Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

ஊடி இருந்தேமாத் தும்மினார்

குறள் 1312
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை 
நீடுவாழ் கென்பாக் கறிந்து.
[காமத்துப்பால், கற்பியல், புலவி நுணுக்கம்]

பொருள்
ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். பொய்க்கோபம் கொள்ளுதல், சிணுங்குதல், கருத்து வேறுபாட்டால் வரும் (சிறிய) பிணக்கு
ஊடி - பொய் சினம் கொண்டு பேசிக்கொள்ளாமல்
இருந்தேமா - இருக்கும் பொழுது

தும்முதல் - தும்மல்; மூச்சுத்தடைப்பட்டு ஒலியுடன் மூக்கு வாய் வழியாய் வெளிவருதல்; விடுதல்; மூச்சுவிடுதல்.

தும்மு -கிறேன், தும்மினேன், வேன், தும்ம, v. n. To sneeze. 2. To arise, revive, உயிர்க்க. 3. v. a. To emit, let go, leave, விட. (c.)
தும்முவது என்பது ஒருகணம் மூச்சு நின்று வருவது; இறப்புக்குச் சமம். அதனால் தும்மும்போது இப்போதும்கூட “நீண்ட ஆயுள் உண்டாவதாக” என்று பொருள் வரும்படி,”தீர்காயுசு” என்பர் பெரியோர். இந்த பழக்கம் இந்தியப்பழக்கமாக மட்டும் இல்லாமல், மேற்கத்திய நாடுகளிலும், “கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” (God bless) என்று கூறுகிறார்கள். இது கலாச்சாரங்களைத் தாண்டி வரும் பழக்கம்தான்

தும்மினார் - தும்மல் செய்தார். அதாவது பொதுவாக தும்மினால் நம்மை யாரோ நினைக்கிறார்கள் என்றும் பொருள் கொள்வார்கள். ஆதலால் பொய்சினம் கொண்டாலும் அவரும் தன்னை உண்மையாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்.

யாம் தம்மை - நான் அவரை நினைத்து

நீடு - நெடுங்காலம்; நிலைத்திருக்கை.

‘நீடு வாழ்க!’  - நீங்கள் நெடுங்காலம் வாழ்க 
என்பாக்கு - என்னுடைய மனம்
அறிந்து - அறிந்ததனால்

முழுப்பொருள்
காதலர்களும் கணவன் மனைவி மார்களும் தங்கள் வாழ்வில் குறிப்பாக இல்லற வாழ்வின் துவக்க காலத்தில் சிறு சிறு (சில நேரம் பெரிய) சண்டைப் போட்டுக்கொள்வர். ஆனால் உண்மையில் இவை பொய்க் கோபம் மட்டுமே. இந்த சண்டை தீர்ந்த பின்பு இவர்கள் காதல் இன்னும் அதிகரிக்கும். அப்படிப்பட்ட பொய்சினத்தினை ஊடல் என்பார்கள்.

இப்படி ஒரு தடவை ஊடிக்கொண்டு இருக்கையில் இருவரும் பேசாமல் இருந்தனர். கணவரோ இவளை எப்படி பேச வைப்பது என்று எண்ணினார். இவள் கொண்டு இருப்பது பொய்க்கோபம் என்று எப்படி உடைப்பது என்று சிந்தித்தார். அவருக்கு ஒரு வழி தோன்றியது.

தும்முவது என்பது ஒருகணம் மூச்சு நின்று வருவது; இறப்புக்குச் சமம். அதனால் தும்மும்போது இப்போதும்கூட “நீண்ட ஆயுள் உண்டாவதாக” என்று பொருள் வரும்படி,”தீர்காயுசு” என்பர் பெரியோர்.

ஆதலால் தும்மினால் தீர்காயுசு (நீடு வாழ்க) என்று அவள் வாழ்த்தினால் அவள் தன் மீது காதல் கொண்டு இருக்கிறாள். இது வெறும் பொய்க்கோபம் என்பதை நிறுபித்து விடலாம். அவளுடம் மறுபடியும் பேசலாம்.

ஆகவே தலைவன்/ கணவன் தும்மினார்.

ஆனால் தலைவியோ/ மனைவியோ தும்மினால் இவரை நான் வாழ்த்துவேன் என்று அறிவார். ஆதலால் கோபம் இல்லை என்று நிறுபித்து விடலாம். அதனால் தான் தும்முகிறார் என்று மீண்டும் தலைவன் மீது பொய்க்கோபம் கொள்கிறாள் தலைவி!

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தலைமகன் நீக்கத்துச் சென்ற தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்தது கூறியது.) ஊடி இருந்தேமாத் தும்மினார் - யாம் தம்மோடு ஊடி உரையாடாதிருந்தேமாகக் காதலர் தும்மினார்; யாம் தம்மை நீடுவாழ்கென்பாக்கு அறிந்து - அது நீங்கித் தம்மை நீடுவாழ்கென்று உரையாடுவேமாகக் கருதி. (தும்மியக் கால் வாழ்த்துதல் மரபாகலான், உரையாடல் வேண்டிற்று என்பதாம். இயல்பான் நிகழ்ந்த தும்மலைக் குறிப்பான் நிகழ்ந்ததாகக் கோடலின், நுணுக்கமாயிற்று.).

மணக்குடவர் உரை
தம்மோடு புலந்து உரையாடாது இருந்தேமாக: அவ்விடத்து யாம் தம்மை நெடிதுவாழுவீரென்று சொல்லுவே மென்பதனை யறிந்து தும்மினார். இது தலைமகள் தோழிக்குக் கூறியது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(தலைமகன் சென்றபின் வந்த தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்த கூறியது.)

ஊடி இருந்தேமாத் தும்மினார் - யாம் தம்மோடு உரையாடா திருந்தேமாகக் காதலர் தும்மினார்; யாம் தம்மை நீடுவாழ்க என்பாக்கு அறிந்து - அது எதற்கெனின், யாம் ஊடல் நீங்கித் தம்மை நீடுவாழ்க என்று வாழ்த்தி உரையாடுதற்கு.

இயல்பாக நிகழ்ந்த தும்மலை வேண்டுமென்று செய்ததாகக் கொண்டதால் (புலவி) நுணுக்கமாயிற்று. தும்மியபோது வாழ்த்துதல் மரபாகலால், உரையாடல் வேண்டியதாயிற்று என்பதாம். ' யாம் ' என்றது அரசப் பன்மை (Royal 'we' ) , அகரந் தொக்கது.

மு.வ உரை
காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.

சாலமன் பாப்பையா உரை
நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன்; நீடு வாழ்க, என்று சொல்லி அவரோடு பேசுவேன். என்று எண்ணி, வேண்டும் என்றே தும்மினார்! நானா பேசுவேன்? (ஆனாலும் வாழ்த்தினாள்).

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
சொன்ன நேரம்  வருவதில்லை வந்த  பின்போ
          சுகம் உடனே வேண்டும் என்று  அலைகின்றார் பார்
சின்னவளா நான் அறிவேன் இவரை நன்கு
          சிரிப்பின்றி  முகம் மாற்றித் துன்பப் பட்டேன்
என்னவரோ மிகப் பெரிய  கெட்டிக்காரர்
          என் ஊடல் தீர்ப்பதற்காய் தும்மல் ஒன்றை
தன்னறிவால் உண்டாக்கித் தும்மித் தீர்த்தார்
          தனை மறந்து நான் அவரை வாழ்த்தவென்று

யார் நினைக்கிறார்களோ...? (நன்றி கவிப்புயல் இனியவன்)

என்னவனோடு .....
ஊடல் செய்தேன் .....
தும்மினான் ....
நான் நூறு என்று ....
வாழ்த்துவேன் ....
என்று நினைத்தார் ....!!!

நன்றாக நான் ....
வாழ்த்துவேன் ...
யார் நினைகிறார்களோ...?
என்றாலும் மனம் ...
தன்னை அறியாமல் ...
வாழ்த்தியது ....!!!


சாதாரணமாக நம் விட்டில் பெரியவர்கள், வயதில் சிறியோர் தும்மினால், "நீடூழு வாழ்க" என ஆசிர்வதிப்பர்.அந்தப் பழக்கம் வள்ளுவன் காலத்திலேயே இருந்திருக்கிறது என்பது இக்குறளால் தெரிகிறது. காதலி, காதலனிடன் ஊடல் கொள்கிறாள். ஊடலை மறக்க அவன் தும்மினானாம். அப்போதாவது எப்போதும் சொல்வதுபோல "நீ வாழ்க" என்று கூறி ஊடலை முடித்துவைப்பாள் என்ற எண்ணத்தில்.

காதலரோடு ஊடல் கொண்டிருந்த போது, நான் அவரை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.

தும்மல் விளைவித்த ஊடல்! (நன்றி: தினமணி)
தும்மல்' என்ற செயல் உடற்கூற்றியல் சார்ந்த நிகழ்வு. அளவுக்கு மீறிய நெடியைத் தாங்கமுடியாமல், அதை முகர்வதால் மூச்சு விடுவதில் உருவாகும் தடையழர்ச்சியின் வெளிப்பாடாக, திணறல் ஏற்பட்டு அதை, விடுவிக்க மூக்கும் வாயும் முழு ஆற்றலுடன் மூச்சை வெளியேற்றுவதால் உண்டாவது. தும்மல், "நீர்க்கோவை'யாலும் (ஜலதோஷம்) ஏற்படும். இஃதன்றி, காற்று மாசு, சுற்றுச்சூழல், உணவு, உடை, அணிகலன் இவற்றின் ஒவ்வாமையாலும் தும்மல் வரும். இவைதவிர மனவியல் காரணங்களாலும் தும்மல் உருவாகும் என்று கூறப்படுகிறது.

÷மங்களகரமான செயல்களைப் பற்றிப் பேசும்போது தும்மல் போடுபவர்கள் கடிந்துகொள்ளப்படுவதும் நடைமுறையில் உள்ளது. தும்முபவர் ஒற்றைத் தும்மலுடன் நிறுத்திவிடாமல், மேலும் ஓர் தும்மலைப் போட்டால் அதை நற்சகுனமாக ஏற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. குழந்தைகள் தும்மினால் அக்குழந்தைகளை ""நூறாண்டு வாழ்க!'' என்று குடும்பத்தினர் வாழ்த்தும் வழக்கம் இன்றும் உள்ளது. ஆனால், தும்மல் குறித்து திருவள்ளுவர் என்ன கூறியுள்ளார் என்பதைக் காண்போம்.

÷தலைவனும் தலைவியும் ஊடல்கொண்டு ஒருவருடன் ஒருவர் பேசுவதைத் தவிர்த்து இருக்கின்றனர். வழக்கம்போல தலைவன்தான் தன் பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து, தான் சமாதானத்துக்குத் தயார் என்பதை உணர்த்த ஓர் உபாயம் கண்டுபிடிக்கிறான். தும்மல் போட்டால் அவரை வாழ்த்தும் பொருட்டு ""வாழ்க பல்லாண்டு!'' என்று கூறுதல் வழக்கத்தில் உள்ளதால், தலைவன் செயற்கையாக ஓர் தும்மலை வரவழைத்து தலைவியின் காதுகளில் ஒலிக்கும்படியாகப் பேரிரைச்சலுடன் தும்முகிறான்.

÷தலைவிக்கு, தலைவனின் நோக்கம் புரிந்துவிட்டது. அவரோடு நான் பேசாதிருக்கிறேன் ஆகையால், தம்மை ""நெடுங்காலம் வாழ்க'' என்று நான் வாய்திறந்து சொல்லவாவது அவரோடு நான் பேசுவேன் என நினைத்து அவர் தும்மினார் போலும்' என எண்ணினாள்.

""ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ்க என்பாக்கு அறிந்து'' (1312)

இவ்வாறு அவர்கள் ஊடலுக்கு விடைகொடுத்துவிட்டுக் கூடிக்களித்து வாழும் நிலையில், ஒருநாள் தலைவன் எதேச்சையாக ஓர் தும்மலை வெளிப்படுத்தினான். தலைவியும் அனிச்சைச் செயலாக தலைவனுக்குத் தன் வாழ்த்தைத் தெரிவித்தாள். ஆனால், உடனே அவளுள் ஓர் ஐயம் தோன்றியது. நாம் அருகிலேயே இருக்கிறோம். இந்நிலையில் இவர் தும்முகிறார் என்றால், இவரை வேறு யாரோ ஒரு மையல்கொண்ட தையல் நினைக்கிறாள் என்றுதானே பொருள் என முடிவு செய்கிறாள். உடனே தாம் கொடுத்த வாழ்த்தை அழித்துவிடுகிறாள். தலைவனை நோக்கி, ""உங்கள்பால் காதல்கொண்ட வேறு மங்கை எவளோ ஒருத்தி உங்களை நினைத்த காரணத்தால்தானே தும்மினீர்?'' என்று அழுது புலம்புகிறாள். தும்மலால் நேர்ந்த இந்தத் துன்ப நிகழ்வைக் கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார் வள்ளுவர்.

""வழுத்தினாள் தும்மினேனாக அழித்து அழுதாள்
யார்உள்ளித் தும்மினீர் என்று'' (1317)

இதுகேட்டுப் பதறிப்போன தலைவன், தனது தும்மல் இயற்கையாக ஏற்பட்டதுதான் என்றும், தனக்கு வேறு எந்தப் பெண்ணுடனும் தொடர்பு இல்லை என்றும் தெளிவுபடுத்தி, தலைவியை சமாதானப்படுத்தினான். இந்தத் தும்மலை இயற்கைதான் என்பதை தலைவி புரிந்துகொண்டாள் என்று மகிழ்ந்தவனுக்கு அடுத்தும் ஓர் தும்மல் வரப்பார்த்தது. ஐயகோ.. இப்போதுதான் முந்தைய தும்மலால் ஏற்பட்ட சிக்கல் தீர்ந்திருக்கிறது; மீண்டும் ஓர் தும்மலா? மீண்டும் சிக்கல் உருவாகுமே என்று எண்ணி, வந்த தும்மலை அடக்க முயன்றான். ÷இதைப் பார்த்துக்கொண்டிருந்த தலைவி, ""உங்களை யாரோ காதலுடன் நினைக்கிறார்கள்; அதனால்தான் தும்மல் வருகிறது. ஆனால் நான் கேட்டுவிடுவேனோ என்பதற்காக அதை மறைக்கப் பார்க்கிறீர்'' என்று கோபத்தை வெளிப்படுத்தும் முகத்தான் அழுது மீண்டும் ஊடல் கொள்கிறாள்.

""தும்மச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

எம்மை மறைத்திரோ என்று'' (1318)

தும்மல் போடுவதில் இத்தனை நுட்பமான செய்திகளா? தும்மல் வந்தால் இனி காலம், நேரம் பார்த்துத்தான் தும்ம வேண்டும் போலிருக்கிறது!

"அடி'களின் பெருமை!

சிலப்பதிகாரத்தை இயற்றியவர் - இளங்கோவடிகள்
சிலப்பதிகாரத்தில் வரும் பெண் துறவி - கவுந்தியடிகள்
திருநாவுக்கரசு சுவாமியைப் போற்றி, பக்தி செய்தவர் - அப்பூதியடிகள்

முதன் முதலில் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் - மறைமலையடிகள்

இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தியவர் - காந்தியடிகள்

இசைத் தமிழ் நூலான "யாழ்' நூலை எழுதியவர் - விபுலானந்த அடிகள்.

வடலூரில் சமரச சன்மார்க சத்திய ஞான சபையை நிறுவியவர் - இராமலிங்க அடிகள்.

மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமையத் தூண்டுகோலாக இருந்தவர் - ஞானியாரடிகள்

No comments:

Post a Comment