற்றே என்பது பொருத்தமான பொருள் தாராமையானும், பின்னர் விளிந்தற்று என வருதலானும், குழீஇயற்று என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்க.

கருத்து: செல்வம் வருதலும் போதலும் கூத்தாட்டவை குழுவுதலும் போதலும் போலாம்.

English Meaning - As I taught a kid - Rajesh
We slowly earn and accumulate wealth such as money, assets, properties, gold etc. at different stages in life. It is similar to people slowly gathering at different timings to a drama hall, movie hall etc. However, the wealth leaves us quickly not following the order or rate at which it came in. It is similar to people leaving the movie hall quickly and collectively without following the order of entry. When the wealth leaves us, we are disappointed and feel sad. It is similar to people having not feeling fresh whereas tired while leaving a movie hall. Money will not be permanently with us. Its presence with us volatile in nature. Hence, do not attach yourself to money or materialistic stuffs.

Questions that I ask to the kid
Equate money and a drama hall/movie theatre. 
Is money permanent?
How does money leave us?

No comments:

Post a Comment