கண்உள்ளார் காத லவராக

குறள் 1127
கண்உள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து"
[காமத்துப்பால், களவியல், காதற்சிறப்புரைத்தல்]

பொருள்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

உள்ளார் -உடையவர்

காதலவராககாதலர் - கணவன், தோழன், மகன் என்ற மூன்று நட்பாளர்கள்.

ஆக - ஆகுதல் - ஆவது என்பது; ஆதல்

கண்ணும் கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

எழுதுதல் - எழுத்துவரைதல்; ஓவியம்வரைதல்; இயற்றுதல்; விதியேற்படுத்துதல்; பாவைமுதலியனஆக்குதல்; அழுந்தப்பதித்தல்; பூசுதல்.

எழுதேம் - (மை) எழுத மாட்டேன்

கரப்பு - மறைக்கை; களவு; வஞ்சகம்; மீன்பிடிக்குங்கூடை, பஞ்சரம்முதலியன; மத்து; கரப்பான்பூச்சி.

கரப்பாக்கு -  தெரியாமல் மறைந்துவிடுவார் (கண்ணில் இமைக்கும் நேரத்துக்கு)

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

முழுப்பொருள்
என் காதலர் என் கண்களுக்கு உள்ளே குடி உள்ளதால், நான் என் கண்களுக்கு மை அணிவது இல்லை. மை போடும் பொழுது கண் இமைகளை மூட வேண்டி வருமே. அக்கணம் என் காதலர் மறைந்து விடுவாரே! 

இடைவிடாது காணப்படுகின்றவரைப் பிரிந்தாரென்று கருதுவது எங்ஙனந் தகும் என்பதாம்!

ஒப்புமை
”கண்ணுள்ளார் நுங்காதலர் ஒழிக்காமல் ஈங்கென
உண்ணிலாய வேட்கையால் ஊடினாரை” (சீவக.72)

“சிறுவா ளுகிருற் றுறாமுன்னும் சின்னப் படுங்குவளைக்
கெறிவாள் கழித்தனள் தோழி எழுதின் கரப்பதற்கே
அறிவாள் ஒழிகுவது அஞ்சனம் அம்பல வர்ப் பணியார்
குறிவாழ் நெறிசெல்வர் அன்பர்என் றம்ம கொடியவளே” (திருச்சிற் 334)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) காதலவர் கண் உள்ளாராகக் கண்ணும் எழுதேம் - காதலர் எப்பொழுதும் எம் கண்ணின் உள்ளார் ஆகலான், கண்ணினை அஞ்சனத்தால் எழுதுவதும் செய்யேம்; கரப்பாக்கு அறிந்து - அத்துணைக் காலமும் அவர் மறைதலை அறிந்து. (இழிவு சிறப்பு உம்மை மாற்றப்பட்டது. 'கரப்பாக்கு' என்பது வினைப்பெயர். வருகின்ற 'வேபாக்கு' என்பதும் அது. 'யான் இடை ஈடின்றிக் காண்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறு என்னை'? என்பது குறிப்பெச்சம்.).

மணக்குடவர் உரை
எங்காதலவர் கண்ணுள்ளார்: ஆதலானே கண்ணும் மையெழுதேம்: அவர் ஒளித்தலை யறிந்து. எப்பொழுதும் நோக்கியிருத்தலால் கோலஞ்செய்தற்குக் காலம் பெற்றிலேனென்றவா றாயிற்று.

மு.வரதராசனார் உரை
எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்!.

சாலமன் பாப்பையா உரை
என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன்.

No comments:

Post a Comment