நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல்

குறள் 1082
நோக்கினாள்  நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து
[காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல்]

பொருள் 
நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

நோக்கினாள் -  பார்த்தாள், கவனித்தாள், விரும்பினாள்

நோக்கு - கண்; பார்வை; அழகு; கருத்து; அறிவு; பெருமை; விருப்பம்; கதி; விநோதக்கூத்துக்களுள்ஒன்று; ஒருவகைச்செய்யுளுறுப்பு; ஓர்உவமவுருபு.

எதிர் - வருங்காலம்; எதிரிடை; முன்; முன்னுள்ளது; முரண்; கைம்மாறு; இலக்கு; போர்.

நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.
 
தாக்கு - அடி; போர்; படை; வேகம்; பாதிக்கை; சாதனை; குறுந்தடி; இடம்; பெருக்கல்; நெல்வயல்; பற்று; வளமை; ஆணை; நிலவறை; மிகுசுமை; எதிர்க்கை; எதிரெழுகை.

தாக்குதல் - எதிர்த்தல்; மோதுதல்; முட்டுதல்; பாய்தல்; தீண்டுதல்; அடித்தல்; வெட்டுதல்; பற்றியிருத்தல்; எண்கூட்டிப்பெருக்கல்; குடித்தல்; சரிக்கட்டுதல்; உறைத்தல்; கடுமையாதல்; பழிவாங்குதல்; தலையிட்டுக்கொள்ளுதல்; பலித்தல்; பெருகுதல்; பாரமாதல்; நெளித்துப்போதல்.

அணங்கு - தீண்டிவருத்தும்தெய்வப்பெண்; தெய்வப்பெண் பத்திரகாளி தேவர்க்காடும்கூத்து; அழகு விருப்பம் மயக்கநோய்; அச்சம் வருத்தம் கொலை கொல்லிப்பாவை பெண் வடிவு

தானை - படை; ஆயுதப்பொது; ஆடை; மேடைத் திரைச்சீலை; முசுண்டி என்னும் ஆயுதம்.

கொண்டு - முதல்; குறித்து; மூன்றாம்வேற்றுமைச்சொல்லுருபு; ஓர்அசைநிலை.

அன்னது - அன்ன - அத்தன்மையானவை; ஓர் அஃறிணைப் பன்மைக்குறிப்பு வினைமுற்று; ஓர்உவமஉருபு.

உடைத்து - உடைதல் - இருக்கும்


முழுப்பொருள்:
நான் அவளை நோக்கி பார்க்கும் பார்வைக்கு எதிராக அவள் வீசும் பார்வையானது, தான் ஒருத்தி மட்டுமே தீண்டி தாக்கும் சக்தி உடைய ஒரு தெய்வம், துணைக்கு ஒரு படையும் கொண்டு தாக்குவதற்கு ஒப்பானது.

பெண்ணின் பார்வைக்கு உரிய வலிமையை, மிக அருமையாக எடுத்து உரைக்கிறது இக்குறள். வீழ்ந்தவர்கள் அல்லது வீழ்த்தப்பட்டவர்கள் அதிகம் உண்டானதால் தான் என்னவோ, பெண்ணின் கண்கள் ஆயுதங்களுக்கு ஒப்பாக அடிக்கடி கூறப்படுகிறது (வேல் போன்ற விழிகள் ) .

ஒப்புமை
”நோக்குங்கால் நோக்கின் அணங்காக்கும்” (கலி.131.5)
“அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” (கம்ப.மிதிலைக்காட்சி 35)
“நோக்கிய நோக்கெனும்’ (கம்ப.மிதிலைக்காட்சி 36)

“தாக்கணங் காவ தெவன்கொல் அன்னாய்” (ஐங்குறு 23)
“தாக்கணங் கனையார் நோக்குவலைப் பட்டு” (சிலப்.14:160)
“மூப்புடை முதுமைய தாக்கணங்குடைய” (மணி 3:57)
“தாக்கணங் கனையவள் தனத்தில் தைத்தவே” (கம்ப.மிதிலைக்காட்சி.36)

பரிமேலழகர் உரை
(மானுட மாதராதல் தெளிந்த தலைமகன் அவள் நோக்கினானாய வருத்தம் கூறியது.) நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் - இப்பெற்றித்தாய வனப்பினை உடையாள் என் நோக்கிற்கு எதிர் நோக்குதல்; தாக்கு அணங்கு தானைக்கொண்டன்னது உடைத்து - தானே தாக்கி வருத்துவதோர் அணங்கு தாக்குதற்குத் தானையையும் கொண்டு வந்தாற் போலும் தன்மையை உடைத்து. (மேலும், 'அணங்குகொல் ஆய்மயில் கொல்' என்றமையான், இகரச்சுட்டு வருவிக்கப்பட்டது. எதிர் நோக்குதல்என்றமையின், அது குறிப்பு நோக்காயிற்று. வனப்பால் வருந்துதல் மேலும் குறிப்பு நோக்கால் வருந்துதல் கூறியவாறு. 'நோக்கினாள்' என்பதற்கு 'என்னால் நோக்கப்பட்டாள்' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை
இவ்வழகினையுடையவள் எனது நோக்கின் எதிர் நோக்குதல், தானே வருத்தவல்ல தெய்வம் அஞ்சாமல்வரும் தானையைக் கொண்டு வந்தது போலும். தானைக்கு உவமை நோக்கம். இது மெய்கண்டு வருந்துவான் கண் கண்டதனால் வருத்த மிக்கது கூறியது.

மு.வரதராசனார் உரை
நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
என் பார்வைக்கு எதிராக அவள் என்னைப் பார்ப்பது, தானே தாக்கி எவரையும் கொல்லும் ஒரு தெய்வம், தாக்குவதற்குப் படைகளையும் கூட்டி வந்ததது போல் இருக்கிறது.

என்னை தாக்கிவிட்டாய்....!!! (நன்றி: கவிப்புயல் இனியவன்)
நான் பார்த்த நொடியில்
பெண்ணே நீ என்னை
பார்த்தாயே - செத்து
பிழைத்தேனடி -நான் .....!!!

உன்
கண் கண்ணாக இருந்தால்
தப்பி இருப்பேன் - பார்வையோ
அணுமின் கதிர்போல் திரட்டி
என்னை தாக்கிவிட்டாய்....!!!

அன்பே உன் கண் என்ன ..?
சேனைப்படையா ...?
அத்தனையும் கொண்டு என்னை
தாக்கி விட்டாய் .....!!!

No comments:

Post a Comment