Search This Blog

திருக்குறள்

அறம் பொருள் காமம் - குறள் வரிசை பதிவு வரிசை

ஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன. தேவைக்கேற்ப கீழ்காணும் சுட்டியை தட்டவும் அறத்து...

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு

குறள் 999
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் 
பகலும்பாற் பட்டன்று இருள்.
[பொருட்பால், குடியியல், பண்புடைமை]

நகல் - சிரிக்கை (சிரிப்பு), மகிழ்ச்சி (தம்முட் குழீஇ நகலி னினிதாயின்(நாலடி, 137)), நட்பு (நகலானா நன்னய மென்னுஞ் செருக்கு (குறள், 860)) ; பரிகாசம், ஏளனம்; படி
வல்லர் - வலிமை; habit of feasting or fasting for days at a time
நகல்வல்லர் - பல மக்களுடன்/மனிதர்களுடன் நட்புறவாடிக் கூடி மகிழும் பண்பு / தன்மை உடையவர்

அல்லார்க்கு - அல் - எதிர்மறை, அதுபாலல்ல; (அல்லர்-அல்லாதார்--அல்லார்--அல் லோர், s. Evil persons, the wicked. (p.)) 

மாயிரு  - ஏகமாயிரு-த்தல் -> ஒன்றாயிருத்தல்; மிகுதியாய்இருத்தல்.
ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை.

பகலும் - பகல் - பகுக்கை; நடு; நடுவுநிலை; நுகத்தாணி; முகூர்த்தம்; அரையாமம்; மத்தியானம்; பகற்போது; பிறரோடுகூடாமை; கட்சி; இளவெயில; அறுபதுநாழிகைகொண்டநாள்; ஊழிக்காலம்; சூரியன்; ஒளி; வெளி; கமுக்கட்டு.

பாற்படுதல் - ஒழுங்குபடுதல்; நன் முறையில் நடத்தல். (பாற்பட்டார் கூறும் பயமொழி(இனி. நாற். 7).)

பாற்பட்டன்று - நன் முறையில் நடக்காமல்

இருள் -  இரு-மை, அந்தகாரம், கறுப்பு,  மயக்கம்; அறியாமை; துனபம்; நரகவிசேடம்; பிறப்பு; குற்றம்; மரகதக்குற்றம்; எட்டனுள்ஒன்றாகியகருகல்; மலம்; யானை; இருவேல்; இருள்மரம்.

முழுப்பொருள்
ஞானம், பணம் முதலியவற்றை மிகுதியாக பெற்றவராக ஒருவர் இருந்தாலும் பிறருடன் நட்பாய் சிரித்து மகிழ்ந்து நகையாடி பகடி செய்து வாழும் பண்பு இல்லாதவராய் இருப்பின் அவர் பகலிலே இருளில் மூழ்கியிருப்பதற்கு ஒப்பாகும்.

நாஞ்சில் நாடன் உரை
இரு எனும் சொல்லுக்கே பெரிய என்றும், கரிய என்றும் பொருள் சொல்கிறார்கள். இருள், இருட்டு, இருண்ட எனும் சொற்கள் ‘இரு’ எனும் சொல்லின் பிறப்புக்கள் ஆகலாம். பண்புடைமை அதிகாரத்துக் குறள், ‘மாயிரு ஞாலம்’ என்கிறது. மாபெரும் உலகம் என்ற பொருளில்.

‘நகல் வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும் பாற் பட்டன்று இருள்’


என்பது முழுப்பாடல். எல்லோரிடமும் கலகலப்பாகச் சிரித்துப் பேசி மகிழத் தெரியாதவர்களுக்கு, இந்த மாபெரும் உலகமானது பட்டப் பகலிலும் நட்ட நடு இரவாகவே இருக்கும் என்கிறார் திருவள்ளுவர். பெரியாழ்வார்,

பரிமேலழகர் உரை
நகல் வல்லர் அல்லார்க்கு - பண்பின்மையான் ஒருவரோடு கலந்து உள்மகிழ்தல் மாட்டாதார்க்கு; மாயிரு ஞாலம் பகலும் இருட்பாற் பட்டன்று - மிகவும் பெரிய ஞாலம் இருளில்லாத பகற்பொழுதினும் இருளின்கண் கிடந்ததாம். 

விளக்கம் 
(எல்லாரோடும் கலந்தறியப் பெறாமையின் பண்பில்லார்க்கு உலகியல் தெரியாது என்பார், 'உலகம் இருளின்கண் பட்டது' என்றார். 'பாழ்பட்டன்று இருள்' என்று பாடம் ஓதி, 'இருள் நீங்கிற்றன்று' என்று உரைப்பாரும் உளர்.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நகல்வல்லர் அல்லார்க்கு -பண்பின்மையால் ஒருவரோடுங் கலந்துரையாடி மகிழுந் திறமில்லாதவர்க்கு; மா இரு ஞாலம் பகலும் இருட்பாற் பட்டன்று - மிகப்பெரிய இவ்வுலகம் பட்டப் பகலிலும் இருள் நிறைந்திருப்பதாகும்.

ஒருவரோடுங் கலந்தறியப் பெறாத பண்பிலிகட்கு உலகியல் முற்றும் தெரியாதென்பது கருத்து. பட்டன்று என்பது உடன்பாட்டுச் சொல்லாதலின் , ' பாழ் பட்டன்றிருள் ' என்று பாடமோதி, ' இருள் நீங்கிற்றன்று ' என்றுரைப்பது பொருள்கெடாவிடினும் பொருந்தாது. 'மாயிரு' மீமிசைச் சொல்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போலவாம்.

மேலும் (நன்றி: அந்தமிழ்)
புண்பட்ட நெஞ்சுக்குச் சிரிப்பைப்போல இதமான மருந்து வேறு கிடையாது. உலக வாழ்க்கையில் இருக்கும் ஏற்றத்தாழ்வு இன்பதுன்பம், பித்தலாட்டம் இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு சிரிக்கத் தெரியாமலும் நாம் இருந்தோமேயானால், என்ன ஆகும் நம் கதி? பைத்தியம் பிடித்துவிடும். பைத்தியம் பிடிப்பதிலிருந்து நம்மைத் தடுப்பதற்காகவே நமக்குச் சிரிப்பு என்ற தெய்வீகசக்தி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்
என்று சொன்னார் குறளாசிரியர்.

சிரிக்கத் தெரியாதவனுக்குப் பட்டப் பகலும் அமாவாசை இருட்டாகத்தான் இருக்கும் என்பது இந்த்க் குறளின் பொருள். தெளிவு இல்லாத காரணத்தால் சிரிப்பற்று இருக்கிறோம். உள்ளத்தில் தெளிவு வந்துவிட்டாலோ, வாழ்க்கையே ஒரு சிரிப்பாக இருக்கும். சிந்தனைத் தெளிவுள்ளவனுக்கு இந்த உலகம் ஒரு ஹாஸ்ய நாடகமாகத் தோன்றுகிறது. உணர்ச்சி வசப்பட்டவனுக்கு இந்த உலகம் சோக நாடகமாகக் காட்சி கொடுக்கிறது.

மிருக வர்க்கங்களிலேயே சிரிக்கும் ஆற்றலைப்பெற்ற பிராணி, மனிதன் ஒருவன்தான். ஆனால் இந்த அரிய ஆற்றலை மனிதனுக்குப் பயன்படுத்தத் தெரியவில்லையே என்று ஆற்றாமைப்படுகிறார் வள்ளுவர்.

அணுகுண்டுக்கு இல்லாத சக்தி சிரிப்புக்கு இருக்கிறது என்பதை ஒரு புராணக்கதை விளக்குகிறது. திரிபுரத்தில் அட்டகாசம் செய்துகொண்டு இருந்த அரக்கர்களை சிவபெருமான் அழித்தார். எப்படி அழித்தார்? ஹைட்ரஜன் குண்டு போட்டல்ல, ஒரு சிரிப்பு சிரித்தார். அவ்வளவுதான் தீமையே வடிவாக வந்த அரக்கர்கள் தீய்ந்து ஒழிந்தார்கள்.

சீராரூர் மேவும் சிவனே – சிரிப்பன்றோ
நேராரூர் இட்ட நிலை
என்று பாடினார் கவிஞர்.

சிரிப்பு புற இருளை மாத்திரமல்ல, அக இருளையும் அகற்றி துன்பத்தைத் துடைத்து இன்பத்தை நல்குகிறது.

No comments:

Post a Comment