Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அடுத்தது காட்டும் பளிங்குபோல்

குறள் 706
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் 
கடுத்தது காட்டும் முகம்
[பொருட்பால், அமைச்சியல், குறிப்பறிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அடு-க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. [used with the accusative.] To ap proach, approximate, come in contact with, கிட்ட. 2. To be near, close, adjacent, prox imate, to propinquate, சேர.
அடுத்தது - ஒரு சேர மிக அருகாமையில்
காட்டும் - To reflect, as a mirror or water;பிரதிபலிக்கச்செய்தல்
பளிங்கு - படிகம்; கண்ணாடி; கருப்பூரம்; சுக்கிரன்; தோணிக்கயிறு; புட்பராகம்; காண்க:அழுங்கு.
போல்  - போன்று
நெஞ்சம் - நம் நெஞ்சம் தனை
கடுத்தது -  To be like, to resemble, ஒக்க
காட்டும்  - To reflect, as a mirror or water;பிரதிபலிக்கச்செய்தல்
முகம் - முகம்

முழுப்பொருள்
ஒரு பளிங்கு அதற்கு அடுத்த உள்ள பொருளை உள்ளதுபோல பிரதிபலிக்கச்செய்யும். அதுவே பளிங்கின் தன்மையாகும். கண்ணாடியின் தன்மையும் அதுவே.

அதேபோல நெஞ்சின் எண்ணங்களை மிக நிகராக தன் முகம் காண்பித்துவிடும் என்கிறார். வாய் ஒன்று சொன்னாலும் முகம் உண்மையை சொல்லிவிடும்.

ஆதலால் ஒருவர் உரையாடும் பொழுது அவருடைய முகம்தனை பார்க்க வேண்டும். அப்போழுது அவர் பொய் உரைக்கிறாரா உண்மைபோல பொய் தனை உரைக்கிறாரா என்ற குறிப்புகளை முகம் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

குறிப்பு: அனைவராலும் உண்மைபோல பொய் தனை கூறும் பொழுது குறிப்பு அறிந்து விட முடியாது. அதற்கு தேர்ந்த திறனும் வேண்டும்.

"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்று பழமொழி உண்டு என்பதை அனைவரும் அறிந்ததே.

“ஒளிப்பினும் உள்ளம் பரந்ததே கூறும் முகம்” என்றும், “ஒருத்தன் முகனுரைக்கும் உள்நின்ற வேட்கை” என்று நான்மணிக்கடிகைப் பாடலும், “அகத்தையெல்லாம் முகத்தினி உணர்ந்து” என்று பெருங்கதைப் பாடல் வரியும் கூறுகின்றன.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”ஈர்ந்தநுண் பளிங்கெனத் தெளிந்த வீர்ம்புனல்
பேர்ந்தொளிர் நவமணி படர்ந்த பித்திகை
சேர்ந்துழிச் சேர்ந்துழி நிறத்தைச் சேர்தலான்
ஓர்ந்துணர் வில்லவர் உள்ளம் ஒப்பது” (கம்ப.பம்பைப்.2)

“முன்னம் காட்டி முகத்தின் உரையா” (அகநா 5:19)

“முன்னம்முகத்தின் உணந்தவர்” (புறநா 3:250)

“முன்னம் முகம்போல முன்னுரைப்ப தில்” (நான்மணி 46)

“ஒருத்தன், முகனுரைக்கும் உள்நின்ற வேட்கை” (நான்மணி 69)

“ஒளிப்பினும் உள்ளம், பரந்ததே கூறும் முகம்” (பழமொழி 4)

“நோக்கி, முகனறிவார் முன்னம் அறிப” (பழமொழி 301)

“அகத்ததை எல்லாம் முகத்தினி துணர்ந்து”  (பெருங் 3.14:238)

“அற்றந்தான், மனங்கள் போல முகமும் மறைக்குமே” (கம்ப.உலாவியல் 29)

“நல்லவன் முகமே நம்பி நடந்திலன் என்னும் மாற்றம்
சொல்லும்” (கம்ப.தைலமாட்டு 59)

“சிந்தனை முகத்தில் தேக்கி” (கம்ப.குகப்.35)

”உள்ளத்தின் உள்ளத்தை உறையின் முந்துற
மெள்ளத்தம் முகங்களே விளம்பு மாதலால்” (கம்ப.விபீடணன் 91)

“அழிந்தது பிறவி யென்னும் அகத்தியல் முகத்திற் கட்ட” ((கம்ப.விபீடணன் 141)

பரிமேலழகர் உரை
அடுத்தது காட்டும் பளிங்கு போல் - தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்கு போல்; நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும் - ஒருவன் நெஞ்சத்து மிக்கதனை அவன் முகம் தானே கொண்டு காட்டும். ('அடுத்தது' என்பது ஆகுபெயர். கடுத்தது என்பது 'கடி' என்னும் உரிச்சொல் அடியாய் வந்த தொழிற் பெயர். உவமை ஒரு பொருள் பிறிதொரு பொருளின் பண்பைக் கொண்டு தோற்றுதலாகிய தொழில் பற்றி வந்தது.)

மணக்குடவர் உரை
தன்னையடுத்த வண்ணத்தைக் காட்டுகின்ற பளிங்கைப்போல நெஞ்சத்து மிக்கதனை முகம் காட்டும்.

இது முகம் நெஞ்சத்து வெகுட்சி யுண்டாயின் கருகியும் மகிழ்ச்சியுண்டாயின் மலர்ந்தும் காட்டுமென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர்  உரை
அடுத்தது காட்டும் பளிங்குபோல்-தன்னையடுத்த பொருளின் வடிவத்தையும் நிறத்தையும் தன்னுட்காட்டும் கண்ணாடி போல; நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும்- ஒருவர் மனத்தில் தோன்றிய கருத்தை அவர் முகமே காட்டிவிடும்.

'அடுத்தது' ஆகு பொருளது. ஒரு கருத்து ஒருவர் உள்ளத்தில் முன்னில்லாது புதிதாய்த் தோன்றிய மிகையாதலின்,'கடுத்தது' எனப்பட்டது. கடுத்தல் மிகுதல். இவ்வுவமையில், தொடர்பினால் ஒன்றையொன்று காட்டுதல் பொதுத்தன்மையாம். பளிங்கு புறப்பொருளை அகத்திற் காட்டுவது; முகம் அகப்பொருளைப் புறத்திற் காட்டுவது.

மு.வ உரை
தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்

சாலமன் பாப்பையா உரை
தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கினைப்போல் ஒருவனது மனத்தே நிகழ்வதை அவன் முகம் காட்டும்.

Thirukkural - Management - Managing Emotions
Valluvar uses a simile in Kural 706 to emphasize the importance of managing personal emotions and reading others' emotions through their facial expressions as a skill and a quality for people who deal with people. A mirror reflects an object that is opposite to that mirror. Similarly, a person's face reflects the dominant thoughts in the minds of that person. Face is the index of mind.

So, let us learn to manage the negative expressions on our faces and understand others' expressions.

As a mirror shows what is in front 
So the face reveals the full mind. 

English Meaning - As I taught a kid - Rajesh
A polished marble/granite (floor) would mirror the face in front of it. That's the nature of a marble/granite. Marble/granite doesn't mirror the image exactly like how a mirror mirrors. But, it is relatively closer to it. Like marble surface mirrors, Similarly a face would mirror the thoughts/feelings of a person. Hence a minister or the person working closely to the king should closely watch the kings face, body language, speech etc. He should pick up ques from face and act accordingly 

Questions that I ask to the kid
What does a face reflect? What does it mean (or how should we use that)?

இளையர் இனமுறையர் என்றிகழார்

குறள் 698
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்
[பொருட்பால், அமைச்சியல், மன்னரைச் சேர்ந்தொழுதல்]

பொருள்
இளையர் - இளைஞர்; பணியாளர்.
இன - இனம் - s. a kindred, relationship, சுற்றம்; 2. class, sort, குலம்; 3. company, flock, herd, திரள்; 3. equality, ஒப்பு; 4. individual, ஆசாமி; 5. brotherhood, fellowship, society, company.
முறை - நீதி; அடைவு; நியமம்; ஆள்மாறிமாறிவேலைசெய்யும்நியமம்; தடவை; பிறப்பு; ஒழுக்கம்; உறவு; உறவுமுறைப்பெயர்; அரசநீதி; பழைமை; ஊழ்; கூட்டு; நூல்; தன்மை; காண்க:முறையீடு; கற்பு.
என்று - என்று எண்ணி
இகழ் -  இகழ்ச்சி, அவமதிப்பு; குற்றம்; விழிப்பின்மை; வெறுப்பு
இகழார் - அவமதிக்காதவர்கள்
நின்று - எப்பொழுதும்
ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ்.
ஒளியொடு - புகழோடு மதிப்போடு
ஒழுகு - Multiple matches found. Best match is displayed
III. v. i. leak, fall by drops, drop through; 2. run in a course, flow, பாய்; 3. walk morally, நெறிப்படி நட; 4. increase, மிகு; 5. grow, வளர்; 6. be arranged in due order, நேர்மைப் படு.
ஒழுகப்படும் - நெறிப்படி நடக்க வேண்டும்


முழுப்பொருள்

நாம் அமைச்சராக இருக்கும் இடத்தில் அல்லது வேலை செய்யும் இடத்தில் அல்லது நிர்வாத்தில் ஒரு துணை நிலை ஊழியாராக பணிபுரியும் இடத்தில் நமக்கு மேலே இருப்போர் நம்மில் சிறிய வயதுக்காரர், அனுபவம் குறைவாக இருப்பவர், அல்லது நமது உறவுகாரர், எனக்கு தெரிந்தவர் என்று எண்ணாமல் அவரை இகழாமல் அவமதிக்காமல் வேலை செய்யவேண்டும். அவ்விடத்தில் நம்மைவிட பெரியோர் இருந்தால் எப்படி நெறிப்படி வேலை செய்வோமோ அதேபோல இந்த இளைஞரிடமும் அல்லது உறவுகாரரிடமும் வேலை செய்யவேண்டும். அதுவே ஒரு அமைச்சருக்கு சிறந்ததாகும்.


உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்பதை இக்குறளுக்கும் பொருத்திப் பார்க்கலாம். இவன் வெல்லத்தக்க இளைஞனே என்று வெற்றுரை கூறும் வேந்தரை வென்றழிப்பேன் என்ற பாண்டியன் நெடுஞ்செழினது சூளுரைக்கும் போர் முரசப் புறநானூற்றுப் பாடலொன்று, 
“நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் 
இளையன் இவனென வுளையக் கூறி” (புறநா 72:2) என்னும் வரிகளைக் கொண்டது. 
”நம்மிற், பொருநனும் இளையன்” (புறநா 78:5-6)

இளையர் என்று நினைக்கக்கூடாதென்பதைக் கூறும் பல பாடல்களில், இவ்வதிகாரத்தின் முதற்குறளுக்கே மேற்கோளாகச் சொல்லப்பட்ட ஆசாரக்கோவை பாடல் மீண்டும் கவனிக்கத்தக்கது.

“அளையுறை பாம்பும் அரசும் நெருப்பும் 
முழையுறை சீயமும் என்றிவை நான்கும்
இளைய வெளிய பயின்றெனவென் றெண்ணி 
இகழின் இழுக்கம் தரும்” (ஆசாரக் 84)

கடுகு சிறுத்தாலும், காரம் குறைவதில்லையே. இளையோன் என்பதும், உறவினன் என்பது, சபையிலோ, ஒரு நிருவாகத்திலோ உதவாதவை.

“சீர்த்தகு மன்னர் சிறந்தனைத்தும் கெட்டாலும்
நேர்த்துரைத் தெள்ளார் நிலைநோக்கிச் - சீர்த்த
கிளையின்றிப் போஒய்த் தனித்தாய்க் கண்ணும்
இளைதென்று பாம்பிகழ்வா ரில்” (பழமொழி 383)

“வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி
ஒளியோடு வாழி ஊழிதோ றூழி” (மணி 19:127-8)


பரிமேலழகர் உரை
இளையர் இன முறையர் என்று இகழார் - இவர் எம்மின் இளையர் என்றும், எமக்கு இன்ன முறையினையுயடையர் என்றும் அரசரை அவமதியாது; நின்ற ஒளியொடு ஒழுகப்படும் - அவர் மாட்டு நின்ற ஒளியொடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும். (ஒளி, உறங்காநிற்கவும் தாம் உலகம் காக்கின்ற அவர் கடவுள்தன்மை. அதனோடு பொருந்த ஒழுகலாவது, அவர் கடவுளரும் தாம் மக்களுமாய் ஒழுகுதல். அவ்வொளியால் போக்கப்பட்ட இளமையும் முறைமையும் பற்றி இகழ்வராயின், தாமும் போக்கப்படுவர் என்பது கருத்து.)

மணக்குடவர் உரை
இவர் நமக்கு இளையரென்றும் இத்தன்மையாகிய முறையரென்றும் இகழாது அவர் பெற்றுநின்ற தலைமையோடே பொருந்த ஒழுக வேண்டும்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இளையர் இனமுறையர் என்று இகழார்-இவர் எமக்கு இளையவர் என்றும், எமக்கு இன்ன முறையினர் என்றும், மதிப்புக் குறைவாகக் கருதாது; நின்ற ஒளியோடு ஒழுகப்படும்- அரசரிடத்து அமைந்துள்ள தெய்வத் தன்மையொடு பொருந்த ஒழுகுதல் வேண்டும்.

முன்னறி தெய்வங்களான பெற்றோர் தவிர, வேறெந்த உறவினரும் இனமுறைபற்றி எளிமையாகக் கருதாது, மற்றக் குடிகள் போன்றே அரசரைத் தெய்வமாகப் போற்றவேண்டு மென்பது, தொன்று தொட்ட தமிழ்மரபு. ஆயின், கணவன் உயிர்வாழ்ந்திருக்கும் போது மனைவி அரசாளுதல் தமிழ்மரபன்றாதலின், மேனாட்டு முடிசூட்டு விழாவிற்போல் கணவன் மனைவிக்கு முன் மண்டியிட்டு நின்ற வொளியோ டொழுகல் தமிழகத்தில் இல்லை. ஐம்பூதங்களுள் ஒன்றான தீ தெய்வத்தன்மையுள்ளதென்று கருதப்பட்டதனாலும், அரசன் துன்பவிருளையும் அகவிருளையும் போக்குவனாதலாலும், அரசனின் தெய்வத்தன்மையை 'ஒளி' என்றார்.

'உறங்கு மாயினும் மன்னவன் றன்னொளி
கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால்
இறங்கு கண்ணிமை யார்விழித் தேயிருந்
தறங்கள் வௌவ வதன்புறங் காக்கலார்."

என்று திருத்தக்க தேவருங் கூறுதல் காண்க(சீவக.248).
அரசன் அன்று கொல்லுந் தெய்வமாதலின், அரசரைப்போற்றாதவர் அன்றே அழிக்கப்படுவார் என்பதாம். 'படும்' என்பது இங்கு335-ஆம் குறளிற்போல் 'வேண்டும்' என்னும் பொருளதாம்.

'இகழார்' எதிர்மறை முற்றெச்சம்.

மு.வ உரை
(அரசரை) எமக்கு இளையவர், எமக்கு இன்ன முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஆட்சியாளருடன் பழகும்போது இவர் என்னைக் காட்டிலும் வயதில் சிறியவர்; இவர் உறவால் எனக்கு இன்ன முறை வேண்டும் என்று எண்ணாமல், ஆட்சியாளர் இருக்கும் பதவியை எண்ணி அவருடன் பழகுக.

என்றும் ஒருவுதல் வேண்டும்

குறள் 652
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை
[பொருட்பால், அமைச்சியல், வினைத்தூய்மை]

பொருள்
என்றும் - எல்லா நேரங்களிலும் எல்லா காலங்களிலும் எல்லா செயல்களிலும் எல்லா எண்ணங்களிலும் எல்லா இடங்களிலும்

ஒருவுதல் - விடுதல்; நீங்குதல்; கடத்தல்; ஒத்தல்.

வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை.

வேண்டும் - அவா, பெருவிருப்பம்

புகழ் - துதி; கீர்த்தி; அருஞ்செயல்; அகத்தி; வாகை.

புகழொடு - புகழையும்

நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.

பயத்தல் - விளைதல்; உண்டாதல்; பலித்தல்; கிடைத்தல்; படைத்தல்; பெறுதல்; கொடுத்தல்; பூத்தல்; இயற்றுதல்; நிறம்வேறுபடுதல்; அச்சமுறுதல்.

பயவா - பயக்காத, தாராத

வினை - தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

முழுப்பொருள்

பெரும்பயன் இல்லாத சொல்” என்று சிந்தனையும், சொல்லையும் பயனுக்கு தொடர்பு படுத்திய வள்ளுவர், செயலுக்கு என்ன சொல்கிறார் என்பதே இக்குறள்.

எல்லா நேரங்களிலும் காலங்களிலும், செயல்களிலும் எண்ணங்களிலும் இடங்களிலும் நாம் விருப்பத்துடன் விட வேண்டிய ஒதுங்கி இருக்க வேண்டிய செயல்கள் உண்டு. அவை புகழையும் பயனையும் விளைவாக பயக்காத செயல்கள். புகழும் நன்மையும் சேர்ந்து வருவது. செய்யும் வினையானது அறவழிகளில் செய்யப்பட்டிருந்தாலே நடக்கும். 

இங்கே திருவள்ளுவர் புகழ் என்று சொல்லி இருக்கலாம் ஆனால் சில செயல்கள் புகழ் தரும் ஆனால் நன்மை தராது அல்லது அறம் அல்லாதது. உதாரணமாக மனிதன் ஆடம்பரமாக செய்யும் அனைத்து செயல்களுமே (ஏன் ஆடம்பரமாக செய்யப்படும் சில திருமணங்கள் கூட). 

அதேபோல திருவள்ளுவர் நன்றி என்று சொல்லி இருக்கலாம். ஏன் என்றால் சில செயல்கள் சிலருக்கு நன்மை பயவிக்கும். ஆனால் அவை அறம் அல்லாத செயல்களாக இருக்கும். அது புகழ் தராது. அதேபோல சிலர் சுயநலமாக தனக்கு தானே எல்லாவற்றையும் செய்துகொள்வார்கள். அது தனக்கு பயன் தரும் ஆனால் புகழ் தராது. [தனக்கு செய்துக்கொள்ள கூடாது என்று அல்ல. எல்லாவற்றையும் தனக்கு மட்டுமே செய்துக்கொள்ளும் எண்ணம் நல்ல குணம் அல்ல என்பது தான்]

சரி, ஒன்றை விடுவதால் பயன் என்ன? அதற்கு பதில் ”குறள் 341 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். என்பதை நினைவில் கொள்க

ஒருவிதத்தில் இக்குறளை பார்த்தால் prioritization (செயல் முன்னுரிமை) எனலாம். புகழும் நன்மையும் வராத ஒரு செயலை விட்டுவிடுக. புகழும் நன்மையும் வரும் செயல்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதானால் தான் ஒரு செயலை தவம் போல் செய்யவேண்டும். இதனை கீழ்க்காணும் குறளில் காணலாம். தவம் செய்யும் பொழுது தானாக தேவையில்லாதவற்றில் இருந்து நீங்கி இருக்க வேண்டும்.

ஆத்திச்சூடி-யில் ஔவையார் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்
அறம் செய விரும்பு
அழகு அலாதன செய்யேல்
நன்மை கடைப்பிடி
பீடு பெற நில்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
புகழொடு நன்றி பயவா வினை - தம் அரசனுக்கு இம்மைக்கண் புகழும் மறுமைக்கண் அறமும் பயவாத வினைகளை; என்றும் ஒருவுதல் லேண்டும் - அமைச்சர்க்கு எக்காலத்தும் ஒழிதல் வேண்டும். (பெருகல், சுருங்கல், இடைநிற்றல் என்னும் நிலைவேறுபாடு காலத்தான் வருதலின், 'என்றும்' என்றார். 'வேண்டும்' என்பது ஈண்டு இன்றியமையாது என்னும் பொருட்டு.)

மணக்குடவர் உரை
எல்லாக் காலமும் தவிர்தல் வேண்டும், புகழொடு நன்மை பயவாத வினையை.

என்று மென்றது செயலற்ற காலமுமென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர்
புகழொடு நன்றி பயவா வினை - தம் அரசனுக்கும் தமக்கும் இம்மைக்கும் மறுமைக்கும் பொதுவாக உரிய அறமும் மறுமைக்குச் சிறப்பாகவுரிய புகழும் விளைக்காத வினைகளை; என்றும் ஒருவுதல் வேண்டும் - எக்காலத்தும் அமைச்சர் செய்யாது விட்டு விடுதல் வேண்டும்.

துன்பநிலைமையும் நெருக்கிடை நிலைமையும் உட்பட 'என்றும்' என்றார். இறப்பின் பின்னரே புகழ் சிறந்து தோன்றும் என்பதை,

"நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா லரிது." (குறள். 235)

என்பதனால் அறிக.

மு.வ உரை
புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்

சாலமன் பாப்பையா உரை
இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.

Thirukkural - Management
It is wise to do any activity that brings fame to self and benefits to others. Valluvar strongly advocates through Kural 652 that one should shun or keep away from any activity that brings one disgrace and a sense of thanklessness. Never do acts that will make you regret or feel sorry for doing those sorts of acts. If you have done an act that makes you regret, never do that again and regret once again.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

குறள் 605
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் 
கெடுநீரார் காமக் கலன்
[பொருட்பால், அரசியல், மடியின்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
நெடு - நீண்ட
நெடுநீர் - கடல்; நீட்டித்துச் செய்யும் இயல்பு [Dilatoriness, dispositionto procrastinate]

மறவி - மறதி; கள்; தேன்; பதநீர்; மறதியுள்ளவன்; அழுக்காறு; இழிவு; குற்றம்.

மடி - மடங்குகை; வயிற்றுமடிப்பு; வயிறு; அரை; மடித்ததொடையின்மேற்பாகம்; ஆடை; தாள்முதலியவற்றின்மடிப்பு; பைபோன்றமுந்திச்சுருக்கு; வலைவகை; பசுமுதலியவற்றின்முலையிடம்; அடக்கம்; தனிமை; சோம்பல்; சோம்பலுடையவன்; நோய்; மீன்வலையோடுசேர்ந்தபெரும்பை; கேடு; பகை; பொய்; தீநாற்றம்; ஆடைவகை; தீட்டில்லாநிலை; இரட்டைக்கட்டுமரம்; சோறு; தாழை; தாழைவிழுது; மடங்கு

துயில் உறக்கம்; கனா; தங்குகை; இறப்பு; புணர்ச்சி; ஆடை.
நான்கும் - நான்கு குணங்களும்

கெடு - கேடு, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; அழகின்மை.
கெடும் - அழியும்

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.
நீரார் - குணம் படைத்தோர் 
காமக் - காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை
கலன் - அணிகலன்; கீழ்மகன்; மரக்கலம்; பூண்; யாழ்; கோட்சொல்லி; வில்லங்கம்.

முழுப்பொருள்

சிலந்தியின் உழைப்பை மேற்காணும் யூட்யுப் வீடியோவில் காணலாம்

எறும்பின் உழைப்பை மேற்காணும் யூட்யுப் வீடியோவில் காணலாம்


ஒருவனை அழிக்கும் அவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் அவனது நாட்டிற்கும் அவனுடைய அலுவகத்திற்கும் தீங்கு விளைவுக்கும் நான்கு குணங்களை திருவள்ளுவர் கூறுகிறார் அவை கீழே குறிப்பிடப் படுகின்றன. மேலும் ஒரு செயல் செய்வது கடினம். அதனால் தான் குறள் 505 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் என்றும் குறள் 664 சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்றும் கூறியுள்ளார்). ஏன் ஒரு செயல் கடினம் என்றால் கீழ்காணும் முக்கியமான காரணங்களும் உள் அடங்கும்.

முதலாவதாக, நெடுநீர். காலம் தாழ்த்தாது செய்யவேண்டிய செயலை காலம் தாழ்த்தி செய்யும் இயல்பு. ஒரு செயலை செய்ய வேண்டிய நேரத்திற்குள்ளாக செய்யாமால் நீட்டித்து செய்யும் இயல்பு. பெரும்பாலும் இத்தகைய இயல்பு விளைவுகளை வேறு மாதிரி தரும் அல்லது பலனே தராது. ஆதலால் இத்தகைய இயல்பு அழகல்லாதது. துன்பத்தையே தரும். உதாரணமாக ஒளவையார் சொன்னதுப்போல் விவசாயத்தில் "பருவத்தே பயிர் செய்"-ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் விளைச்சல் இருக்காது. பருவத்தில் பயிர் செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஏற்றார்ப்போல் நிலத்தை ஆயுத்தம் செய்து இருத்தல் வேண்டும். அப்படி செய்தால் தான் தக்க நேரத்தில் மழை வந்த பின்பு பயிர் செய்ய முடியும். மழை வந்த பின்பு நிலத்தை ஆயுத்தம் செய்வது கடினமான/ முடியாத செயல்.

மேலும் பல காரியங்களை தள்ளிப்போட்டால், ஒரு முக்கியாமான காரியம் வரும் பொழுது எல்லா காரியங்களும் கழுத்தளவு வந்து நம்மை பயமுறுத்தும். அத்தகைய நிலையில் நாம் எந்தச் செயலை செய்வது என்று திண்டாடுவோம். 

ஆதனால் எதையும் நாளை என்று சொல்லாமல் இன்றே செய். புதுவருடத்திற்காகவும் புது வருட தீர்மானத்திற்காகவும் (resolution) காத்திருக்காதே.

பொதுவாக இரண்டுநிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு செயல் என்றால் அதனை உடனே செய்துவிடு.

இரண்டாவதாக, மறவி. மறதி. ஒரு தலைவனுக்கு அல்லது தனி நபருக்கு பல கடமைகள் இருக்கும். அத்தகைய கடமைகளை மறவாமல் செய்தல் வேண்டும். ஒரு கடமையை சிறப்பாக செய்து மற்றொன்றில் மறந்து கோட்டை விட்டால் அது துன்பத்தையே தரும்.

வேலையில் கவனம் செய்து வீட்டையும் வீட்டில் உள்ள பெற்றோர் மனைவி பிள்ளைகளையும் மறந்தால் என்ன ஆவது? சென்ற நாட்கள் மறுபடியும் வராது. குழந்தைகளை சான்றோராக வளர்க்கும் பொறுப்பில் இருந்து தவறி பின்பு அவர்கள் பெரிய ஆளா உலகில் தகாத செயல்களை செய்தால் அது இழிவே. அதனால் அவர்களுக்கு துன்பமே. குறள் 435 "வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்" என்று முன்னமே கூறி இருக்கிறார். குறள் 138 "நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்" என்றும் முன்னமே கூறி இருக்கிறார். ஆதலால் தன் கடமையில் இருந்து மறவ கூடாது. [மேல் சொன்ன குறள்கள் கடமை என்று வள்ளுவர் சொல்லவில்லை. குடும்ப பொறுப்புடன் சற்று தொடர்பு செய்தேன்]

இதுப்போல் உதாரணமாக ஒரு அறுவை சிகிழ்ச்சை மருத்துவர் சிகிழ்ச்சையில் ஒரு செயலை மறந்தாலும் அது நோயாளியின் உயிரையே பாதிக்கக்கூடும்.

மூன்றாவதாக, மடி. மடி என்ற சொல்லுக்கு சோம்பல் என்று பொருள். சோம்பல் என்பது எந்த ஒரு செயலையும் உற்சாகமாக செய்ய விடாது. அது நம்மை மட்டும் இன்றி நம்மை சுற்றி இருப்போரையும் பாதிக்கும். ஊக்கமிழக்க செய்யும்.  ஆதலால் தான் பாரதி "சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி" என்று கூறியுள்ளார் போலும். அதுமட்டும் இன்றி செயலின்மை என்பது ஒரு இனிய மது போன்றது என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார். அந்தப் போதையில் சிக்கிக்கொள்ளக்கூடாது.

சோம்பலினால் நாம் ஒரு செயலை தள்ளிப்போடுகிறோம். அதனால் மற்ற செயல்களை தள்ளிப்போடுகிறோம். இதனால் காலம் தவறி ஒரு செயலை செய்கிறோம். காலம் தவறி ஒரு செயலை செய்தால் நாம் நினைத்த பலனை பெறமுடியாது. 

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் ஒருமுறை கூறியுள்ளார் சோம்பல் என்று நாம் கருதுவது ஒன்று இல்லை. அது மூன்று என்றார்.

1) முதலாவது சோம்பல்: நாம் பொதுவாக கருதுவது. தன்னை யாரும் கட்டிப்போட வேண்டாம். நானே என்னைக் கட்டிக்கொள்கிறேன் என்று முழங்காலைக் கைகளால் கட்டிக் கொண்டு ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்கும் சோம்பல்.

2) இரண்டாவது சோம்பல்: ஒளவையார் சொன்ன சோம்பல். சோம்பித் திரியேல் [முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே] என்ற வகைச் சோம்பல். அதாவது, எந்த நோக்கமுமின்றிச் சோம்பேறித்தனமாகச் சுற்றித் திரிவது. இது செயலளவிலும் நிகழும், மனதளவிலும் நடக்கும்.

3) மூன்றாவது சோம்பல்: மிக கேடு விளைவிப்பது!. அது, தன்னால் முழுமையாகச் செய்ய முடியும் என்றாலும், இந்த அளவுக்குப் போதும் என்று ஒவ்வொரு பணியையும் அரைகுறையாகச் செய்யும் ஆபத்தான சோம்பல். இது, துறைதோறும் புகுந்து அனைத்து வளர்ச்சிகளையும் அரைகுறையாக ஆக்கி, அழிவுக்குள்ளாக்கும் ஆக்கம்.

நான்மணிக்கடிகையும் “மடிமை கெடுவார்கண் நிற்கும்” என்கிறது.

சோம்பல் மிக கொடியது. நமது ஆற்றலை கெடுப்பது. ஆதலால் சோம்பலை முறி.

நான்காவதாக, துயில். ஒரு மனிதனுக்கு நாளொன்றுக்கு 7-8 மணி உறக்கம் தேவை. ஆனால் அதனை மீறி பகலில் தூங்குவது, தேவைக்கு மேலாக தூங்குவது, தூக்க நிலையில் இருப்பது செயல் ஆற்றும் வீச்சையே குறைக்கும். நமது முழு ஆற்றலை அடைய விடாது. அதிக தூக்கத்தினால் சோம்பலும் வரும். உற்சாகமிழக்கச் செய்யும். ஆதலால் தூக்கம் கேட்டையே தரும். பாரதியாரும் தூக்கமில்லாத விழிப்பே சக்தி என்கிறார். ஒளவையாரோ அனந்தல் ஆடேல் [மிகுதியாகத் துங்காதே], வைகறைத் துயில் எழு [அதிகாலையில் விழித்து எழுவது சிறப்புடையதாகும்] என்கிறார். ”நல்ல பொழுதையெல்லம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்” என்ற பாடல் வரியையும் நினைவில் கொள்க.

ஆதலால் சரியான நேரத்தில் உறங்கி விடியற்காலையில் எழுந்து செயலாற்ற வேண்டும். அளவுக்கு அதிகமான தூக்கம் கூடாது. அப்படி அதிகமாக தூங்கினால் அது ஒருவது துன்பத்தையே தரும்.

“அந்தக் கட்டிலின் கீழே அவரது கனவுகள் உதிர்ந்து கிடப்பதாகவே நினைத்தார்” என்று எஸ்.ராமகிருஷ்ணன் ”அஸ்தபோவில் இருவர்” சிறுகதையில் எழுதியுள்ள வரிகள் நினைவுக்கு வருகின்றன

ஆதலால் இந்த நான்கு குணங்களை இயல்பாக (தன்னை அறியாத ஒரு விருப்புடன் அல்ல அறிந்த ஒரு விருப்புடன்) செய்வோருக்கு இக்குணங்கள் அழிவையே தரும் என்கிறார் திருவள்ளுவர்.

ஒப்புமை
“உறக்கமுற்றார் என்னுற்றார் எனும் உணர்வி னொடும்ஒதுங்கி” (கம்ப.நாடவிட்ட.30)

மேலும்: அஷோக் உரை
மேலும்: TS.நாகராஜன்

ஆத்திச்சூடி
பருவத்தே பயிர் செய்.
சனி நீராடு
சோம்பித் திரியேல்.
அனந்தல் ஆடேல்
வைகறைத் துயில் எழு.

வைகறைத் துயில் எழு [நன்றி: அறம் செய்ய விரும்பு]
[அதிகாலையில் விழித்து எழுவது சிறப்புடையதாகும்]
கட்டுரை:
வைகறை என்பது விடியற்காலை 2 முதல் 6 மணி வரையுள்ள நேரம், சூரிய உதயத்துக்கு சற்று முன் வரை. நேரடியான சூரியக்கதிர் தாக்கமில்லாத இந்நேரத்தில்தான் நம் உடலுக்கு தேவையான சுத்தமான பிராணவாயு (ஓசோன்* படலம் மூலம்) கிடைக்கிறது.

(வைகறை) இந்நேரத்தில்தான் நம் உடலுருப்பான நுரையீரல் முழு ஆற்றலுடன் செயல்படுகிறது. நுரையீரலின் பிரதான வேலை (உள்வாங்கிய) பிராணவாயுவின் மூலம் இரத்தத்தை சுத்தம் செய்வது! ஆகவேதான், மூச்சுப்பயிற்ச்சி சார்ந்த – தியானம், யோகாசனம், உடற்ப்பயிற்ச்சி, வேகமான நடை, ஓடுதல் போன்றவை இப்பொழுதில் நல்லது.
ஆக, வைகறையில் துயில் எழுவது நமக்கு அன்று கிடைக்கும் முதல் வெற்றி! இத்தொடு,
1. முழு ஆற்றலோடும், சுத்தமான பிராணவாய்வோடும் இரத்தம் சுத்திகரிக்கபடுவதால் நோய்களிலிருந்து பாதுகாக்கபடுகிறோம்.
2. அன்று முழுவதும் சுறுசுறுப்பாகயிருக்க உதவும்
3. அதிக (பொன்னான) நேரம் கிடைக்கும்.
4. அவசரமில்லாமல் நிதானமாக இருக்க\ செயல்பட உதவும்
5. நல்ல சிந்தணைகளை தூண்டும்.

இரசணைக்கு, வைகறை மேகங்களின் அழுகு!

வைகறை இலக்கிய பாடல்:
வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதின்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையார் கண்ட முறை
(ஆசாரக்கோவை# – 41)

*இது சுத்தமான பிராணவாயு கிடைக்க உதவும் படலம். இந்த படலத்தில் தான் இன்று ‘பூவி வேப்பமாகுதல்’ காரணமாக ஒரு துளை உண்டாகி அது பெரிதாகிக்கொண்டே போகிறது, இது பிராணவாயு சுத்திகரிப்புக்கு பெரிய இடையூர்.

#மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இது ஒரு நீதி நூல். வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார்.

பரிமேலழகர் உரை
மடி நெடுநீர் மறவி துயில் நான்கும் - மடியும், விரைந்து செய்வதனை நீடித்துச் செய்யும் இயல்பும், மறப்பும், துயிலும் ஆகிய இந்நான்கும்; கெடும் நீரார் காமக்கலன் - இறக்கும் இயல்பினையுடையார் விரும்பி ஏறும் மரக்கலம். (முன் நிற்கற்பாலதாய மடி, செய்யுள் நோக்கி இடை நின்றது.நெடுமையாகிய காலப் பண்பு, அதன்கண் நிகழ்வதாய செயல்மேல் நின்றது. கால நீட்டத்தையுடைய செயல் முதல்மூன்றும் தாமதகுணத்தில் தோன்றி உடன்நிகழ்வன ஆகலின் மடியோடு ஒருங்கு எண்ணப்பட்டன. இறக்கும் இயல்பு - நாள் உலத்தல். இவை துன்புறும் நீரார்க்கு இன்புறுத்துவ போன்று காட்டி, அவர் விரும்பிக் கொண்ட வழித் துன்பத்திடை வீழ்த்தலின், 'நாள் உலர்ந்தார்க்கு ஆக்கம் பயப்பது போன்று காட்டி அவர் விரும்பியேறிய வழிக் கடலிடை வீழ்க்கும் கலத்தினை ஒக்கும்' என்னும் உவமைக் குறிப்பு, 'காமக்கலன்' என்னும் சொல்லால் பெறப்பட்டது. இதற்கு விரும்பிப் பூணும் ஆபரணம் என்று உரைப்பாரும் உளர்.)

மணக்குடவர் உரை
விரைந்து செய்யும் வினையை நீட்டித்தலும், செய்ய நினைந்ததனை மறத்தலும், அதனைச் செய்தற்குச் சோம்புதலும், அதனைச் செய்யாது உறங்குதலுமாகிய இவை நான்கும் கெடுந்தன்மையுடையார் காதலித்தேறும் மரக்கலம். 

காமக்கல னென்றது தன்னைக் காதலித்தேறினாரை நடுக்கடலுள் தள்ளும் மரக்கலம் போலவென்றது. இத்துணையும் மடிமையினால் வருங் குற்றங் கூறினார்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நெடுநீர் மடி மறவி துயில் நான்கும்- நீட்டிக்குந் தன்மை, சோம்பல், மறதி, தூக்கம் என்னும் நான்கும்; கெடும் நீரார் காமக் கலன்- இறக்கும் நாள் நெருங்கியவர் விரும்பியேறும் மரக்கலங்களாம்.

நெடுநீர் என்பது விரைந்து செய்யக் கூடியதை நீட்டித்துச் செய்யும் இயல்பு.மடி என்பது முயற்சிசெய்யாது சும்மாயிருக்குஞ் சோம்பல். மறவி என்பது செய்ய வேண்டியதை மறந்து விடுதல் .துயில் என்பது பகலுந்தூங்குதல் அல்லது தூக்க நிலையிலிருத்தல்.இந்நான்கும் ஊக்கமின்மையின் வகைகளாதலின் உடனெண்ணப்பட்டன.நெடுநீர் என்னுங் காலநீட்சி பற்றிய பண்புப் பெயர் அக்காலத்தில் நிகழும் செயல்மேல் நின்றது. கெடுநீர்-இறப்பு நெருங்கிய தன்மை. நெடுநீர் முதலிய நான்கும் ஊக்கமில்லார்க்கு இன்பந்தருவனபோற் காட்டிப் பின்பு மீளாத் துன்பமாகிய அழிவைத்தருவ தால், அவை வாழ்நாளெல்லை யடுத்தவர்க்கு இன்ப நீர்ச்செலவு நிகழ்த்துவதுபோற் காட்டி, அவர் விரும்பி ஏறியபின் அவரை நடுக்கடலில் வீழ்த்திவிடும் மரக்கலங்களுக்கு ஒப்பாகும் என்றார். ' காமக்கலன், என்பதால் விரும்பியேறுதல் பெறப்படும். இத்தொடர்க்கு விரும்பிப்பூணும் அணிகலன்கள் என்று உரைப்பது பொருந்தாது .பொருந்த வேண்டுமாயின் , எரிமருந்து கலந்த அணிகள் என்று கொள்ள வேண்டும். இக்குறளில் அமைந்துள்ளது உருவகவணியாம்.

மு.வ உரை
காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்

சாலமன் பாப்பையா உரை
காலம் தாழ்த்தி செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படகாகும்.

நன்றி: சக்தி (மகாகவி சுப்ரமணிய பாரதியார்)

துன்ப மங்லாத நிலையே சக்தி, 
      தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி, 
அன்பு கனிந்த கனிவே சக்தி, 
      ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி, 
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி, 
      எண்ணத் திருக்கும் எரியே சக்தி, 
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி, 
      முக்தி நிலையின் முடிவே சக்தி. 

சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி, 
      சொல்லில் விளங்கும் சுடரே சக்தி, 
தீம்பழந் தன்னில் சுவையே சக்தி, 
      தெயவத்தை எண்ணும் நினைவே சக்தி, 
பாம்பை அடிக்கும் படையே சக்தி, 
      பாட்டினில் வந்த களியே சக்தி, 
சாம்பரைப் பூசி மலைமிசை வாழும் 
      சங்கரன் அன்புத் தழலே சக்தி. 

வாழ்வு பெருக்கும் மதியே சக்தி, 
      மாநிலங் காக்கும் மதியே சக்தி, 
தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி, 
      சஞ்சலம் நீக்குந் தவமே சக்தி, 
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி, 
      விண்ணை யளக்கும் விரிவே சக்தி, 
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி, 
      உள்ளத் தொளிரும் உயர்வே சக்தி.
- மகாகவி சுப்ரமணிய பாரதியார்


நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரும் தடைக் கல்லாய் விளங்குவதாக நாம் ஊழலை நினைக்கிறோம். அதன் தாயாக லஞ்சத்தைக் கருதுகிறோம். இரண்டும் இணைந்து அகத்திலும் புறத்திலும் உண்டாக்கிய அழுக்குகளைக் களைந்து தூய்மை இந்தியாவை உருவாக்கக் கருதும் இந்த வேளையில், இவற்றையெல்லாம் விடப் பெரியதொரு தடைக் கல்லாக விளங்குவது வேறொன்றாக இருக்கிறது.

அதுதான் சோம்பல்.

தனி மனித நிலையில் தொடங்கிச் சமுதாய அளவில் படர்ந்து தேச அளவில் விரிந்து நிற்கும் இந்நோய் உள்ளிருந்து உருக்கும் அகநோய். இதனைப் பெற்ற அன்னையின் பெயர் தாமதம். தந்தையின் பெயர் மறதி. உற்ற துணையாய் உடன் வருவது உறக்கம்.

தானும் கெட்டு, தன்னைச் சார்ந்த யாரையும் கெடுக்கும் ஆற்றல் வாய்ந்தவை இவை என்பதால், இந்நான்கையும் இணைத்துக் கெடுநீரார் காமக்கலன் என்றார் திருவள்ளுவர்.

இதில் காமக் கலன் என்பதற்கு, இறக்கும் இயல்பினை உடையார் விரும்பி ஏறும் மரக்கலம் என்று விளக்கம் தருகிறார் பரிமேலழகர். அது அவர் காலத்து வாகனம். இன்றைக்கு இக்கலன் விமானத்தைவிடவும் விரைந்து கொண்டுபோய் அழிவிற்செலுத்தும் பறக்கும் விண்கலமாக விளங்கி வருகிறது என்றால் அது மிகையில்லை.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்

என்பது வள்ளுவர் வாக்கு.

தாமதமாகிய நெடுநீரும், மறதியாகிய மறவியும் கூடிப் பெற்ற குழந்தை சோம்பல். அது முதலில் துயிலில் ஆழ்த்தும். பின்னர், எந்தப் பயனுமின்றி வாழ்க்கையை உள்ளீடற்று அழித்து மரணத்தில் வீழ்த்தும். உறக்கம் என்பதே மரணத்துக்கான ஒத்திகைதானே!

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு

என்பதுதானே உண்மை. ஆக, உறங்காமல் இருப்பது மாத்திரம் வாழ்க்கையன்று. இறவாமல் இருப்பது, இதற்குத் துயிலாமல் இருப்பது என்பதன்று பொருள். துயிலுங்காலத்தில் துயின்று எழும் காலத்தில் எழுதல் வேண்டும். தூக்கமிலாக் கண் விழிப்பே சக்தி என்பார் பாரதி.

சோம்பேறிதான் அதிகம் தூங்குவான் என்பார் என் தாயார். அது மட்டுமல்ல, சோம்பேறிதான் அதிகம் பொறாமைப்படுவான் என்றும் சொல்வார்.

பொறாமையை, அழுக்காறு என்பார் வள்ளுவர். அனைத்து அழுக்குகளையும் உள்கொண்டு வந்து சேர்க்கும் வழி என்று அதற்குப் பொருள். அது முதலில் மனத் தூய்மையைக் கெடுக்கும். பின்னர் புறத் தூய்மையையும் பல்வேறு வழிகளில் பாழ்படுத்தும்.

இவ்வளவுக்கும் காரணமாகும் சோம்பலுக்கு எது மருந்து? சுறுசுறுப்பு என்று பலர் சொல்லுவார்கள். ஆனால், பாரதி சொல்கிறார் அதுவும் பால பருவத்தில் இருந்தே தாய்ப் பால் போலத் தரவேண்டிய மருந்தாக, மாற்றாகப் பாப்பாவுக்குச் சொல்கிறார்:

சோம்பல் மிகக் கெடுதி பாப்பா
சரி. அது வந்துவிட்டால், மாற்று மருந்து
- தாய் சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா

பணியெனத் தாய் கொடுப்பதை, அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லித் தப்பிக்கிறபோது, நெடுநீர் ஆகிய தாமதம் வருகிறது. மறுபடி அந்த வேலை என்னாயிற்று என்று தாய் கேட்கிறபோது, மறந்து

போனது நினைவுக்கு வருகிறது. மறதிகளின் அடுக்ககமாகத் துயில் வருகிறபோது, நம்மையே நாம் மறந்துவிடுகிறோம். அப்புறம் வேலையாவது, விருப்பமாவது எல்லாம் இழந்து கையற்று நிற்கிற நிர்பந்தம் வந்துவிடுகிறது.

அவர்கள்தான் ஒருபொழுதும் வாழ்வது அறியாத வீணர்கள். ஆனால், அதைச் செய்ய வேண்டும், இதைச் செய்ய வேண்டும், அப்படி, இப்படி என்று ஆயிரக்கணக்கான அல்ல, கோடிக்கணக்கான மனக்கோட்டைகளைக் கட்டிச் சொற்கோட்டங்களை உருவாக்கிப் பின்னர் சோர்ந்து அழிவார்கள்.

இது தெரிந்தும் இவற்றை விடமுடியாமல் தவிப்பவனைப் பேதை என்கிறார் வள்ளுவர். மடிமடிக் கொண்டொழுகும் பேதையின் குடும்பம் அவனுக்கு முன்னதாகவே அழிந்து விடுமாம். ஒரு குடும்பத்தின் உள்ளே இந்தச் சோம்பல் புகுந்துவிட்டால், அது பகைவரிடத்தில் அக்குடும்பத்தாரை அடிமையாக்கிவிடும் என்று தொடர்ந்து எச்சரிக்கிறார் அவர்.

அந்த இடத்தில்தான் பாரதி விழிக்கிறார். நாட்டு விடுதலையை மனக்கொண்டு பாட்டுக் கட்டும் பணி செய்கிற அவர், புதுச்சேரி மணக்குள விநாயகரிடத்தில் தன் மனத்தை நிறுத்தி ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு தம் பணியாகிய தமிழ்ப் பணியைத் தொடங்குகிறார்.

அந்த உடன்படிக்கையின் முதல் திட்டம் - நமக்குத் தொழில் கவிதை. அடுத்தது - நாட்டுக்கு உழைத்தல்.

மனிதர்க்கே உரிய மகத்தான நோயான சோம்பலைப் புறந்தள்ள அடுத்த ஒப்பந்தத் திட்டமாக, பணியாக, மூன்றாவதைக் குறிப்பிடுகிறார். அதாவது, இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று சொல்லி நிறுத்துகிறார்.

கண் இமைக்கும் அந்தக் கணத்தில்கூடச் சோம்பல் வந்து மனிதனைச் சுனாமிபோலச் சுருட்டிவிடும் என்று அஞ்சுகிறார் அந்தப் பெருங்கவி. இது அவர் அனுபவத்தில் கற்ற அறிவியல்.

புதுச்சேரியில் அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு ஜூலை மாதக் காலைப்பொழுது. (2.7.1915)

வியாதி பயம், சோம்பர். இன்று காலைப்பொழுதையும் இவை வந்து வீணாக்கிவிட்டன என்று நாட்குறிப்புப்போல் எழுதத் தொடங்குகிறார். இன்று காலைப்பொழுது என்றால், அது நேற்றும் வந்திருக்கிறது என்று பொருள். இதுபோல் பல காலைப்பொழுதுகளையும் காவு கொண்டிருக்கிறது என்று பொருள்.

பத்திரிகைகளுக்கு வியாஸங்கள் எழுத வேண்டும். கடிதங்கள் எழுத வேண்டும். சோம்பர் உதவாது என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வதுபோல எழுதித் தள்ளுகிறார் பாரதி. இதற்குச் சித்தக்கடல் என்று தலைப்பு.

சித்தம் ஒரு கண்ணாடி. ஓயாமல் பராசக்தியைத் தியானம் செய்யுமானால், அவளுடைய சாயை இதிலே படும். அதிலே சுகம் உண்டு என்று எழுதுகிறார்.

இதில் இவர் சுட்டும் பராசக்தி, சூலம் ஏந்திக் குங்குமம் அணிந்த பெண் தெய்வ உரு அன்று. பேருருக் கொண்ட பிரபஞ்ச ஆற்றல் அது, துன்பமிலாத நிலை, தூக்கமிலாத கண்விழிப்பு, சோம்பர் கெடுக்கும் துணிவு

துன்ப மிலாத நிலையே சக்தி
தூக்க மிலாக் கண்விழிப்பே சக்தி

என்றெல்லாம் இந்தப் பராசக்தியைச் சித்தக் கண்ணாடியில் படம் பிடித்துக் காட்டும் பாரதி, "சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி' என்றும் தெளிவுபடுத்துகிறார். இந்தத் தெளிவும் துணிவும் எல்லா இந்தியர்களுக்கும் வரவேண்டும்.

பதவியும் பாராட்டும் பெற விரும்பும் ஒருவனுக்குப் பணியும் முக்கியம். அதோடு, அப்பணி சோம்பல் இல்லாது தொடரும் நற்பணியாக இருத்தலும் வேண்டும் என்பது சொல்லாமல் விளங்க வேண்டும்.

இந்த நேரத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் ஒருமுறை கூறியது நினைவுக்கு வருகிறது. சோம்பல் என்று நாம் கருதுவது ஒன்று இல்லை. அது மூன்று என்றார்.

முதலாவதான சோம்பல், தன்னை யாரும் கட்டிப்போட வேண்டாம். நானே என்னைக் கட்டிக்கொள்கிறேன் என்று முழங்காலைக் கைகளால் கட்டிக் கொண்டு ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்கும் சோம்பல்.

அடுத்தது, ஒளவையார் சொன்ன சோம்பல் - சோம்பித் திரியேல் என்ற வகைச் சோம்பல். அதாவது, எந்த நோக்கமுமின்றிச் சோம்பேறித்தனமாகச் சுற்றித் திரிவது. இது செயலளவிலும் நிகழும், மனதளவிலும் நடக்கும்.

இவற்றையெல்லாம்விட, ஆபத்தானதும், நாட்டு வளர்ச்சிக்குக் கேடு விளைவிப்பதுமானதுதான் மூன்றாவது வகைச் சோம்பல்.

அது, தன்னால் முழுமையாகச் செய்ய முடியும் என்றாலும், இந்த அளவுக்குப் போதும் என்று ஒவ்வொரு பணியையும் அரைகுறையாகச் செய்யும் ஆபத்தான சோம்பல். இது, துறைதோறும் புகுந்து அனைத்து வளர்ச்சிகளையும் அரைகுறையாக ஆக்கி, அழிவுக்குள்ளாக்கும் ஆக்கம்.

அகசுத்தியோடு நினைத்துப் பார்த்தால், இந்த ஆபத்து நன்கு புரியும். நம்மால் அரைகுறையாக விடப்பட்ட ஆக்கப் பணிகள்தாம் எத்தனை, எத்தனை?

இதற்காக, சென்றதையே சிந்தைசெய்து கொண்டிருந்தால், இன்றும் சோம்பலில் கழியும் ஒருநாள் ஆகிவிடுமே. காலையிலேயே இந்தக் கவலைக்கு இடம் தரலாமா? வேண்டாம். இதற்கு மாற்று மருந்தாய், பாரதி ஒரு மந்திரம் சொல்கிறார்.

நீங்கள் கருதியது கைகூட வேண்டுமா, நினைத்த காரியம் நிச்சயம் வெற்றியோடு முடிய வேண்டுமா?

முன்னர் சொல்லியதுபோலவே, மூன்று படிநிலைகளைக் கொண்ட எளிய மந்திரம். ஒன்று: நன்று கருது; இரண்டு: நாளெல்லாம் வினை செய்; மூன்று: இனி வேறொன்றும் செய்ய வேண்டாம். வேலை முடிந்துவிடும். அதாவது, நினைப்பது முடியும்.

நன்றாய் இருக்கிறதே. இதை என்று தொடங்கலாம் என்று நாள் பார்க்கிறீர்களா? நாளைக்கு என்று உள்மனம் சொல்கிறதா? சந்தேகமே வேண்டாம். உங்களுக்குள்ளும் இருக்கிறது சோம்பல். கூடவே வரும் மறதி. அது கொண்டுவரும் துயில்.

வேண்டவே வேண்டாம் என்கிறீர்களா? மறுபடியும் சோம்பல் தவிர்க்க, சோம்பலைத் தவிர்த்து இந்தக் கட்டுரையை முதலில் இருந்து படியுங்கள்...

நன்றி: சோம்பல் சுகமல்ல, சோகமே! [குங்குமம் - ஆன்மீகம் - திருப்பூர் கிருஷ்ணன்]
புறப்படத் தயாராக இருக்கிறது ஒரு மரக்கலம். வாழ்க்கைக் கடலில் கரையோரமாக நின்று பயணிகளை எப்போதும் ஆசை காட்டி அழைக்கும் அழகான மரக்கலம் அது. `கெட்டழிவோர் கலம்’ என்று அதற்குப் பெயர்! அதில் ஏறினால் நடுக்கடலில் கவிழ்ந்து மூழ்குவது நிச்சயம்! இப்படித் தெரிந்த பின் யார் இதில் ஏறுவார்கள் என்றுதானே நினைக்கத் தோன்றும்? 

அதுதான் இல்லை. இன்றளவும் இந்த மரக்கலம் பற்றிய உண்மை எல்லோருக்கும் தெரிந்தும் இதில் ஏறிப் பயணம் செய்வோர் எண்ணிக்கையும் அதனால் நடுவழியில் மூழ்குவோர் எண்ணிக்கையும் குறையவே இல்லை! இந்த மரக்கலத்திற்கு இப்படியொரு பெருமை! என்ன விந்தை இது!நான்கு விதமான குணங்களைக் கொண்டவர்கள் மிகுந்த ஆசையோடு இதில் ஏறுகிறார்கள். 

1. எதையும் காலம் கடந்து செய்பவர்களை இந்த மரக்கலம் மிகச் சுலபமாக ஏற்றுக்கொள்கிறது.
2. தாம் செய்ய வேண்டிய செயலை அடிக்கடி மறந்து போகிற ஞாபக மறதிக்காரர்களுக்கும் இந்த மரக்கலத்தில் கண்டிப்பாய் இருக்கை வசதி உண்டு! 

3. அப்புறம் இருக்கவே இருக்கிறார் நம்மில் பலரின் அன்பிற்கும் அபிமானத்திற்கும் உரிய திருவாளர் சோம்பல் அவர்கள். அவரை நட்பாகக் கொண்டவர்களை இந்த மரக்கலம் அளவற்ற பிரியத்தோடு வரவேற்று மனப்பூர்வமான ஆதரவு தருகிறது. 

4. தேவைக்கு மேல் நெடுநேரம் உறங்குபவர்கள் யாராவது உண்டா? வாருங்கள். இந்தக் கெட்டழிவோர் கலத்தில் ஏறி ஆனந்தமாகக் கெட்டழிந்து போகலாம்!
 இப்படியெல்லாம் சொல்வது யார் தெரியுமா? உலகம் போற்றும் ஒப்பற்ற புலவரான வள்ளுவப் பெருந்தகைதான்!
`நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்!’

(`எதையும் காலம் கடந்து செய்யும் குணம், ஞாபக மறதி, சோம்பல், மிதமிஞ்சிய உறக்கம் ஆகிய நான்கும் கெட்டொழியும் இயல்புடையார் விரும்பி ஏறும் மரக்கலமாகும்’ என்பது இக்குறளின் பொருள்.)

மடியின்மை என்ற 61ம் அதிகாரத்தில் உள்ள இந்தக் குறள் மட்டுமல்ல, மொத்தப் பத்துக் குறள்களுமே மனிதர்கள் சோம்பலின்றி இருக்க வேண்டும் என்ற கருத்தை உரத்து வற்புறுத்துகின்றன.

`மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர்.’ தாம் பிறந்த குடியைச் சிறந்த குடியாக உயர்த்த எண்ணுபவர், தம்மை வந்து தாக்கும் சோம்பலை விலக்கி முயற்சியோடு முன்னேற வேண்டும். `படியடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது.’ நாட்டை ஆளும் மன்னனின் தொடர்பு தானே கிடைத்தாலும் கூட, சோம்பல் உடையவர்கள் அத்தொடர்பால் எந்தப் பயனையும் அடைய மாட்டார்கள். 

`குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் 
மடியாண்மை மாற்றக் கெடும்!’

ஒருவன் சோம்பலை ஒழித்து முயற்சியோடு வாழ முற்பட்டால் அவன் குடியில் புகுந்த குற்றம் அவன் திறமையால் மறைந்து அழியும். ஒருவன் அடையும் முன்னேற்றத்தைக் கெடுக்கும் முக்கியமான குணம் சோம்பல்தான். சோம்பலால் கால தாமதம் நேர்கிறது. கால தாமதத்தோடு மறதியும் சேர்ந்து கொள்கிறது. 

போதாக்குறைக்குச் சோம்பேறிகளுக்குத் தூக்கமும் அதிகம். தூங்கினால் உழைத்து முன்னேறுவது எப்படி?  `எழுமின் விழிமின் குறிசாரும் வரை நில்லாது செல்லுமின்!’ என முழங்கினார் வீரத் துறவி விவேகானந்தர். சோம்பல் என்ற சொல்லின் உச்சரிப்பைக் கூட அறியாதவர் அவர். இல்லாவிட்டால் தாம் வாழ்ந்த 39 ஆண்டுக்குள் உலகம் மெச்சும் உன்னதமான சாதனைகளை அவர் எப்படிச் செய்திருக்க முடியும்? பம்பரமாய் உலகம் முழுவதும் சுழன்று ஆன்மிகப் பெருமைகளை அகிலமெங்கும் பறைசாற்றிய பெருமகன். தம் முப்பத்தொன்பது ஆண்டுகளுக்கு உள்பட்ட வாழ்க்கைக்குள் நூறாண்டுக்கும் மேலான வாழ்க்கை வாழ்ந்து அத்தனை ஆண்டு செய்யக்கூடிய செயல்கள் அனைத்தையும் குறுகிய காலத்தில் செய்துமுடித்த தீரர். 

யோசித்துப் பார்த்தோமானால் ஒன்று புரியும். பிறந்த குழந்தையாக இருந்த போதிருந்தா விவேகானந்தர் ஆன்மிகப் பணி செய்திருக்க இயலும்? கல்லூரி மாணவராக இருந்த காலத்தில், குருதேவர் பரமஹம்சரால் கவரப்பட்ட அவர், வாலிப வயதில்தான் ஆன்மிகப் பிரசாரக் களத்தில் குதித்திருப்பார். 

அப்படியானால் இன்று உலகம் அண்ணாந்து பார்த்து வியக்கும் அவரது சமூக மற்றும் ஆன்மிகப் பணிகள் அத்தனையையும் ஏறக்குறைய பதினைந்தே ஆண்டுகளில் முடித்துவிட்டார் அவர். பல இடங்களில் ராமகிருஷ்ண மடத்தைத் தோற்றுவித்தல், நாடெங்கும் சுற்றுப் பயணங்கள், ஓயாத சொற்பொழிவுகள், இரவெல்லாம் கண்விழித்து எழுதிய எழுத்துப் பணிகள், எந்நேரமும் படிப்பு, என்சைக்ளோபிடியாவை அப்படியே ஒப்பிக்கும் நினைவாற்றலைத் தரக் கூடிய கல்வி என நாம் இப்போது நினைத்துப் பார்த்தால் அவர் மனிதரா இல்லை தேவ புருஷரா, எப்படி இத்தனை சாதனைகளைப் பதினைந்தாண்டுகளில் செய்து முடித்தார் என மலைப்புத் தட்டுகிறது. 

ஓயாது உழைத்த அவர் உடல் ஓய்வு வேண்டும் என்று கெஞ்சியது. ஒரு கட்டத்தில் உடலின் உருக்கமான வேண்டுகோளை அவர் புரிந்துகொண்டார். ஒரு கிரகண புண்ணிய காலம். ஜபதபங்களை முடித்த அவர் `நான் இப்போது சிறிதுநேரம் உறங்கப் போகிறேன்!’ என்று தம் சீடர்களிடம் சொன்னார்.  சீடர்கள் வியப்போடு ` கிரகண நேரத்தில் உறக்கமா?’ எனக் கேட்டார்கள். 

`ஆம், என் உடல் ஓய்வை யாசிக்கிறது. கிரகண காலத்தில் எது செய்தாலும் அது பலமடங்கு பலன் தரும் என்றும் பல மடங்கு பின்னாளில் அந்தச் செயல் வளரும் என்றும் சொல்வார்கள். நான் இப்போது உறங்கி ஓய்வெடுத்துக் கொண்டால் அந்தக் குறுகிய கால ஓய்வு நீண்ட நேரம் ஓய்வெடுத்த பலனை என் உடலுக்குத் தரும். இனி வரும் நாட்களில் எனக்கு ஓய்வெடுக்க நேரம் கிடைக்கவும் சந்தர்ப்பம் நேரும். ஓய்வெடுக்கவே நேரமில்லாததால்தானே நான் உழைத்துக் கொண்டே இருக்கிறேன்?’ என்று பதில் சொன்னார் விவேகானந்தர். 

உடனிருந்த சீடர்களுக்கு அப்போதுதான் விவேகானந்தரும் மனிதப் பிறவிதான், அவருக்கும் ஓய்வு வேண்டும் என்ற உண்மையே உறைத்தது. நமக்கு ஒன்று புரிகிறது. மனிதர்கள் தெய்வ நிலையை அடைய வேண்டுமானால் அவர்கள் ஓயாது உழைக்க வேண்டும் என்பதுதான் அது.  அரவிந்தர், அன்னை போன்றோ ரெல்லாம் ஒரு நாளைக்கு இருபது மணி நேரத்திற்கு மேல் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்கள் என்பதைப் படிக்கும்போது பிரமிப்பேற்படுகிறது. உலகியல் முன்னேற்றங்களுக்கே சோம்பல் இல்லாத கடின உழைப்பு தேவைப்படுகிற போது, அதை விட உயர்ந்த ஆன்மிக முன்னேற்றம் பெறுவதற்கு அதனினும் அதிகமான உழைப்பு தேவைப்படும் என்பதுதானே உண்மை?

`மடியின்மை’ என்ற வள்ளுவரின் அதிகாரத்திற்கு விளக்கம்போல அமைந்து எளிய தமிழில் எல்லோரையும் கவர்ந்துள்ளது ஒரு திரைப்பாடல். நாடோடி மன்னன் திரைப்படத்தில் திருத்தமான உச்சரிப்புக்குப் புகழ்பெற்ற டி.எம்.செளந்தரராஜன் குரலில் ஒலிக்கும் அந்த கருத்துள்ள பாடலை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். 

 `தூங்காதே தம்பி தூங்காதே - நீ 
 சோம்பேறி என்ற பெயர் வாங்காதே!’

 - என்ற பல்லவியோடு தொடங்கும் அந்தப் பாடல், `நாட்கள் முழுவதையும் தூங்கிக் கழித்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார், சிலர் அல்லும் பகலும் வெறும் கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார், விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார், உன்போல் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்!’ என்ற வரிகளின் மூலம் சோம்பேறிகளின் தலையில் ஒரு குட்டுக் குட்டி அவர்களை எழுச்சி கொள்ளச் செய்கிறது.
எதையும் உடனுக்குடன் செய்யாமல் காலங்கடந்து செய்பவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவதில்லை. எனவே காலந்தாழ்த்தும் இயல்பை வள்ளுவர் வன்மையாகக் கண்டிக்கிறார். 

ஒரு சிறுகதைப் போட்டி நடக்கிறது. அதற்கென்று ஒரு கடைசித் தேதி நிர்ணயித்திருக்கிறார்கள். மிகச் சிறப்பான கதை ஒன்றை எழுதி, ஆனால் அந்தத் தேதி முடிந்த பிறகு அதை அனுப்பி வைத்தால் பரிசுபெற்றுப் புகழ்பெறக் கூடிய வாய்ப்பிருக்குமா? செய்ய வேண்டிய செயலைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்தால்தான் வாழ்வில் வெற்றி பெற இயலும். விபத்துக்கு உள்ளாகியிருக்கும் ஒருவருக்கு உடனடியாகச் செய்ய வேண்டிய சிகிச்சையை அப்போதே செய்யாமல் அரைமணி 
தாமதப்படுத்திச் செய்தால் என்ன ஆகும்? அவர் உயிரே போய்விடும்.

 ‘ஞாலம் கருதினும் கைகூடும் காலம் 
 கருதி இடத்தாற் செயின்.’ 

‘காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும் 
ஞாலத்தின் மாணப் பெரிது.’

  - என்றெல்லாம் மற்ற அதிகாரங்களிலும் காலத்தின் பெருமையைப் போற்றுகிறார் வள்ளுவர். எனவே வாழ்வில் வெற்றி பெற விரும்பும் இளைஞர்கள், சோம்பல் இல்லாமல் இருப்பதோடு செய்ய வேண்டிய செயல்களை அந்தந்தக் காலங்களில் செய்து விட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். தேர்வு முடிந்தபிறகு பாடப் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பதில் பொருளில்லை.

மறக்காதீர்கள் என வள்ளுவர் குறிப்பிடுவதில் ஓர் உட்பொருள் இருக்கிறது. செயல்களை மறக்காமல் செய்வதோடு முன்னுரிமை கொடுத்துச் செய்ய வேண்டும் என்பதும் அதில் அடங்கியிருக்கிறது. நாளை செய்து முடிக்க வேண்டிய செயல், நாளை மறுநாள் செய்து முடிக்க வேண்டிய செயல் என இரு செயல்களுக்கான கட்டாயம் உள்ளபோது, முதலில் உள்ள செயலை மறந்து அடுத்த செயலைச் செய்யக் கூடாது. எதை முதலில் செய்ய வேண்டுமோ அதை முதலில் செய்து முடிக்க வேண்டும்.  

பெரும்பாலான மனிதர்கள் ஒன்று கடந்த காலத்தில் வாழ்கிறார்கள் அல்லது எதிர்காலத்தில் வாழ்கிறார்கள். கடந்த காலத்தை அசைபோடுவதாலும் எதிர்
காலம் குறித்த கற்பனைகளாலும் நாம் நிகழ்காலத்தைக் கோட்டை விடுகிறோம். காரணம் நிகழ்காலத்தைப் பற்றிய ஞாபகம் நம்மிடம் இருப்பதில்லை.

`கடந்த காலம் என்பது உடைந்த பானை.

எதிர்காலம் என்பது மதில்மேல் பூனை. நிகழ்காலம் என்பதே மீட்டிய வீணை!’ என்பது கவிஞர் தாராபாரதியின் சிந்தனை வரிகள். உடைந்த பானையால் எந்தப் பயனும் இல்லை. மதில் மேல் பூனை எந்தப் பக்கம் குதிக்கும் என்பது நமக்குத் தெரியாது. நிகழ்கால யாழின் இசையை அனுபவிப்போமே? நிகழ்காலத்தில் செய்ய வேண்டிய செயல்களை மறந்து விடாமலும் காலந் தாழ்த்தாமலும் அவ்வப்போது உடனுக்குடன் செய்வது வாழ்க்கையை வெல்ல விரும்பும் இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிய கோட்பாடு. 

அளவுகடந்த உறக்கத்தையும் வள்ளுவர் கண்டனம் செய்கிறார். அதிக நேர உறக்கம் ஆயுளைக் கெடுக்கும் என நம்மிடையே ஒரு பழமொழி உண்டு. தெய்வத்தைக் கூடக் குறித்த நேரத்திற்கு மேல் உறங்கவிடாமல் திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்புகிறோம் நாம். தெய்வங்கள் உறங்குவதுமில்லை. அது பாவனை உறக்கம் தான். அதை அறிதுயில் என்கிறார்கள். தூங்காமல் தூங்கும் தூக்கம் அது. அனைத்தையும் கண்காணித்துக் கொண்டே உறங்கும் உறக்கம். 

தெய்வங்களே விழித்திருக்க வேண்டியது அவசியம் என்றால் மனிதர்களைப் பற்றிக் கேட்க வேண்டுமா என்ன? அதனால்தான் பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி பாடி பாரத மாதாவை விழித்துக் கொள்ளச் செய்தார் மகாகவி பாரதியார். பாரதமாதா விழித்துக் கொள்கிறாள் என்றால் பாரத மக்கள் அனைவரும் விழித்துக் கொள்கிறார்கள் என்றுதானே பொருள்? 

எனவே காலந்தாழ்த்தாமை, மறதி இல்லாமை, சோம்பலின்மை, அதிக நேரம் உறங்காதிருத்தல் என வள்ளுவர் சொல்லும் இந்த நான்கு பண்புகளைப் பழகிக் கொண்டால் இளைஞர்கள் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி. இந்த நான்கு குணங்களில் சோம்பல் இல்லாமல் இருப்பதுதான் மிகக் கடினம். சோம்பல் தோன்றும்போதே அதை வெறுத்து ஒதுக்கிச் செயல்படத் தொடங்க வேண்டும். 

யார் அதிகச் சோம்பேறி என்று கண்டறிய ஒரு போட்டி வைத்தார்கள். அதில் முதல் பரிசு பெற்றான் ஒருவன். பரிசை வந்து பெற்றுக் கொள்ளுமாறு, 
பத்தடி தள்ளி அமர்ந்திருந்த அவனிடம் சொன்னார்கள்.  ‘அவ்வளவு தூரம் யார் நடப்பதாம்? இங்கே வந்து என்னிடம் கொடுத்துவிட்டுப் போங்கள்,’ என்று சொல்லி எனக் கொட்டாவி விட்டானாம் அவன்! 

திரைப்பாடல்


பாடல்: தூங்காதே தம்பி தூங்காதே
பாடல் வரிகள் இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்
பாடலின் இசை இயற்றியவர்: எஸ்.எம். சுப்பையா நாயுடு
திரைப்படம்: நாடோடி மன்னன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1958


தூங்காதே தம்பி தூங்காதே-நீயும்
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே!

(தூங்)

நீ-தாங்கிய உடையும் ஆயுதமும்-பல
சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்,
சக்தியிருந்தால் உன்னைக்கண்டு சிரிக்கும்
சத்திரந்தான் உனக்கு இடம் கொடுக்கும்

(தூங்)

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானுங்கெட்டார்; சிலர்
அல்லும் பகலும் தெருக்கல்லா யிருந்துவிட்டு
அதிர்„டமில்லையென்று அலட்டிக் கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்-உன்போல்
குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்!

(தூங்)

போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்-உயர்
பள்ளியில் தூங்கியவன் கல்வியழந்தான்!
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்-கொண்ட
கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்-இன்னும்
பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்-பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா!

(தூங்)

மடியும் விரைந்து செய்வதனை நீட்டித்து செய்யும் இயல்பும் மறப்பும் துயிலும் ஆகிய இந்நான்கும் இறக்கும் இயல்பினை உடையார் விரும்பி ஏறும் மரக்கலம்  என்பார். 

முன் நிற்கப்பாலதாய மடி செய்யுள் நோக்கி இடைநின்றது. நெடுமையாகிய காலப்பண்பு அதாவது கண் நிகழ்வதாய செயல்மேல் நின்றது. காலநீட்டத்தையுடைய செயல்முதல் மூன்றும் தாமத குணத்தின் தோன்றி உடன் நிகழ்வன ஆகலின் மடியோடு ஒருங்கு எண்ணப்பட்டன. இறக்கும் இயல்பு. நாள் உலத்தல் இவை துன்புறும் நீரார்க்கு இன்புறுத்துவபோன்று காட்டி, அவர் விரும்பிக் கொண்டவழித் துன்பத்திடை வீழ்த்தலின், நாள் உலந்தார்க்கு ஆக்கம் பயப்பது போன்று காட்டி அவர் விரும்பி ஏறியவழிக் கடலிடை வீழ்க்கும் கலத்தினை ஒக்கும் என்னும் உவமைக் குறிப்புக் காமக் கலன் என்னும் சொல்லால் பெறப்பட்டது. இதற்கு விரும்பிப் பூணும் ஆபரணம் என்று உரைப்பாரும் உளர் எனும் உரைச் சிறப்பு அறிக. 

English Meaning - As I taught a kid - Rajesh
Dilatoriness/procrastination, forgetfulness, laziness, sleeping are the four qualities that can destroy a person, his fame and wealth easily. 

Questions that I ask to the kid
What are the four qualities that destroy you?

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும்

குறள் 634
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு
[பொருட்பால், அமைச்சியல், அமைச்சு]

பொருள்
தெரிதல் - தோன்றுதல்; விளக்கமாதல்; அறிதல்; ஆராய்தல்; தெரிந்தெடுத்தல்; அரித்தெடுத்தல்; காணும்ஆற்றலைப்பெற்றிருத்தல்; மனமறிதல்; கேட்டல்.
தெரிதலும் - ஒரு செயலை (தன்) மனம் உணரும் படி முழுமையாக ஆராய்ந்து அறிந்துக்கொள்ளுதல். அதற்கு தேவையான வலிமையையும் ஆராய்தல், செயலின் சிறப்பாக செய்வதற்கான மாற்றுகளை ஆராய்தல்
தேர்ந்து செயலும் - தேர்ந்துசெயல் - செயல்கை கூடும் வகையறிந்து செயல்புரிகை ஆற்றலும்
ஒருதலை - n. id. +. 1. One-sidedness; ஒருசார்பு. ஒருதலையா னின்னாது காமம்(குறள், 1196). 2. Positiveness, certainty; நிச்சயம். ஒருதலை யுரிமை வேண்டியும் (தொல். பொ. 225),
ஒருதலை - இன்றியமையாமை; கட்டாயம்; நிச்சயம்; ஓரிடம்; ஒருசார்பு; ஒருபக்கம்.
ஒருதலையாச் சொல்லலும் - கேட்போர் மறுக்க முடியாத அளவிற்கு நிச்சயமாக உரைத்தல்/ சொல்லுதல்
வல்ல(து) - வலிமையுள்ள(து); திறமையுள்ள(து).
அமைச்சு - அமைச்சன்; அமைச்சுஇயல்,  2. Office and functions of a minister;மந்திரித்தன்மை.

முழுப்பொருள்
இக்குறளில்  ஒரு அமைச்சர் எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்கிறார்.

முதலாவதாக, ஒரு செயலை செய்யும் பொழுது அதனை பற்றிய தெளிவு அமைச்சருக்கு மிக முக்கியம். ஏனென்றால் அதனை செயல்படுத்த வேண்டும் மற்றவருக்கு  எளிதாக விளங்கும் அளவு தெரிவிக்க வேண்டும். ஆதலால் அச்செயலை பற்றிய புரிதலுக்கான ஆராய்ச்சியை திறம்பட செய்தல் மிக அவசியம். ஒரு செயலுக்கு தேவையான மாற்றுகளையும், செயலின் விளைவுகளையும், செயல் ஆற்றப்படும் இடத்தின் தன்மையையும், காலத்தின் தன்மையையும், சிறப்பாக செய்வதற்கு தேவையான வலிமையையும், செய்யும் பொழுது வரக்கூடிய இடர்களையும், இடர்களை எதிர்கொள்வதற்கான வியூகங்களையும் ஆராய்ந்து இருக்க வேண்டும். செயல் அறம் சார்ந்த ஒன்றா என்றும் தெரிந்து இருக்க வேண்டும். ஆராய்ந்தப்பின் சிறந்த ஐயமில்லா (பெரும்பாலும்) நிலைப் பிரியா முடிவினை எடுத்தல் வேண்டும். ஆக ஒரு செயலை (தன்) மனம் உணரும் படி முழுமையாக எவ்வித ஐயப்பாடுகளும் இல்லாமல் அறிந்துக்கொள்ளுதல் மிக அவசியம். 

இரண்டாவதாக, ஒரு செயலை திறம்பட செயலாற்றுவது அமைச்சருக்கு அவசியம். ஒரு செயலை தெரிந்துக்கொள்ளுதல் வேறு அதனை களத்தில் ஆற்றுவது வேறு. களத்தில் பல சவால்கள் உள்ளன. உதாரணமாக செயலை ஆற்றும் மனித வளம், செயலுக்கு தேவையான நிதி, செயலுக்கு வரக்கூடிய இடர், காலத்தின் தன்மை, இடத்தின் தன்மை என்று பல உள்ளன. இவை அனைத்தையும் கற்று தேர்ந்து இருக்க வேண்டும். தன்னிடம் வேலை செய்வோரிடம் வேலையை செய்து முடித்துக்கொள்ளும் தலைமை பண்பு இருத்தல் வேண்டும். ஒரு செயலை துவங்கும் பொழுது எல்லோருக்கும் பரவலாக ஊக்கம் இருக்கும். ஆனால் சிறிது காலம் கழித்து ஊக்கம் குறையும். சில நேரங்களில் இடர்கள் வரும் பொழுது ஊக்கமே இல்லாமல் மக்கள் துவண்டு இருப்பர். அத்தகைய ஊக்கமில்லா நேரங்களில் ஊக்கமுடையச் செய்வது தலைமையின்/அமைச்சரின் பொறுப்பாகும். மேலும், செயலை செய்யும் பொழுது நாம் திட்டமிட்ட மாதிரி நடக்காது. நீண்ட கால நன்மையையும் தற்கால சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு எது நன்மை பயக்கும் அதனை செய்யவேண்டும். சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி திட்டங்களை புதுப்பித்துக்கொண்டு செயலாற்ற வேண்டும்.

மூன்றாவதாக, ஒரு செயலை தலைவனிடமும், மற்ற அமைச்சர்களிடமும், செயலின் பங்கு வகிக்கும் முக்கிய தலைவர்களிடமும், மக்களிடமும் தொடர்புக்கொண்டு செயலை அவர்கள் எவ்வித ஐயப்பாடுமில்லாமல் தெளிவாக உணரும் படி  திறம் பட ஞயம் பட உரைத்தல் வேண்டும். ஆயினும் சொல்லும் கருத்தில் ஒரு தீர்க்கம் வேண்டும். அதாவது நிச்சயத்தன்மை. ஏனெனில் ஒரு செயலை விளக்கும் பொழுதோ ஆற்றும் பொழுதோ பிறர் பல கருத்தினை கூறுவர். ஒவ்வொருவர் கூறுவதுக்கு ஏற்றவாரு செயலை மாற்றிக்கொள்ள கூடாது. தன் நிலையில் இருந்து பிரியக்கூடாது. (அதற்காக அமைச்சர் பிறருக்கு செவி கொடுக்கக்கூடாது என்றில்லை. அவையெல்லாம் திட்டம் தீட்டும் பொழுதே ஆராய்ந்து இருக்க வேண்டும்). அப்படி செய்தால் (செயலை ஆற்றும்) மக்களிடம் குழப்பமே ஏற்படும். ஒரு அரசாங்கத்தில் பல அமைச்சர்கள் இருப்பர். நாம் ஒரு திட்டத்தை தீட்டினால் அதனால் இன்னொரு அமைச்சருக்கு வேலை அதிகமாக கூடும். அதனால் அவர் தனது வேலையை குறைக்க நமது திட்டத்தை குறைச்சொல்லக்கூடும். அந்த அமைச்சர் நமது நண்பர் அல்லது வேண்டியவர் என்பதற்காக ஒருதலையாக நடந்துக்கொண்டு செயல்படக்கூடாது. எது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதோ அதனை செய்ய வேண்டும். இது குறிப்பாக நிர்வாகத்திற்குப் பொருந்தும். 

ஆக இம்மூன்று பண்புகளும் அமைச்சருக்கு அவசியம் என்கிறார் திருவள்ளுவர். இது நிர்வாகத்தில் வேலை செய்யும் தலைவர்களும் பொருந்தும். 

ஒர் அமைச்சன் தன்னுடைய ஆற்றலால் அடுத்து வருவனவற்றை முன் கூட்டியே கூர்த்த மதியால் உணர்தலும், அதற்கு ஏற்றவாறு தாம் செல்லும் பாதையை திருத்திக்கொள்வதையும், கம்பர் மாரீசவதைப் 167 படலத்தில், “ஆற்றலால் அடுத்ததெண்ணும் அமைச்சரை”, என்கிறார்.

சிறுபஞ்சமூலப் 57 பாடல் இக்குறளில் பேராற்றல் உள்ள அமைச்சருக்கு இருக்கவேண்டியனவாக, அவன் அறிந்திருக்க வேண்டியனவாக இவ்வாறு கூறுகிறது.

“தன்நிலையும் தாழாத் தொழில்நிலையும் துப்பெதிர்ந்தார்
இல்நிலையும் ஈடில் இயல்நிலையும் – துன்னி
அளந்தறிந்து செய்வான் அரசமைச்சன் யாதும்
பிளந்தறியும் பேராற்ற லான்”

மேலும்
“செறிந்தவர் தெளிந்த நூலால் சிறந்தன தெரிந்து கூறி
அறிந்தவை ஆற்ற கிற்கும் அமைதியான் அமைச்சன்” (சூளா.மந்திரப்.9)

“செம்மையில் திறம்பல் செல்லாத் தேற்றத்தார் தெரியுங்  காலம்
மும்மையும் உணர வல்லார் ஒருமையே மொழியும் நீரார்” (கம்ப.மந்திரப் 9)


மேலும்: அஷோக் உரை

தூக்கி வினை செய்
அழகு அலாதன செய்யேல்
 நன்மை கடைப்பிடி.
பேதைமை அகற்று

செய்வன திருந்தச் செய்
பருவத்தே பயிர் செய்
கௌவை அகற்று
தோற்பன தொடரேல். 
வித்தை விரும்பு

ஞயம்பட உரை
சுளிக்கச் சொல்லேல்
மிகைபடச் சொல்லேல்
மொழிவது அற மொழி.

பரிமேலழகர் உரை
தெரிதலும் - ஒருகாரியச் செய்கை பலவாற்றால் தோன்றின் அவற்றுள் ஆவது ஆராய்ந்தறிதலும்; தேர்ந்து செயலும் - அது செய்யுங்கால் வாய்க்கும் திறன் நாடிச் செய்தலும்; ஒருதலையாச் சொல்லுதலும் - சிலரைப் பிரித்தல் பொருத்தல் செயற்கண், அவர்க்கு இதுவே செயற்பாலது என்று துணிவு பிறக்கும் வகை சொல்லுதலும்; வல்லது அமைச்சு - வல்லவனே அமைச்சனாவான். (தெரிதல், செயன் மேலதாயிற்று. வருகின்றது அதுவாகலின்.)

மணக்குடவர் உரை
ஒருவினையை நன்றாக ஆராய்தலும், அதனைச் செய்ய நினைத்தால் முடியுமாறெண்ணிச் செய்தலும், ஐயமாகிய வினையைத் துணிந்து சொல்லுதலும் வல்லவன் அமைச்சனாவான்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தெரிதலும் -ஒரு வினையைச் செய்யும் வகைபலவாகத் தோன்றின் அவற்றுட் சிறந்ததை அல்லது முழுவாய்ப்பாகவுள்ளதை ஆராய்ந்து அறிதலும்; தேர்ந்து செயலும் -அங்ஙனம் அறிந்தபடி செய்யுங்கால் வெற்றிக் கேதுவான வழிகளைக் கையாளுதலும்; ஒருதலையாச் சொல்லலும் - சிலரைப் பிரித்தல் பேணுதல் பொருத்தல் பற்றி இன்னதே செய்யத்தக்க தென்று திட்டவட்டமாகச் சொல்லுதலும்; வல்லது அமைச்சு -வல்லவனே அமைச்சனாவான்.

ஐயுறவாகவும் கவர்படவும் சொல்லின் வெற்றியின்மையொடு கேடாகவும் முடியுமாதலின், 'ஒருதலையா' என்றார்.

மு.வ உரை
(செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைப் பற்றி பலவகையிலும் ஆராய்ந்து அறிதல், வாய்ப்பு வரும்போது ஆராய்ந்தபடி செய்தல், நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல்

குறள் 564
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்
[பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
இறை - உயரம்; தலை; கடவுள்; தலைவன்; அரசன்; உயர்ந்தோன்; மூத்தோன்; பெருமையிற்சிறந்தோன்; கணவன்; பறவையிறகு; கடன்; வீட்டிறப்பு; மறுமொழி; மணிக்கட்டு; குடியிறை; சிறுமை; அற்பம்; காலவிரைவு; சிவன்; பிரமன்; மாமரம்.
கடியன் - கடுமையுள்ளவன், கடினசித்தமுடையவன்.
என்று - என்றுசொல்லி
உரை - உரைக்கை; சொல்; பொருள்விளக்கம்; ஒலி; பேச்சு; மொழி; முழக்கம்; ஆசிரியவசனம்; ஆகமப்பிரமாணம்; மாற்றுரை; விடை; பொன்; புகழ்; தேய்வு; எழுத்தின்ஒலி; புகழுரை; விரிவுரை
உரைக்கும் - சொல்லுவார்கள், முழங்குவார்கள்
இன்னாச் - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி; வெறுப்பு.
சொல் - சொல், பேச்சு
வேந்தன் - எல்லா ஆற்றலும் பெற்ற அரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.
உறை பெருமை; நீளம்; உயரம்; பொருள்; மருந்து; உணவு; வெண்கலம்; பெய்யுறை; ஆயுதவுறை; நீர்த்துளி; மழை; காரம்; போர்வை; உறுப்பு; இருப்பிடம்; பாலிடுபிரை; ஓர்இலக்கக்குறிப்பு; வாழ்நாள்; துன்பம்; கிணற்றின்அடியில்வைக்கும்மரவளையம்; பொன்; பாம்பின்நச்சுப்பை.
கடுகி - சுண்டைச்செடி, III. v. i. diminish, grow short, குறை
ஒல்லைக் - விரைவு; வேகம்; காலவிரைவு; சீக்கிரம்; பழைமை; தொந்தரவு.
கெடு - கேடு, அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; அழகின்மை.
கெடும் - அழியும்

முழுப்பொருள்
ஒரு நாட்டிலும் அல்லது நிர்வாகத்திலும் அல்லது குடும்பத்திலும் தலைவனானவன் நற்பெயர் எடுப்பதே சிறந்தது. ஆனால் என் நாட்டுத்தலைவன், என் நிர்வாகத்தின் தலைவன், என் குடும்ப தலைவன் மிகுந்த கடுமையானவன் என்று மக்கள் கூறும் அளவிற்கோ, கடுமையான சித்தம் / சித்தாத்தங்கள் கொண்டவன், மக்கள் அச்சப்படுகின்ற அளவிற்கோ நாட்டில் ஆட்சிப்புரிகின்ற (வீட்டில் நடந்துக்கொள்கின்ற, நிர்வாகத்தில் பணிப்புரிகிற) தலைவன் இன்னாசொல் ஈன்றியுள்ளான் என்றாகும். அத்தகையத் தலைவன் தான் ஈன்ற பெருமை, செல்வம் எல்லாவற்றையும் வாழ்நாளையும் மிக விரைவில் இழந்துவிடுவான் அல்லது அவை மிக விரைவில் குறைந்துவிடும்.

உதாரணமாக நாம் ஹிட்லரை நினைவுக்கூறலாம். என்ன தான் ஹிட்லர் ஜெர்மணிக்கு நல்லது செய்தாலும் அவனை அந்நாட்டு மக்கள் வெறுத்தார்கள். அவன் செய்த கடுமையான வற்றை கண்டு மனதளவில் கூசினார்கள். அத்தனை லட்ச மக்களின் இன்னாசொல்லே ஹிட்லரை அழித்தது என்றும் கூறலாம்.


மேலும்: அஷோக் உரை

ஆத்திச்சூடி
கடிவது மற
நொய்ய உரையேல்
பழிப்பன பகரேல்
ஞயம்பட உரை
வஞ்சகம் பேசேல்
காப்பது விரதம்
கீழ்மை அகற்று
குணமது கைவிடேல்

சுளிக்கச் சொல்லேல்

பரிமேலழகர் உரை
இறை கடியன் என்று உரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் - குடிகளான் 'நம் இறைவன் கடியன்' என்று சொல்லப்படும் இன்னாத சொல்லையுடைய வேந்தன், உறை கடுகி ஒல்லைக்கெடும் - ஆயுளும் குறைந்து செல்வமும் கடிதின் இழக்கும். (நெஞ்சு நொந்து சொல்லுதலான், இன்னாமை பயப்பதாய சொல்லை 'இன்னாச் சொல்' என்றார். 'உறை' என்பது முதனிலைத் தொழிற் பெயர். அஃது ஈண்டு ஆகுபெயராய் உறைதலைச் செய்யும் நாள்மேல் நின்றது. அது குறைதலாவது, அச்சொல் இல்லாதார்க்கு உள்ளதிற் சுருங்குதல்.)

மணக்குடவர் உரை
தன்னிழலில் வாழ்வாரால் அரசன் கடியனென்று கூறப்பட்ட இன்னாத சொல்லையுடைய வேந்தனானவன் தானுறையும் இடம் வெகுளப்பட்டு விரைந்து கெடும்.

இது நாடும் தான்உறையும் இடமும் பொறுப்பினும் தெய்வத்தினாற் கெடுவனென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர்  உரை
இறை கடியன் என்று உரைக்கும் ; இன்னாச்சொல் வேந்தன்-நம் அரசன் கொடியவன் என்று குடிகளாற் சொல்லப்படும் துன்பந்தருந் சொல்லைத் தோற்றுவிக்கும் அரசன்; உறை கடுகி ஒல்லைக் கெடும்-வாழ்நாள் குறைந்து தன் செல்வத்தையும் விரைந்திழப்பான்.

இன்னாச்சொல் உளம் நொந்து உரைக்கும் சொல். 'உறை' முதனிலைத் தொழிலாகு பெயர். உறைதல்-தங்குதல் அல்லது குடியிருத்தல்.

மு.வ உரை
நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்

சாலமன் பாப்பையா உரை
நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ் சொல்லைப் பெற்ற ஆட்சி அதன் ஆட்சிக் காலம் குறைந்து விரைவி்ல் அழியும்.

நன்றி: ரிஷ்வன்
கொடியவன் என
குடிகளால்
கருதப்படும் அரசனின்
ஆயுட்காலம் அவன்
வருத்தப்படும் அளவில்
விரைவில் அழியும்.

English Meaning - As I taught a kid - Rajesh
“My king/leader/family-head – he is a tyrant” : such a denouncement/decry/criticize/discredit is certain to hasten a king’s downfall. 

In a country or organization or family, its is better for the head to a good name/review. But, if a country's leader / organization's leader / family head gets a name that he is very difficult / tyrant to the extent that people are afraid of him then it means that the leader has yield painful words from his countrymen/organization/family because of his act, behavior or treatment.  Such a king might have earnt lots of money or made the country/family richer. Yet, he would loose all those wealth very quickly. 
For e.g. Adolf Hitler did many things in favor of Germany but his own citizens hated for all the cruelty that Hitler carried out. Hence, Hitler who earnt such a bad name also died very soon. 

Questions that I ask to the kid
What should a head not earn? Why? What if he earns what he shouldn't? Give me an example.