Search This Blog

திருக்குறள்

அறம் பொருள் காமம் - குறள் வரிசை பதிவு வரிசை

ஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன. தேவைக்கேற்ப கீழ்காணும் சுட்டியை தட்டவும் அறத்து...

வகைமாண்ட வாழ்க்கையும்

குறள் 897
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் 
தகைமாண்ட தக்கார் செறின்.
[பொருட்பால், நட்பியல், பெரியாரைப் பிழையாமை]

வகை - வலிமை, வாழ்க்கைக்குரிய பொருள் முதலியன, வணிகமுதல் ( the principal stock in trade, முதல்.); இடம்; உறுப்பு; குறுந்தெரு; மனையின்பகுப்பு; விவரம்; கூட்டப்படும்எண்கள், கூறுபாடு; சாதியினம்; இனம்; முறை; வழி; காரணம்; தந்திரம்; வலிமை; தன்மை

மாண்-. Beinggreat, being worthy; மாட்சியாகை; மாண்டூகம்(One of the thirty-two Upanishads. See உபநிடதம்.),
மாண்டல் - மாட்சிமைப்படுதல்; இறத்தல்

வகைமாண்ட வாழ்க்கையும் - வலிமையாக, வாழ்க்கைக்குரிய பொருள்களை (மற்றும் சுற்றமும், நட்டோரும், நற்றனயரும், இல்லும், நிலமும் முதலாயின) ஆடம்பரமாக (முதல் ரகத்தில்) வைத்துக்கொள்வதை வாழ்க்கையின் மாட்சியாக கருத்துதல்

வான் - s. air, ether, sky, ஆகாயம்; 2. rain, மழை; 3. cloud, மேகம்; 4. adj. great, excellent, பெருமையான.
வான்பொருளும் - பெருமைப்படக்கூடிய பொருள்கள்

என்னாம் - என்னவாம் ? என்ன பயன் ? (அப்பொருள்களுக்குப் பயன் இல்லை)

தகை - தகுதி, , பெருமை, அழகு, அன்பு, கவசம்
தகைமை - தன்மை, தகுதி; பெருமை; பொறுமை; குணம்; மதிப்பு; அழகு; ஒழுங்கு; நிகழ்ச்சி.
தகைமாண்ட - தன்மை, தகுதி, பெருமை, குணம் கொண்ட மதிப்பிற்குரிய 
தக்கார் - மேன்மக்கள்; நடுவுநிலைமையுடையோர்; பெருமையிற்சிறந்தோர்; உறவினர்
செறின் -  செறு¹-தல் - சினத்தல். அரசர்செறின் வவ்வார்(நாலடி, 134), வெறுத்தல். செற்றாரெனக் கைவிடலுண்டோ (குறள், 1245).

முழுப்பொருள்
தன்மை, தகுதி, பெருமை, மதிப்பு, ஒழுங்குப் போன்ற நற்குணங்கள் கொண்ட மேன்மக்களின் சினத்திற்கு ஒருவர் உண்டானால் அவர் எத்தகைய வலிமையான வாழ்க்கை அதாவது வாழ்க்கைக்குரிய எல்லா பொருள்களும் சுற்றமும், நட்டோரும், நற்றனயரும், இல்லும், நிலமும் முதலாயின், மற்றும் வான்ப்போல் பெருமைக்குரிய பொருள்களை வைத்து இருந்தாலும் அவற்றுக்கு எப்பயனும் பொருளும் இல்லை என்கிறார் திருவள்ளுவர்.

ஆத்திச்சூடி
சையெனத் திரியேல் - பெரியோர் "சீ" என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே .
மேன்மக்கள் சொல் கேள் - நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட .
தக்கோன் எனத் திரி - பெரியோர்கள் உன்னை நல்லவன் என்று புகழும்படி நடந்துக்கொள். .
சான்றோர் இனத்து இரு - அறிஞர்களின் குழுவிலே இரு
பெரியாரைத் துணைக் கொள் - அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள் .

பரிமேலழகர் உரை
தகை மாண்ட தக்கார் செறின் - சாப அருள்கட்கு ஏது ஆய பெருமை மாட்சிமைப்பட்ட அருந்தவர் அரசனை வெகுள்வராயின்; வகைமாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்னாம் - உறுப்பழகு பெற்ற அவன் அரசாட்சியும் ஈட்டி வைத்த பெரும் பொருளும் என் பட்டுவிடும்? 

விளக்கம் 
(உறுப்பு - அமைச்சு, நாடு, அரண், படை என இவை. 'செறின்' என்பது அவர் சேறாமை தோன்ற நின்றது இவ்வெச்சத்தான். முன் வருவனவற்றிற்கும் இஃது ஒக்கும். அரசர் தம் செல்வக்களிப்பான் அருந்தவர் மாட்டுப் பிழை செய்வாராயின், அச்செல்வம் அவர் வெகுளித் தீயான் ஒரு கணத்துள்ளே வெந்துவிடும் என்பதாம்.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தகைமாண்ட தக்கார் செறின்- ஆக்க வழிப்பிற் கேதுவாகிய ஆற்றல் மாட்சிமைப்பட்ட மாதவர் அரசரை வெகுள்வாராயின், வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்ஆம் - ஆறுறுப்புக்களும் மாட்சிமைப்பட்ட அவர் அரச வாழ்வும் அவர் தமக்குச் சொந்தமாக ஈட்டிவைத்த பெருஞ் செல்வமும் என்ன ஆகும்! ஒரு நொடியுள் வெந்து சாம்பராய் விடுமே!

படை,குடி,நாடு,கூழ்,அமைச்சு, அரண் என்பன ஆறுறுப்புக்கள். நட்பு என்பது அரசனின் வலிமையை மிகுப்பதேயன்றி நாட்டுறுப்பன்று.

"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் 
தகுதியான் வென்று விடல்." (குறள்.158)


என்று இல்லறத்திற்கும்,
"இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் 
துறந்தார் துறந்தார் துணை." (ஷ.310)


"இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண 
நன்னயஞ் செய்து விடல்." ( .314)

என்று துறவறத்திற்குங் கூறியிருப்பதால், 'செறின்' என்பது முற்றத் துறந்த முழு முனிவர் செறாமை தோன்ற நின்றது. 'வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளு னென்னாம்' என்றது, அருந்தவரின் பெருந்திறலை யுயர்த்தி அரசர் தம் செல்வச் செருக்கால் அவருக்குத் தவறு செய்யாதவாறு எச்சரித்ததே யன்றி வேறன்றென வுணர்க.

மணக்குடவர் உரை
எல்லா வகையானும் மாட்சிமைப்பட்ட வாழ்க்கையும் மிக்க பொருளும் என்ன பயனுடையனவாம்: பெருமையால் மிக்க தகுதியுடையார் செறுவாராயின். எல்லா வகையுமாவன சுற்றமும், நட்டோரும், நற்றனயரும், இல்லும், நிலமும் முதலாயின 

சாலமன் பாப்பையா உரை
குணங்களால் சிறந்த பெரியவர்கள் சினங்கொள்வார் என்றால், பலத்தால் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் எதற்கு ஆகும்?.

No comments:

Post a Comment