புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ

குறள் 1323
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
[காமத்துப்பால், கற்பியல், ஊடலுவகை]

பொருள்
புலத்தல் - மனம்வேறுபடுதல்; துன்புறுதல்; வெறுத்தல்; அறிவுறுத்துதல்.
(நெஞ்சொடு புலத்தல் என்ற அதிகாரம் தனியாக உண்டு)

புத்தேள் - புதுமை, புதியவள், தெய்வம், தேவர், வானோர், முதற்கடவுள், தேவலோகம்

நாடு - நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.

உண்டு - உள்ளதன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒருகுறிப்புவினை முற்றுச்சொல்; ஓர்உவமஉருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

உண்டோ - இருக்கிறதா ?

நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை.

நிலத்தொடு - நிலத்துடன்

நீரியைந் தன்னார் - நீர் + இயைந்து + அன்னார்

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

இயைந்து - இயைதல் -  பொருந்துதல்; இணங்குதல் நிரம்புதல் ஒத்தல் 

இயைந்து - உரிசொல் -> இயைபு -> புணர்ச்சி, பொருந்துதல்

அன்னார் - aṉṉār   n. Asbestos; கல்நார்.(வை. மூ.)
அன்னார் - அவர்கள்; They are like. அன்னர்--அன்னார். Such person

அகத்து - (அகம் - உள்),  நெஞ்சத்தில், மனதில்

அகத்து - அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

முழுப்பொருள்
நிலத்தொடு நீர் இயைந்து அன்னார் அகத்துப் புலத்தலின்
நிலத்துடன் நீர் இயர்கையாக பொருந்தி இருப்பதுபோல் இன்பமாக இருக்கிறார்கள் இரு காதலர்கள். அத்தகைய காதலர்கள் ஒருவருக்கொருவர் கொள்ளும் ஊடல் (வேறுபாடுகள், சின்ன சண்டைகள்) ஆனது பேரின்பம் பயக்குமாம்.

நிலத்தோடு நீர் இயற்க்கையாக இருப்பது வெட்பமும் தட்பமும் கூடியிருப்பதாகும். அது இன்பமும் துன்பமும் ஒன்றாக இருப்பதுப்போல் ஆகும்.

புத்தேள் நாடு உண்டோ
(மேற்சொன்ன) அத்தகைய பேரின்பம் தரும் ஒரு இன்ப உலகம் இருக்கிறதா ? இல்லை

குறிப்பு: புத்தேள் நாடு பற்றி திருத்தம் வலையத்தில் வாசிக்கவும் (சுட்டியை சொடுக்கவும்)

ஒப்புமை
”...........................இனத்தின் இயன்ற
இன்னா மையினும் இனிதோ
இனிதெனப் படூஉம் புத்தேள் நாடே” (குறுந். 288:3-5)

“செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே” (குறுந்.40:4-5)

பரிமேலழகர் உரை
இதுவும் அது. 'நிலத்தொடு நீர் இயைந்து அன்னார் அகத்துப் புலத்தலின் - நிலத்தொடு நீர் கலந்தாற்போல ஒற்றுமை உடைய காதலர் மாட்டுப் புலத்தல் போல; புத்தேள் நாடு உண்டோ - நமக்கின்பம் தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ? இல்லை.

விளக்கம் (நீர் தான் நின்ற நிலத்தியல்பிற்றாமாறு போலக் காதலரும் தாம் கூடிய மகளிரியல்பினராகலான், அதுபற்றி அவரோடு புலவி நிகழும் என்பாள், 'நிலத்தொடு நீர் இயைந்தன்னாரகத்து' என்றும், 'அவர் நமக்கும் அன்னராகலின், அப்புலவி பின்னே பேரின்பம் பயவாநின்றது' என்பாள். 'புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ?' என்றும் கூறினாள். உவமம் பயன்பற்றி வந்தது.) ---

மணக்குடவர் உரை
நிலனும் நீரும் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சுடையார்மாட்டுப் புலத்தல்போல, இன்பந்தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ?. நிலத்தோடு நீரியைதலால் அவை வெப்பமும் தட்பமும் கூடியிருக்குமாறு போல இன்பமும் துன்பமும் கூட அனுபவிப்பார் மாட்டென்றவாறு.

மு.வரதராசனார் உரை
நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ?.

சாலமன் பாப்பையா உரை
நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற ஒற்றுமையை உடைய என்னவரோடு ஊடிப் பெறும் இன்பத்தைப் போலத் தேவர்கள் நாட்டு இன்பம் இருக்குமோ?.

No comments:

Post a Comment