Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

குறள் 1128
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து
[காமத்துப்பால், களவியல், காதற்சிறப்புரைத்தல்]

பொருள்
நெஞ்சத்தார் - நெஞ்சத்தில், மனதில் உள்ளவர்
காதல் அவராக - காதல் கொண்டவராக, மனம் விரும்புவராக
வெய்து - வெம்-மை, வெப்பமுடையது; வெப்பம்; துயரம்; வெப்பமுள்ள பொருளாலிடும் ஒற்றடம்.
உண்டல் -  உண்டாகுகை, உண்டல்; அழித்தல்; சிரித்தல்.
அஞ்சு - ஐந்து; அச்சம்; ஒளி.
அஞ்சுதும் - அச்சம் கொள்கிறது
வே - s. Spying, reconnoitering, espio nage, வேவு. (சது.),
-- (வேக,வெந்து) vee (veeka, ventu) வே (வேக,வெந்து) be cooked (in narrowest sense, in water and without seasoning), parcook; be hot
-- எரிதல்,  வெப்பமாதல், துன்பமுறுதல், சினமுறுதல்

பாக்கு - அடைக்காய்; கமுகு; எதிர்காலங்காட்டும் வினையெச்சவிகுதி; தொழிற்பெயர்விகுதி;

அறிந்து - தெரிந்ததனால், உணர்ந்ததனால்.

முழுப்பொருள்
மனதிற்கு இனியவர் காதலர் ஒரு பெண்ணின் மனதில் நிறைகிறார். அப்படிபட்டவர் பெண்ணின் மனதில் குடிகொள்வதனால் அவள் உணவு உண்ணும் பொழுது மிகுந்த கவனம் கொள்கிறாள். ஏன் என்றால் சூடான உணவோ அல்லது காரமான உணவோ உண்டால் அவை மனதிற்கு துன்பம் தரும் (யோசித்துப் பாருங்கள், நெஞ்செரிச்சல் வந்தால் தகாத உணவை உண்டு இருப்போம் என்கிறோம்). ஆகவே காதலருக்கும் துன்பம் வருமாம்.

ஆகவே சூடான உணவையோ காரமான உணவையோ உண்டால் கனவருக்கு துன்பம் வரும் என்று முன்னறே தெரிந்ததனால் அவள் அத்தகைய உணவை அஞ்சுகிறாளாம் தவிர்க்கிறாளாம்.

கேட்க பேதமையாய் இருந்தாலும் அதுவே காதலின் சிறப்பு! பேதமை இல்லா காதல் எங்கே!

ஒப்புமை
”நெஞ்சு களனாக நீயலென்” (குறுந்தொகை 36.3)

“........ நத்துறந்து
நெடுஞ்சேண் நாட்ட ராயினும்
நெஞ்சிற் கணியரோ தண்கடல் நாட்டே” (குறுந்தொகை 228.6)

“அவர் இருந்த என் நெஞ்சே” (குறுந்தொகை 340.7)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை 
(இதுவும் அது.) காதலவர் நெஞ்சத்தாராக வெய்து உண்டல் அஞ்சுதும் - காதலர் எம் நெஞ்சினுள்ளார் ஆகலான் உண்ணுங்கால் வெய்தாக உண்டலை அஞ்சாநின்றேம்; வேபாக்கு அறிந்து - அவர் அதனான் வெய்துறலை அறிந்து. ('எப்பொழுதும் எம் நெஞ்சின்கண் இருக்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறென்னை'? என்பது குறிப்பெச்சம்.).

மணக்குடவர் உரை
எம்மாற் காதலிக்கப்பட்டவர் எம்நெஞ்சத்திலிருக்கின்றார்: ஆதலானே வெய்தாக வுண்டலை அஞ்சாநின்றோம், அவர்க்குச் சுடுமென்பதனையறிந்து. இது நீ உண்ணாததென்னையென்று வினாயதோழிக்குத் தலைமகள் உணவில் காதலில்லை யென்று கூறியது. இது கரணத்து உறவு உரைத்தல்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
காதலவர் நெஞ்சத்தாராக - எம் காதலர் எப்போதும் எம் நெஞ்சினுள் ளிருக்கின்றாராதலால் ; வேபாக்கு அறிந்து - அவர் சூடுறுதலை யறிந்து ; வெய்துஉண்டல் அஞ்சுதும் - வெம்மையாக வுண்ணுவதற்கு அஞ்சுகின்றேம்

எப்போதும் எம்நெஞ்சிலிருக்கின்றவரைப் பிரிந்தாரென்று கருது வதென்னை என்பது குறிப்பெச்சம் , ' வேபாக்கு ' தொழிற்பெயர் ; 'பாக்கு ' தொழிற்பெயரீறு .
மு.வ உரை
எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம்.

சாலமன் பாப்பையா உரை
என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப் பயப்படுகிறேன்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
கம்பன் அவன் குறள் கற்று கரைந்ததைத்தான்
காட்டி நின்றேன் கம்பனது பாடல் தன்னில்
நம்பி யவன் கொண்ட குறள் இங்கே சொல்வேன்
நானிலத்தீர் தமிழ் கொணடே மகிழ்ந்திடுவீர்
செம்பு நிறப் பெண்ணொருத்தி வீட்டில் என்றும்
சீராகச் சூடாக எதையும் உண்பாள்
அம்பு விழிப் பெண்ணவளின் உள்ளே ஒரு
ஆணழகன் நுழைந்தானாம் குடி கொண்டானாம்

வம்பு வந்து சேர்ந்ததவள் வீட்டிற்குள்ளே அன்னை
வடிவழகுப் பெண்ணவட்கு அன்பு சேர்த்து
செம்பு நிறைப் பசும்பாலைக் காய்ச்சி அவள்
சீர் அறிந்து சூடாகக் கொண்டு தந்தாள்
கொம்பு முலைப் பெண்ணாளோ அருந்தவில்லை
கொண்டு தந்த தாயார்க்குப் புரியவில்லை
அன்பு கொண்டு உள்ளிருக்கும் காதலனோ
அச்சூட்டைத் தாங்கானென்றருந்தவில்லை

இதயத்தில் குடியிருப்பவனே ...!!!  (நன்றி கவிப்புயல் இனியவன்)
என் நெஞ்சுக்குள்ளே
குடியிருக்கும் என்னவனே
இதயமே உனக்கு கோயில்
நீயே என் இதய தெய்வம் ...!!!

என் இதய தெய்வமே
இதயத்தில் குடி கொண்டு
வாழ்பவனே - உனக்கு
சுட்டு விட கூடாது என்பதால்
சூடான உண்பதையே
தவிர்த்து விட்டேன்
என்னவனே ....!!!

No comments:

Post a Comment