Search This Blog

திருக்குறள்

அறம் பொருள் காமம் - குறள் வரிசை பதிவு வரிசை

ஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன. தேவைக்கேற்ப கீழ்காணும் சுட்டியை தட்டவும் அறத்து...

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

குறள் 751
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் 
பொருளல்லது இல்லை பொருள்
[பொருட்பால், கூழியல், பொருள்செயல்வகை]

பொருள் - சொற்பொருள், தகுதி, நற்வினைப்பயன், கல்விப்பொருள், அகப்பொருள்
அல்லவரைப் -  இல்லாதவரை (மதிக்கத்தகாதவர்)
பொருளாகச் செய்யும் -  ஓர் பொருட்டாக (மதிக்கதக்க) கருதச் செய்ய தக்க
பொருள் அல்லது - வல்லமை பொருளுக்கு (பணம், நிலம், பொன் முதலியவை) அன்றி
இல்லை பொருள் - வேறு ஒன்றுக்கும் இல்லை

முழுப்பொருள்
ஒருவர் எத்தகைய தளத்திலும் (அறிவு, அறம், திறமை) மதிக்கதகாதவராக இருப்பார். ஆனால் அத்தகைய சிலரை இவ்வுலகலில் மக்கள் மதிப்பர். அதற்கு காரணம் அவர்களிடம் உள்ள பொருட்செல்வம் காரணமாக இருக்கும். ஆக ஒருவரை மதிக்க செய்யக்கூடிய வல்லமை பொருள் (பணம், நிலம், பொன்) அன்றி வேறு எதுவுமில்லை. ஆதலால் பொருட்செல்வமும் மதிக்கத்தக்கதே.

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
மனித சமுதாயத்தின் நலத்திற்கும், வளத்திற்கும் எந்த வகையிலும் பயனில்லாத அல்லது மதிப்பேயில்லாத ஒருவரை, பலரும் மதிக்கச் செய்வது பொருட்செல்வமாகும். 

எந்த இடத்திலும், எவராலும் ஒரு மனிதனை மதிக்கும் படி செய்வது பொருட் செல்வமல்லாது மற்றது ஏதுமில்லை. பொருட் செல்வமின்றி வேறு ஒரு பொருளுமில்லை என்று தெளிவுரை கூறுகிறது இந்தக் குறள்.

பொதுவாக ஆன்மீக வழியிலே வாழ விருப்பமுடையோரில் சிலரும், ஆன்மீகத் துறையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளோரில் சிலரும், பொருட் செல்வத்தை அலட்சியம் செய்வதும், அவ்வாறே பேசுவதும் உண்டு. அதன் விளைவாக அத்தகையவர்கள் வாழ்வில் தாழ்வு அடைகிறார்கள். அவர்கள் முயற்சியில் வெற்றி காண முடியாமல் தோல்வியடைகிறார்கள். இந்த நிலைமையை நாம் கண்கூடாகக் காண்கிறோம். ஆழ்ந்த சிந்தனையோ அனுபவ அறிவோ இல்லாதவர்கள் ஒரு தலைப்பட்சமாக பொருட் செல்வத்தை அலட்சியம் செய்யும் கருத்தை மாற்றி, ஆன்மீக வாழ்விற்குக் கூட பொருட்செல்வம் எவ்வளவு அடிப்படைத் தேவை என்பதை நடுநின்று ஆராய்ந்து கண்ட தெளிவை உலக மக்களுக்குப் பொருள் செயல்வகை என்ற அதிகாரத்தில் வரும் 10 குறட்பாக்கள் மூலம் பல கோணங்களில் விளக்கிக் கூறுகிறார் திருவள்ளுவர். 

அதிகாரத்தில் அடுத்துவரும் குறள்கள் இரண்டையும் நினைவிற் கொள்வோம்.

மேலும்: அஷோக் 

பரிமேலழகர் உரை
பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது - ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் படுவாராகச் செய்ய வல்ல பொருளையொழிய; பொருள் இல்லை - ஒருவனுக்குப் பொருளாவதில்லை. 
விளக்கம் (மதிக்கப்படாதார் - அறிவிலாதார், இழி குலத்தார். இழிவு சிறப்புஉம்மை விகாரத்தால் தொக்கது. மதிக்கப்படுவாராகச் செய்தல் அறிவுடையாரும் உயர்குலத்தாரும் அவர்பாற் சென்று நிற்கப் பண்ணுதல். அதனால் ஈட்டப்படுவது அதுவே; பிறிதில்லை என்பதாம்.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பொருள் அல்லவரை-பிறரால் ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும்; பொருளாகச் செய்யும் பொருள் அல்லது-மதிக்கப்படச் செய்யும் செல்வத்தையல்லாமல்; பொருள் இல்லை-சிறந்த பொருளொன்று இவ்வுலகத்தில் இல்லை.

மதிக்கப்படாதவர் கல்லாதார், இழிதொழிலார், உறுப்பறையர், ஒழுக்கமில்லார், நோயாளியர், இளஞ்சிறார் முதலியோர். மதிக்கப்படுவாராகச் செய்தலாவது கற்றோரும் அரசனுட்பட்ட அதிகாரிகளும் அவருதவியை நாடச்செய்தல். இழிவு சிறப்பும்மை தொக்கது. இதில் வந்துள்ள அணி சொற்பொருட் பின்வருநிலை. பொருட்பின்வருநிலை வரையறைப்பட்டது.

மு. வரதராசன் உரை
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல், சிறப்புடைய பொருள் வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
தகுதி அற்றவரையும்கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை.

மணக்குடவர் உரை
ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் பொருளாக மதிக்கப் பண்ணுவதாகிய பொருளையல்லது வேறு பொருள் என்று சொல்லப்படுவதில்லை. இது வடிவில்லாதாரைப் பெண்டிரிகழ்வார்; பொருளுடையாரை யாவரும் நன்றாக மதிப்பரென்றது. 

No comments:

Post a Comment