அவர்நெஞ்சு அவர்க்காதல்

குறள் 1291
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுபுலத்தல்]

பொருள்
அவர் - அவன், அவள் என்பதன் பன்மைச்சொல்; ஒருவரைக் குறிக்கும் பன்மைச்சொல்.

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு

அவர்நெஞ்சு -> அவருடைய நெஞ்சு / மனம்.

அவருக்கு - 
அவர் - அவன், அவள் என்பதன் பன்மைச்சொல்; ஒருவரைக் குறிக்கும் பன்மைச்சொல்.

ஆதல் - ஆவதுஎனப் பொருள் படும் இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்

அவர்க்காதல்  -> அவருக்கு ஆதல் -> அவருக்கு உடம்படுதல் -> அவர் சொன்னப்படி கேட்கிறது. அதாவது நம்மை நினைக்காது.

கண்டும்  - காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்

கண்டும்  -> பார்த்தும்.

எவன் -
யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல்.

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு

எவன்நெஞ்சே -> ஆனால் எதற்கு நெஞ்சே ?

நீ - ஒர்உயிர்மெய்யெழுத்து(ந்+ஈ); முன்னிலைஒருமைப்பெயர்.
எமக்கு - எனக்கு
நீஎமக்கு  -> நீ எனக்கு.

ஆகுதல் - ஆதல்

ஆகாது - அல்ல ; நிகழாது; முடியாது; அமையாது; 

ஆகா தது -> ஒத்துழைக்கவில்லை.


முழுப்பொருள்
தலைமகள் தன் நெஞ்சிடம் புலம்புகிறாள்:

அவர் என்னை நினைக்கவில்லை. அவர் என்னை காண வரவில்லை. அவர் சொன்னபடி அவர் நெஞ்சு கேட்கிறது. அதைப் பார்த்துமா நீ அவரை நினைத்துக்கொண்டு இருக்கிறாய். ஒருவர் தானாக அறிந்து செயல்பட வேண்டும். அப்படி செயல் பட வில்லை என்றாலும் குறைந்தது அடுத்தவர் செய்வதை பார்த்தாவது செய்ய வேண்டும். நீ அதையும் செய்யவில்லை. அவரை நினைத்து நான் எவ்வளவு துன்பப்படுகிறேன். ஆனால் நீ என்னோடு இல்லாமல் அவரை நினக்கிறாய். ஏன் நெஞ்சே இப்படி செய்கிறாய் ? - என்று அவருக்காகக் காத்திருக்கும் பொழுது தன் நெஞ்சுடன் செல்லக் கோபம் கொள்கிறாள்.

இங்கு நாம் மற்றொன்றையும் நோக்க வேண்டும். ஒரு பெண் தன் தலைவன் அவளை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள். அவளை காண வர வேண்டும் என்று எப்போதும் விரும்புவாள். அது தான் ஒரு பெண்-இன் நெஞ்சமாகும்.

(அதனால, மனைவி (காதலி) போன் செய்யனும். அவுங்க நீங்க என்ன பத்தி அக்கரையே படலனு சொன்னா கோவம் கொள்ள கூடாது - இது இந்த பதிவாசிரியரின் சொந்த சரக்கு)

குறட் கருத்து (நன்றி: திரு.தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
மாற்றிக் கொள்ள நினைந்தானா அவன் தன் நெஞ்சை
   மயக்குகின்ற வேலை மட்டும் செய்த மகன்
ஆற்றிக்  கொள்ள வழியின்றி அவன் நினைவில்
   அரற்றுவதும் பிதற்றுவதும்  மீண்டும் மீண்டும்
தேற்றுதற்கு ஆளின்றித் தவிப்பதுவும்
   தினம் வேண்டாம் சொல்வதை நீ கேட்பாய் நெஞ்சே
மாற்றமின்றி என்னிடமே இருந்திடு    நீ அவன்
   மயக்கு நெஞ்சு அவனிடத்தே இருந்தால்  போல

ஒப்புமை
”புலப்பென்யான் என்பேன்மன் அந்நிலையே அவற்காணின்
கலப்பென் என்னுகிக் கையறு நெஞ்சே” (கலி 67:8-9)

“ஊடுவென் என்பேன்மன் அந்நிலையே அவற்காணின்
கூடுவென் என்னுமிக் கொள்கையில் நெஞ்சே” (கலி 12-3)

“துனிப்பென்யான் என்பேன்மன் அந்நிலையே அவற்காணின்
தனித்தே தாழும் இத் தனியில் நெஞ்சே” (கலி 16-7)

“நிற்காணின்
கடவுபு கைத்தங்கா நெஞ்சென்னும் தம்மோ
டுடன் வாழ் பகையுடை யார்க்கு”  (கலி 77:22-4)

பரிமேலழகர் உரை
[அஃதாவது , காரணம் உண்டாய வழியும் புலக்கக் கருதாது , புணர்ச்சி விதும்புகின்ற நெஞ்சுடனே தலைமகள் புலத்தலும் ,தலைமகன் புலத்தலும் ஆம் . அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]

(தலைமகன்கண் தவறுண்டாய வழியும் புலவி கருதாத நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.) நெஞ்சு - நெஞ்சே; அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் - அவருடைய நெஞ்சு நம்மை நினையாது அவர்க்காய் நிற்றல் கண்டு வைத்தும்; நீ எமக்கு ஆகாதது எவன் - நீ எமக்காய் நில்லாது, அவரை நினைத்தற் காரணம் யாது? (அவர்க்கு ஆதல் - அவர் கருதியதற்கு உடம்படுதல். எமக்காகாதது என்றது, புலவிக்கு உடம்பாடாமையை. 'ஒரு கருமத்தைத் தாமாக அறிந்து செய்யமாட்டாதார் செய்வாரைக் கண்டாயினும் செய்வர். நீ அதுவும் செய்கின்றிலை' என்பதாம்.).

மணக்குடவர் உரை
அவருடைய நெஞ்சம் அவர்வழி நின்று நம்மை நினையாமையைக் கண்டு வைத்தும் நெஞ்சே! நீ எம்வழி நில்லாது அவரை நினைத்தல் யாதினைக் கருதியோ?. இது தலைமகள் வருங்காலத்து வாராத தலைமகனை உள்ளிய நெஞ்சோடு புலந்து கூறியது.

சாலமன் பாப்பையா உரை
நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன?.

No comments:

Post a Comment