Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

ஞாலம் கருதினுங் கைகூடுங்

குறள் 484
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்
[பொருட்பால், அரசியல், காலமறிதல்]

பொருள்
ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை

கருதினுங் (கருதினும்) - எண்ணினாலும், ஆசைப்பட்டாலும், நினைத்தாலும், குறிக்கோள் கொண்டாலும், விழைந்தாலும்,

கைகூடுங்  (கைகூடும்) - நடைவேறும், கிடைக்கும், இலக்கை எட்டுவோம்

காலம் - நேரம், பொழுது, பருவம், சமயம்,  தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்;

கருதி - பார்த்து, எண்ணி, ஆய்வு செய்து

இடத்தாற் (இடத்தான்) - செயல் செய்யும் இடத்திற்கு ஏற்ப / தன்மைக்கு ஏற்ப

செயின் - செய்தால்

முழுப்பொருள்
இவ்வுலகையே ஒருவர் விழைந்தால் அல்லது உலகம் போற்றும் சான்றோன் என்னும் உயரிய இலக்குகளை விழைந்தால் அதனை அவனால் அடைய முடியும். அவனுக்கு கிட்டும்.

ஆனால் அதனை அடைவதற்கு தேவையான செயல்களை நன்கு ஆராய்ந்து இருக்க வேண்டும். அதனை செய்ய வேண்டிய இடத்தினை ஆராய்ந்து இருக்க வேண்டும். அதனை செய்ய வேண்டிய சரியான நேரத்தை ஆராய்ந்து இருக்க வேண்டும்.

என்னதான் நாம் நன்றாகச் சிந்தித்துச் சரியான செயல்களைத் தேவையான ஆட்களை வைத்துக் கொண்டு செய்தாலும், அவை முழுமையான வெற்றியடையச் சரியான நேரமும் முறையான இடமும் தேவை.

சரியான நேரத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுத்துச் செய்யும் செயல்கள் இமாலய வெற்றியடைய வாய்ப்பு அதிகம். அதே சமயம், தவறான நேரத்தில் செய்தால் தோல்வியடையும் வாய்ப்புகள் அதிகம்.

அப்படி தக்க நேரத்தில் தக்க செயலை தக்க இடத்தில் செய்தால் ஒருவன் விழைந்த இலக்கை அடையலாம். அது இவ்வுலகே ஆனாலும் அடையலாம். 

உதாரணமாக சொன்னால் ”இளமையில் கல்” என்று ஔவையார் கூறியுள்ளார்ர். அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஏனெனில் ஒரு இளைஞராக இருக்கும் பொழுது நாம் தோற்றாலும் தவறுகள் செய்தாலும் நமக்கு மற்றவர்கள் கற்றுக்கொடுப்பர். அதுமட்டுமின்றி இளைஞராக இருக்கும் பொழுது குடும்பம், பொறுப்பு, போன்ற அழுத்தங்களும் கவனச்சிதறல்களும் இருக்காது. மேலும், ஒரு 35 வயதுக்கு மேல் மேற்படிப்பு படிக்கும் பொழுது நமக்கிருக்கும் உத்வேகமும் அச்சமும் இளைஞராக இருப்பதைவிட குறைவாகவே இருக்கும். ”இளங்கன்று பயமறியாது” என்பது. அதனால் தான் காலம் மிக முக்கியம் என்கிறார் திருவள்ளுவர்.

இன்றைக்கு ஒரு வருடத்தில் உலகெங்கிலும் சராசரியாக ஆறு லட்சம் நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. இவற்றை நாம் ஸ்டார்ட் அப் (Startup) நிறுவனங்கள் என்கிறோம். அவற்றில் பல நிறுவனங்கள் (கிட்டத்தட்ட 75 சதவிகிதம்!) தோல்வியடைகின்றன. தோல்வியடைந்த இந்த நிறுவனங்கள் தொடங்கிய விஷயம் நன்றாகத்தான் இருக்கும். அவர்கள் துவங்கிய சேவையோ, பொருளோ மிகவும் சிறந்ததாக, உபயோகமாகத்தான் இருக்கும். ஆனால் வெற்றி பெற முடியவில்லை! ஏனென்றால் அவர்கள் சரியான நேரத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுக்கத் தவறியதால்!

நேரம், இடம் இவற்றை ஒன்றாகச் சேர்த்து நாம் “சூழ்நிலை” என்று குறிப்பிடலாம். ஒரு நிறுவனம் தொடங்க வேண்டுமென்றால் பலவிதச் சூழ்நிலைகளைக் கவனிக்க வேண்டும். “அரசியல் சூழ்நிலை என்ன? பொருளாதாரச் சூழ்நிலை மேலோங்கி இருக்கிறதா? சமுதாயச் சூழ்நிலை எப்படி இருக்கிறது?” இது போன்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும். அதற்கேற்ப ஆரம்பித்த நிறுவனங்கள் மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன.

நாம் வீட்டில் நமது பெற்றோரிடம் ஒரு காரியம் சாதிக்கவேண்டும் என்றால் அவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று பார்க்கிறோம் அல்லவா. ஏனெனில் நேரம் முக்கியம். இது செய்யும் செயலுக்கும் தொழிலுக்கும்  மற்றும் நம் வாழ்வில் எல்லா நிலைகளுக்கும் பொருந்தும்.

எப்படிச் செய்ய வேண்டிய நேரத்தில் செய்தால் வெற்றி வாய்ப்பு அதிகமோ, செய்ய வேண்டிய நேரத்தில் செய்யவில்லையென்றால் இழப்பும் அதிகம்!

ஒருவர் இளமையில் (ஒரு 23 வயதில்) இருந்து செமித்துக்கொண்டு நன்கு முதலீடு செய்துவந்தால் அவர் 60 வயதில் பெறப்போகும் பயன் மிக மிக அதிகம். ஏனெனில் compound interest அவருக்காக நன்கு வேலை செய்யும். அதுவே ஒருவர் நடுவயதில் (35 வயதில்) சேமிக்க துவங்கினால் அவருக்கு 60 வயதில் பெறப்போகும் பயன் சற்றுக்குறைவாகவே இருக்கும். ஆதலால் எப்போது என்பது மிக முக்கியம்.

முறையாக இளம் வயதிலிருந்து சரியான உணவையும் உடற்பயிற்சியையும் பழக்கப்படுத்திக் கொள்ளாவிட்டால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். ”கண்கேட்டப் பிறகு சூரிய நமஸ்காரம்” செய்து பயனில்லை. ஒருவருக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் வந்த பின்பு வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வதை விட, இளமையில் இருந்தே நல்ல வாழ்க்கை முறையை பேணுவதும் அவ்வப்போது உடலை கண்காணிப்பதும் (மருத்துவமனைக்குச் சென்று முழுப் பரிசோதனை செய்வதும்) ஒருவருக்கு நன்மை பயக்கும். வரும் முன் காப்பது நன்று அல்லவா! பிரச்சனைகளை துவக்கத்திலேயே கண்டறிந்துக் கிள்ளி எறிவதும் மேல்

எப்படி நாம் சரியான நேரத்தையும் இடத்தையும் தேர்வு செய்வது? அனுபவத்தினால்தான்! நம் அனுபவத்திலோ, நம் துறையில் சாதித்தவர்களைப் பார்த்தோ நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதுவும் இல்லையா? தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருங்கள்! அயராது உழைப்பவர்களுக்குக் காலம் கனியும்! வெற்றி பெற்றவர்கள் பலரைப் பார்த்து நாம் சொல்வதுண்டு, “சரியான நேரத்தில் அந்த இடத்தில் இருந்தார். அதனால் தான் அது சாத்தியமாயிற்று”, “இடம் பார்த்து அடிப்பது, நேரம் பார்த்து அடிப்பது” என்று வழக்கத்தில் நாம் கூறுவோம்.

When: The Scientific Secrets of Perfect Timing by Daniel H. Pink என்ற ஒரு புத்தகம் எந்த நேரத்தில் ஒரு செயலை செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக பேசுகிறது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
ஞாலம் கருதினும் கைகூடும் - ஒருவன் ஞாலம் முழுவதும் தானே ஆளக் கருதினானாயினும் அஃது அவன் கையகத்ததாம், காலம் கருதி இடத்தான் செயின் - அதற்குச் செய்யும் வினையைக் காலம் அறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின். ('இடத்தான்' என்பதற்கு மேல் 'கருவியான்' என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க, கைகூடாதனவும் கைகூடும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் காலம் அறிதற் பயன் கூறப்பட்டது.)

மணக்குடவர் உரை
உலகமெல்லாம் பெறுதற்கு நினைத்தானாயினும் பெறலாம்: காலத்தைக் குறித்து இடனறிந்து செய்வனாயின்.

இஃது எல்லாப் பொருளையு மெய்துமென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஞாலம் கருதினும் கைகூடும் - ஒருவன் உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதினாலும் கைகூடும் ; காலம் கருதி இடத்தான் செயின் - அதற்குரிய வினையை அவன் தகுந்த கால மறிந்து இடத்தொடு பொருந்தச் செய்வானாயின் .

வினை பெரிதாதலின் இடமும் வேண்டியதாயிற்று . உம்மை உயர்வு சிறப்பு .

மு.வ உரை
(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

சாலமன் பாப்பையா உரை
ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.

Thirukkural - Management - Decision Making
In management concepts and practices, there are two types of errors. One is go error and the other is drop error. Go error is carrying out a decision when the time is not right for carrying that out. Drop error is not carrying out a decision when the time is right for carrying that out.

Both executing a task when the time is not favorable and not executing a task when the time is favorable will result in failure. Therefore, the right decision in business is to decide when to execute.

If a person wants to conquer the world, he can do that, if he waits for the right time and the right place, assures Kural 484. Kural 48 1 emphasizes the importance of time for execution of a task. Deciding when to execute alone is not enough. In addition to choosing the right time to do a task, choosing the right place to carry out the task influences the outcome of an action.

The whole world is his who chooses 
The right time and  place.

2 comments:

  1. குறள் : வாழ்க்கை வழிகாட்டி, துணை, ஊக்கம் அளிக்க வல்ல ஊட்டச் சத்து.

    ReplyDelete
  2. மனிதனின் அன்றாடம் மனதில் உருவேற்ற வேண்டிய குறள். காலம், இடம், பொருள், மற்றும் ஏவல்(படை) பற்றிய தேவையை உறுதிபடுத்துகிறது.

    ReplyDelete