தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே

குறள் 1191
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.
[காமத்துப்பால், கற்பியல், தனிப்படர்மிகுதி]

பொருள்
தாம் அவர்கள்; மரியாதை குறிக்கும் முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை
வீழ்தல் - ஆசை; ஆசைப்பெருக்கம்; மேவல்; வீழுதல்; காண்க:விழுதல்; நீங்குதல்.

தாம்வீழ்வார் -> தாமாக காதலுக்கு வீழ்வர் (தானும் அவளை/அவரை காதலிப்பர்).

தம் - ஒருசாரியை இடைச்சொல்; மூச்சடக்குகை; மூச்சு.

தம்வீழப் -> தமக்காக அவரும்/அவளும் வீழ்வர் (அவரும்/அவளும் காதலிப்பர்).

பெறுதல் -  அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.
பெற்றவர் -> அப்படி பட்ட மனைவியையோ / கணவனையோ பெற்றவர்.

பெற்றாரே -> பெறுவர்.

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை

காமத்துக் -> காமம் + அத்து -> இன்பத்து எல்லைகளில் ((உள்ள / மெய்) புணர்ச்சியை  குறிக்கும்).

அத்து - attu   s. (Tel.) boundary, limit, எல்லை. அத்துமீறிச்செல்ல, to transgress the boundary.
அத்து -> எல்லை.
அத்து - இசைப்பு; சிவப்பு செவ்வை துவர் அரைஞாண் அரைப்பட்டிகை தைப்பு; அசைச்சொல், ஒருசாரியை.

காழ் - மரவயிரம், மனவுறுதி; கட்டுத்தறி; தூண்; ஓடத்தண்டு; இருப்புக்கம்பி; யானைப்பரிக்கோல்; கதவின்தாழ்; விறகு; காம்பு; கழி; இரத்தினம்; முத்து; பளிங்கு; பூமாலை; மணிவடம்; நூற்சரடு; விதை; கொட்டை; கருமை; குற்றம்.

இல் - இல்லை

காழில் -> விதை இல்லாத -> இடையுறு இல்லாத (ஒரு பழம் உண்ணும் பொழுது விதை இடையுறாக இருக்கும்) / தடையின்றி.

கனி -> பழம்; கனிவு; சாரம்; இனிமை; கனிச்சீர், மூவகைச்சீரில்இறுதியிலுள்ளநிரையசை; பொன்முதலியனஎடுக்கும்சுரங்கம்..

முழுப்பொருள்
தலைமகளும் காதலித்து தலைமகனும் ஒருவரை ஒருவர் ஒருங்கே காதலிக்கப் பெற்ற இருவரும் இன்பதை (இன்பத்தின் எல்லைகளுக்குள்) நுகரும் போது எந்த இடையுறுமின்றி நுகர்வர். சுவைக்கும் பழத்தில் விதை இல்லாமல் இருந்தால் எந்த இடையுறும் இன்றிப் பழத்தை சுவைக்கலாம். அதாவது ஒருவருக்கொருவர் (மன)வேறுபாடு இன்றி இருப்பது. ஆதலால் தான் காமத்துக் காழில் கனியை அவர்கள் பெறுவார்கள் என்று திருவள்ளுவர் கூறுகிறார். 

இருவரில் ஒருவர் ஒருங்கே இல்லாவிடாலும் விதை வந்து இடையுறு செய்யும். அதனை களைய நேரம் எடுக்குமாம்.

ஒப்புமை
“யாழ்கொன்ற கிளவி யாள் தன் அமிழ்து றழ் புலவி நீக்கிக்
காழின்றிக் கனிந்த காமக் கொழுங்கனி நுகர்ந்து” (சீவக.2089)

மற்றுமொருப் பொருள் (மூலம் : தினமணி)
இவர்கள் இருவருக்கும் ஒருங்கே காதல் வந்தால் இவர்களுக்கு இடையில் ஊடல் இருக்காது. கூடலுக்கு முன்பு ஊடல் இல்லை என்றால் அதில் அவ்வளவு இன்பம் இருக்காது. ஆதலால் சற்று ஊடலும் தேவை. 

பரிமேலழகர் உரை
[அது , தனியாகிய படர் மிகுதி என விரியும் .அஃதாவது , படர் மிகுதி தலைவன்கண் இன்றித் தன்கண்ணதேயாதல் கூறுதல் .அறமும் பொருளும் நோக்கிப் பிரிதலின் , அவன்கண் இல்லையாயிற்று . இது , பசப்புற்று வருந்தியாட்கு உரியதாகலின் , பசப்புறு பருவரலின் பின் வைக்கப்பட்டது.]

காதலரும் நின்னினும் ஆற்றாராய்க் கடிதின் வருவர்; நீ அவரோடு பேரின்பம் நுகர்தி,' என்ற தோழிக்குச் சொல்லியது. தாம் வீழப் பெற்றவர் - தம்மாற் காதலிக்கப்படும் கணவர் தம்மைக் காதலிக்கப் பெற்ற மகளிர்; பெற்றோரே காமத்துக் காழ்இல் கனி - பெற்றாரன்றே காமநுகர்ச்சி என்னும் பரல் இல்லாத கனியை.

விளக்கம் (காமம்: ஆகுபெயர். 'அத்து' அல்வழிக்கண் வந்தது, முன்னை நல்வினை இல்வழிப் பெறப்படாமையின் 'பெற்றார்' என்றும், அவரால் தடையின்றி நுகரப்படுதலின் 'காழில் கனி' என்றும் கூறினாள். 'நம் காதலர் பிரிதலேயன்றிப் பின் வாராமையும் உடைமையின் அக்கனியாம் பெற்றிலேன்,' என்பதாயிற்று.) 

காமம் என்பதை மரத்தின் பெயராகக் கொள்ளின், அத்துச்சாரியை வேற்றுமை வழியில் வந்ததேயாம். ஏகாரம் தேற்றம்.

மணக்குடவர் உரை
தாம் காதலித்தாரால் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர் காம நுகர்ச்சியின்கண் பரலில்லாததோர் பழத்தைப் பெற்றவராவர். இது தடையின்றி நுகரலாமென்றது.

சாலமன் பாப்பையா உரை
தாம் விரும்புபவராலேயே விரும்பப்பட்ட பெண்கள்தாம் காதல் இன்பம் என்னும் விதை இல்லாத கனியைப் பெற்றவர் ஆவர்.

தான் காதலில் வீழ்ந்துவிட்ட கணவன் தம்மைக் காதலிக்கப்பெற்ற மகளிர் காமநுகர்ச்சி என்னும் வித்தால்லாத(அதாவது இடறில்லாத,குறைவில்லாத) பழத்தை கொண்டது போலன்றோ

"காய்கறி வாங்கிட்டு வரும்போது அப்படியே ஒரு தர்பூசணி பழம் வாங்கிட்டு வாங்க! வெயிலுக்கு இதமா இருக்கும்." என்றால் என் மனைவி.

"வெயிலுக்கு இதமாத்தான் இருக்கும்; ஆனா அதுல இருக்குற கறுப்பு விதைகளை எடுத்துட்டு சாப்பிடணும்! அதுதான் கொஞ்சம் கஷ்டம்! முன்னாடியெல்லாம் திராட்சையில விதை இருக்கும்.அத சாப்பிடும்போது விதைய துப்பிட்டு சாப்பிடணும்.பிறகு (Seedless Grapes). கண்டுபிடிச்சாங்க இப்ப நிம்மதியா சாப்பிட முடியுது. சீதாப்பழம் சாப்பிடறது ரொம்ப நியூசன்ஸ்! அதுல இருக்குற விதைய எடுத்துட்டு சாப்பிடறதுக்குல்ல பிராணனே போயிடும்! பழம்னா, உரிச்சோமா, சாப்பிட்டோமான்னு இருக்கணும். வாழைப்பழம் மாதிரி."

"அது கூட உரிச்சு சாப்பிடறது கொஞ்சம் கஷ்டம்தானே! யாராவது உரிச்சு கொடுத்தா வசதியா இருக்கும்! இல்லீங்களா?"

" என்ன*? கிண்டலா? என்னை வாழைப்பழ சோம்பேறின்னு சொல்றியா?"

"ஐயையோ! அப்படி நான் சொல்லலையே! எதையும் கஷ்டப்படாமெ அனுபவிக்கனும்னு நினைக்கிறீங்களே! அதைத்தான் சொன்னேன்!"

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.(1191)

பழத்தை சுவைக்கும்போது, இடையில் விதைகள் வருவது இடையூறாக இருக்கும்.கணவன் மனைவி இருவரும் உடல், உள்ளம், உயிர் என்னும் மூன்றாலும் ஒன்றுபட வேண்டும். அப்படி ஒன்றுபடாத நிலையில் அவர்களை இணைத்து வைத்திருக்கும் கவர்ச்சி குறையும். அதனால் மனவேறுபாடு தோன்றும். அந்த வேறுபாடு புணர்ச்சி என்னும் கனியைச் சுவைக்கும்போது விதைகள் போல வந்து இடையூறு செய்யும்.

No comments:

Post a Comment