Search This Blog

திருக்குறள்

அறம் பொருள் காமம் - குறள் வரிசை பதிவு வரிசை

ஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன. தேவைக்கேற்ப கீழ்காணும் சுட்டியை தட்டவும் அறத்து...

தம்மிற் பெரியார் தமரா

குறள் 444
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை. 
[பொருட்பால், அரசியல், பெரியாரைத் துணைக்கோடல்]

தம்மிற் - தம்மை விட ஞானத்திலும், அறிவிலும், ஆற்றலிலும், அனுபவத்திலும்
பெரியார் -  பெரியவர்கள், மேன்மக்கள், சான்றோர்கள்
தமரா - தமர் - தாம் + அர் - தம்முடைய மக்கள், உறவினர் என்று எண்ணி
ஒழுகுதல் - நீர்பாய்தல்; நீர்ப்பொருள்சொட்டுதல்; ஓடுதல்; பரத்தல்; ஒழுங்குபடுதல்; நடத்தல்; நீளுதல்; வளர்தல்; போதல்; பெருகியோடுதல்.
வன்மையுவலிமை; கடினம்; வன்சொல்; ஆற்றல்; வலாற்காரம்; சொல்அழுத்தம்; கோபம்; கருத்து; வல்லெழுத்து.
ளெல்லாந் தலை - எல்லாவற்றிலும் சிறந்தது / தலையானது


முழுப்பொருள் 
அறிவிலும்/ஞானத்திலும், ஆற்றலிலும், அனுபவத்திலும் தம்மை விட சிறந்தவர்கள், பெரியவர்கள், மேன்மக்கள், சான்றோர்கள் உடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களை நமது மக்கள், உறவினர் போன்று எண்ணி அவர்களுடன் பழக வேண்டும். அவர்களிடம் நன்கு பழகி, நல்லவற்றை கற்றுச் செயல்பட வேண்டும். அதற்காகவே ஒழுகுதல் என்று கூறியிருக்கிறார். ஒழுகுதல் என்பதற்கு வளர்தல், ஒழுங்குபடுதல் என்ற பொருள்களும் உண்டு.

ஆதலால் அப்படி நம்மை வளர்த்துக்கொள்ளும் பொழுது நாம் நல்வழியில் செல்ல முடியும், துன்பங்கள் வராது. துன்பங்கள் வந்தாலும் பெரியோர் துணைக்கொண்டால் அதில் இருந்து மீள பல வழி கிடைக்கும். அது மட்டும் இன்றி நாம் நமது அளவுகோல்களை உயர்த்திகொண்டு, நமது எல்லைகளை விரிவாக்கி, பலமடங்கு உயர்வாக செயலாற்ற முடியும்.

ஆதலால் பெரியோர் உடன் உறவு கொண்டு துணைக்கொள்ளும் பண்பானது வலிமையான பண்புகளிலேயே சிறந்ததாகும். அதனால் தான் அன்று அரசர்களால் திறம்பட பல செயலகளை தங்களது காலத்திலேயெ செயல்படுத்த முடிந்தது.

Nurturing Relationships என்று ஆங்கிலத்தில் சொல்லலாம்.

மேலும்: 
சுற்றந்தழால் - நம் உறவினர்கள் மட்டுமல்ல. நம்மை சுற்றி உள்ளவர்கள் அனைவரும். (all stake holders). நம்மைச் சுற்றி இருக்கிறவர்களிடம் இருந்து தேர்ந்து எடுத்து (நன்கு ஆராய்ந்து தேர்ந்து எடுத்து) நல்ல துணைவர்களை தேர்ந்து எடுத்து, எப்படி அவர்களிடம் உறவுகளை வளர்த்துக்கொள்வது.

நம்மை விட உயர்ந்துவர்களை தேர்ந்து எடுத்து, நாம் அவர்களோடு உறவு வைத்துக்கொள்ள முடிந்தால் சிறப்பு. பல மேலாளர்கள் தனது ஆணவத்தால் தன்னுடைய குழுவுடன் உறவுகளை ஒழுங்காக வளத்துக்கொள்வது கிடையாது. எப்படிக் குழுவை சமாளிப்பது என்று யோசிப்பத்தை நாம் அன்றாடும் பார்க்கலாம். ஆனால் உலகில் உள்ள மிகச்சிறந்த தலைவர்கள் (காந்தி, காமராஜார் போன்றோர்) தம்மை விட பல மடங்கு உயர்ந்தவர்களிடம் இணைந்து செயல்பட தயங்குவதில்லை. அப்படி தயங்காமல், அவர்களையும் நிர்வகிக்கிற நேரம் வரும்போழுது நம்முடைய தளத்திலிருந்து பல மடங்கு உயர்ந்து செயல்படுகிறோம். அப்பொழுதுத் தான் நமது எல்லைகளை தாண்டி செயலாற்ற முடியும். இல்லையேல் நாம் நம்மை ஒரு எல்லைக்குள் நின்றுவிடுகிறோம். அப்படிப்பட்ட பெரியோர்களிடம் உறவு வைத்துக்கொள்ளும் பொழுது நாம் வேறு ஒரு உயர்ந்தத்தளத்தில் செயலாற்றுவோம். 

உதாரணம்: 
காமராஜர் அவர்கள் பள்ளிக்கூட கல்வி கூட இல்லாமல், செல்வமும் இல்லாமல், குடும்பப் பின்னனியும் இல்லாமல் எப்படி அவரால் அவ்வளவு உயர்ந்த பதவிக்கு வர முடிந்தது ? தனது நாற்பது வயதிற்கு முன்னாலேயே தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அத்தனை காங்கிரஸ் தொண்டர்கள் தலைவர்கள் என் எல்லோருடனும் ஆழமான உறவு வைத்து இருந்தார். பேர் சொல்லி அழைத்து தெரிந்துக்கொள்ளும் அளவிற்கு ஆழமான உறவை வளர்த்துக்கொண்டு உள்ளார்.  அவரிடம் இருந்து குறைகளையெல்லாம் தாண்டி ராஜாஜி போன்றோர்களுடன் இணைந்து அவர்களுக்கு இணையாக செயல்பட முடிந்தது என்றால் அந்த உறவுகள் தான் காரணம்.


காந்தி தென் ஆப்ரிக்காவில் உண்ணாவிரதம் இருந்தபோதிலும் அது இந்தியாவில் தெரியப் படும் அளவிற்கு இருந்தது என்றால் அதற்கு உறவுகள் தான் காரணம். காந்தி அவர்கள் ப்ரிடிஷ் அரசிடம் விடுதலைக்கு போட்டியிட்டாலும் எதிர் அணியில் உள்ளவர்களிடமும் ஆழமான உறவு வைத்து தனது கருத்துக்களை அவர்கள் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு. அம்பேத்தகருடன் மனதார ஆத்மாத்தமார்கா உரையாடி, செவி சாய்த்த ஒரே தலைவர் காந்தி. அதனால் தான் சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனத்தை வடிவமைக்கும் பொறுப்பை அம்பேத்தகார் பெற்றார். பின்பு நேருவும் காந்தி தேர்ந்து எடுத்த தலைவர் அம்பேத்தகார் என்பதனால் காந்தி இறந்தப்பிறகும் அம்பேத்தகர் முன்வைத்த பல அரசியல் சாசனங்களை முதல் முயற்சியில் முடியாவிட்டாலும் ஒரு குறிப்பிட காலக்கட்டத்திற்குள் நிறைவேற்றினார். 


மேலும்: அஷோக்


குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)

நல்லவரைப் பெரியாரைத் துணையாய்க் கொண்டு
நடப்பவர்க்குத் துன்பங்கள் வந்த போதும்
வல்லவராய் அதை மாற்ற வழிகள் சொல்லி
வகைப்படுத்தி தொகைப்படுத்தி வாழ வைப்பார்
அல்லவராய் அவர் தம்மை விட்டு விட்டால்
ஆயிரம் பேர் பகையை விடத் தீமை அது
நல்லவரைப் பெரியவரைத் துணையாய்க் கொள்ளல்
நலம் பயக்கும் வலிமை தரும் உணர்வீர் நன்கு

குறள்
உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்

பல்லார் பகை கொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர் கை விடல்

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுளெல்லாம் தலை


பரிமேலழகர் உரை
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் - அறிவு முதலியவற்றால் தம்மின் மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர் வழிநின்று ஒழுகுதல்; வன்மையுள் எல்லாம் தலை - அரசர்க்கு. எல்லா வலி உடைமையினும் தலை. 

விளக்கம் 
(பொருள், படை, அரண்களான்ஆய வலியினும் இத் துணைவலி சிறந்தது என்றது, இவர் அவற்றான் நீக்கப்படாத தெய்வத்துன்பம் முதலியனவும் நீக்குதற்கு உரியர் ஆகலின்.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் -அறிவு முதலியவற்றால் தம்மினும் பெரியவர் தமக்குத் துணைவராமாறு அவர் வழிநின் றொழுகுதல்; வன்மையுள் எல்லாம் தலை -அரசர்க்குரிய வலிமைக ளெல்லாவற்றுள்ளுந் தலையானதாம்.

படை, அரண், பொருள், நட்பு முதலிய வலிமைகளால் நீக்கப் படாத தெய்வத்துன்பங்களை நீக்குதற்கும், அடையப்பெறாத வெற்றியை அடைதற்கும், உதவும் பெரியார் துணை அவ்வலிமைகளினுஞ் சிறந்தது என்பதாம்.

மணக்குடவர் உரை
தம்மின் மிக்க அறிவுடையார் தமக்குத் தமராக ஒழுகுதல், வலியானவை யெல்லாவற்றினும் தலையான வலி. 

சாலமன் பாப்பையா உரை
அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்.

No comments:

Post a Comment