Search This Blog

திருக்குறள்

அறம் பொருள் காமம் - குறள் வரிசை பதிவு வரிசை

ஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன. தேவைக்கேற்ப கீழ்காணும் சுட்டியை தட்டவும் அறத்து...

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு

குறள் 942
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 
அற்றது போற்றி உணின்.

மருந்தென - ஒருவனுக்கு மருந்து என்று எதுவும்

வேண்டாவாம் - தேவையிருக்காது

யாக்கைக்கு - ஒருவனது உடல் / உடம்பு

அருந்தியது - உண்ட உணவை

அற்றது - செரித்த பின் / சீரணமானப் பின்

போற்றி உணின் - உண்ண வேண்டும் என்ற நெறியினை பின் பற்றினால்.

முழுப்பொருள்
<கீழ் இருப்பதே தெளிவுற இருக்கிறது. ஆகையால் ஆசிரியரின் விளக்கம் தேவையற்றதாகிறது>

ஆத்திச்சூடி
மீதூண் விரும்பேல்.
நோய்க்கு இடம் கொடேல்.

பூமி திருத்தி உண்.
ஐயம் இட்டு உண்.

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
உணவைக் காலத்தோடும், அளவோடும் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். நாம் பழகிக் கொண்ட படி குறித்த வேளையில், குறிப்பிட்ட உணவை உடலில் சேர்த்துக் கொள்ள உடல் தயாராக உள்ளது. நேரம் மாறினாலும் அதற்கேற்றபடி உடலியக்கம் உடனடியாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியாது. நாம் ஒரு நண்பரை வரவேற்க இரயில் நிலையத்திற்கோ, விமான நிலையத்துக்கோ போகிறோம். குறிப்பிட்ட நேரத்தில் அவரை எதிர் பார்க்கிறோம். வண்டியோ விமானமோ அதிக நேரம் தாமதமாக வந்தால், நமக்கு எப்படி இருக்கிறது ? சோர்வு அடைகிறோம்; வரவே இல்லையானால் ஏமாற்றமடைகிறோம்; நாம் எதிர் பார்த்த நேரத்திற்கு முன்னதாக வண்டியோ விமானமோ வந்து நமது நண்பர் வெளியேறி விட்டால் அவரைச் சந்திக்க முடியாமல் போகிறது. இது போன்ற இயற்கையின் ஒழுங்கமைப்பின் கீழ், உடலுணுக்கள் உணவைச் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கின்றன. நேரம் தவறினாலும், உணவு கிடைக்காவிட்டாலும் அவற்றில் இயக்க ஒழுங்கு சீர்குலைந்து போய்விடும்.

உணவு பக்குவம் வேறு. உணவு சீரணம் வேறு. அன்னப் பையில், குடலில் உணவுப் பக்குவம் தான் செய்யப்படுகின்றது. உணவிலிருந்து உடலில் சேர, ஏற்றபடி சத்துப் பகுதிகளைத் திரவ நிலையில் பிரித்துக் கொடுப்பதே குடலின் வேலையாகும். உணவு சீரணம் உடல் முழுவதும் நடைபெறுகிறது. உணவிலிருந்து பிரிக்கப் பெற்ற இரசம் இரத்தமாக மாறி, இரத்தக் குழாய்களின் மூலம் செல்லும் போது உடல் முழுவதிலும் ஆங்காங்கு, தேவைக்கேற்ற அணுத்திரள்கள், உணவை உறிஞ்சி உரிய இடத்தில் இணைத்துக் கொள்கிறது. அளவிற்கு மேலாக உணவு கொண்டால் அதைக் குடல் பக்குவம் செய்ய முடியாது. 

சத்துக்களை நன்றாகப் பிரிக்கவும் முடியாது; இதனால் வயிற்றில் உணவு தேக்கம் உண்டாகும்; சில சமயம் புளித்துப் போகும்; அன்னப் பையில் உணவு தேக்கமுற்று புளித்துப் போனால் புளியேப்பம், வாந்தி இவை உண்டாகும். குடலில் உணவு தேக்கமானல் பேதி அல்லது மலச்சிக்கல் உண்டாகும். சமைத்த உணவை உபயோகப்படுத்தாமல் நீண்ட நேரம் வைத்திருந்தால் என்ன ஆகும் ? ஊசிப் போகின்றதல்லவா ? அதுபோன்றே, குடலில் அன்னப் பையில் உணவு தேக்கமுற்று ஊசிப் போகும் விளைவுதான் புளியேப்பம், வாந்தி, பேசி இவையாகும். மேலும் சுத்தமாக வடிகட்டப் படாமலும், அதிக அளவிலும் இரத்தத்தோடு சேரும் உணவு உடல் முழுதும் சென்று இரத்த நாளங்களிலே புளித்து விட்டால், காய்ச்சல் வந்துவிடும். அடிக்கடி இம்மாதிரி செரியாமைக்கு இடம் கொடுப்பது, பற்பல நோய்களுக்கு வழி கோலுவதாகும். சீரண வலுவிற்கேற்றபடி, அளவோடு உணவு கொள்ளும் பழக்கத்தைப் பின்பற்றினால், பல நோய்களைத் தடுத்துக் கொள்ளலாம்.

"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 
அற்றது போற்றி உணின்."

என்பது வள்ளுவர் வாக்கு. முன் அருந்திய உணவு முழுவதும் சீரணீத்த பின், மறு உணவு கொள்ளும் வழக்கத்தை மேன்மையாகக் கொண்டால், மருந்தே உடலுக்கு வேண்டாம் என்பதே குறளின் கருத்து. அருந்தியது அற்றது எனில் உண்டது முழுவதும் (சீரணித்து விட்டால்) இல்லாமல் போனது என்பதே பொருள்.

மேலும் உணவு செரிக்காமல் போவதால், உணவு வீணாயிற்று என்பது மட்டுமல்ல; அது உடலைக் கெடுத்து விடுகிறது; மன நிலைமையும் பாதித்து விடுகின்றது. உணவு புளித்து விட்டால் குடலிலும் அன்னப்பையிலும் வீக்கத்தை உண்டாக்கும். அடுத்தடுத்து புளிப்புக்கு இடம் கொடுத்தால் வயிற்றில் புண்களும் உண்டாகி விடும். குடலிலும் அன்னப் பையிலும் புண்கள் உண்டாகி விட்டால் அது சீக்கிரமாக குணமாவதில்லை. இத்தகைய குடல் புண் நோயைத்தான் குன்ம நோய் (Ulcer) என்று கூறுகிறோம். உணவு சீரணிக்காமல் வெளியேறும்போது, அது உடலின் சக்தியையும் இழுத்துக் கொண்டு போகும். 

இதனைச் சிந்தனை விருந்து என்ற தலைப்பில் கீழ்க் கண்டவாறு எழுதியிருக்கிறேன்.

"நீ சீரணிக்கும் அளவிற்குள்ளாக உணவு உட்கொண்டால் உணவை நீ சீரணிக்கிறாய். அதிகமாக உட்கொண்டால் உணவு உன்னைச் சீரணிக்கும்".

எனவே சுத்தமானதும், எளிமையானதும், சத்து நிறைந்ததுமான உணவு வகை அன்றாடம் நமது உடலுக்குத் தேவை. காரம், புளிப்பு, உப்பு, சர்க்கரை இவற்றையும் மிதமாகக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு உணவில் அளவும் தரமும், முறையும் தவறினால், நோய்கள் உண்டாகும். அவ்வப்போது தக்கபடி மருந்து எடுத்துக் கொண்டால் சரியாகி விடும் என்று இலேசாக நினைப்பதும் சரியல்ல.

மருந்து என்றால் என்ன ? மனிதன் ஆற்றும் தவறான் செய்களால் நோய் உண்டாகிறது. அந்நோய்களைச் சமன் செய்ய, ஏற்ற ஆற்றல் உடலிலேயே இயற்கை அமைத்திருக்கிறது. ஒரு சமயம் உடலில் நோய் தீர்க்கும் ஆற்றல் வலுவற்றதாக இருந்தால், அந்த ஆற்றலை ஊக்கி விட ஏற்ற பொருட்களே மருந்து ஆகும். உயிர் அற்றலுக்கு உந்து சக்தி என்பது வழக்கு. அவ்வாறான உந்து ஆற்றலுக்குத் துணையாய் உந்தும் ஆற்றலைத்தான் மருந்து என்று கூறுகிறோம். மருவி உந்து ஆற்றல் மருந்து. மருவி வந்த மகளை மருமகள் என்பது போல, மருவி வந்த மகனை மருமகன் என்பது போல, மருவி உந்து ஆற்றலை மருந்து என்று வழங்குகிறோம். மருந்தின் உபயோகம் வேறு வழியின்றி ஒரு குறுகிய காலத்தில் சிறு அளவில் மட்டும்தான் பொருத்தமானது. ஏனெனில் சில மருந்து வகை, ஒரு நோயைக் குணப்படுத்தி, வேறொரு நோயை உண்டு பண்ணக் கூடியதே. இவையெல்லாம் தவிர்க்க இயற்கையான அறிவின் வழி முன் உண்ட உணவு முற்றிலும் செரிமானமான பின்னரே, அடுத்த உணவு கொள்ளலாகும். இந்த அறிவுரையே இக்கவியில் தொக்கி நிறிகின்றது.

அறிந்து அளவுடன் கொள்க
உறக்கம், உழைப்பு, உடை, உணவு
     இவைகளில் எவற்றையும்,
மறுப்பதும், மிகுப்பதும் மனித உடலின் மகத்துவம்
     அறியாதோர் செய்கையாம்.

அளவோடு உணவு
உணவே உடலாக வந்துள்ளது ஆகையினால்
உணவை உண்டுதான் உயிர் வாழவேண்டும்
உணவில் அளவுமுறை மீறிட மீறிட
உணவாகவே உடல் மாறியும் போமன்றோ ?

செயல் ஒழுக்கம் சேவை சிந்தனை சீர்திருத்தம்
     சிக்கனம் இவை ஐந்தும் செழிப்பான வாழ்வளிக்கும்
அயல் உயிர்களிடத்தன்பும், அனைத்துலக அருள் நினைவும்
     அகம் நோக்கும் தவமுறையும் அறிஞர்கட்கு இயல்பாகும்.

பரிமேலழகர் உரை
அருந்தியது அற்றது போற்றி உணின் - ஒருவன் முன்னுண்டது அற்றபடியைக் குறிகளால் தெளிய அறிந்த பின் உண்ணுமாயின்; யாக்கைக்கு மருந்து என வேண்டாவாம் - அவன் யாக்கைக்கு மருந்து என்று வேறு வேண்டாவாம். 

விளக்கம் 
(குறிகளாவன-யாக்கை நொய்ம்மை, தேக்கின்தூய்மை, காரணங்கள் தொழிற்குரியவாதல், பசி மிகுதல் என இவை முதலாயின. பிணிகள் யாக்கையவாகலின், 'யாக்கைக்கு' என்றார். 'உணின்' என்பது அதன் அருமைதோன்ற நின்றது.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அருந்தியது அற்றது போற்றி உணின் - ஒருவன் தான் முன்னுண்டது செரித்ததைக் குறிகளால் தெளிவாக அறிந்து உண்பானாயின்; யாக்கைக்கு மருந்து என வேண்டாவாம்- அவனுடம்பிற்கு மருந்தென்றே ஒன்றுந் தேவையில்லை.

பெரும்பாலும் நோய்களெல்லாம் செரியாவுணவாலும் பொருந்தாவுணவாலும் மிகையுணவாலுமே நேர்வதால், இது முதல் ஆறு குறள்களில் ஆசிரியர் உணவு நெறிபற்றியே கூறுகின்றார். செரிமானத்தை யறியுங் குறிகள் வயிற்றிற் கனமின்மை, ஏப்பத்தின் செம்மை, இருவகைக் கரணங்களும் தொழில் செய்யத்தகுதியாயிருத்தல், பசியுண்டாதல், உண்டு ஐந்து மணி நேரத்திற்கு மேலாயிருத்தல், என்பன, 'யாக்கை' ஆகுபெயர், எழுவகைத் தாதுக்களால் யாக்கப்பட்டது யாக்கை. யாத்தல் கட்டுதல், 'உணின்' என்பது அதன் அருமையையும் நிலைப்பாட்டையும் உணர்த்திற்று. இக்குறளால் உண்டது செரித்தபின் உண்டால் நோய்வராதென்பது கூறப்பட்டது,

தமிழகத்து  உணவு தொன்றுதொட்டு மருத்துவ முறையிற் சமைக்கப்பட்டு வருகின்றது. பச்சரிசி சூடுண்டாக்குமாதலால் வெப்பநாட்டிற்கேற்காதென்று புழுங்கலரிசி யாக்கப்படுகின்றது.அதைச் சரிதண்ணீர் வைத்துச் சமைத்தல் வேண்டும். சுவை மிகுத்தற்குத் தீட்டும்போது நீக்குந் தவிட்டைத் தனியாகக் கொழுக்கட்டை பிடித்துத் தின்பது வழக்கம். வாழைக்காய் வளிமிகுப்பதென்று பிஞ்சு நிலையிற் சமைக்கப்படும். சீனியவரையென்னுங் கொத்தவரை பித்தமிகுப்பதென்று காய்கட்குப் புளி சேர்க்கப்படும். காயச்சரக்காகக் கூட்டுவனவற்றுள்; மஞ்சள் நெஞ்சுச் சளியை முறிக்கும்; கொத்துமல்லி பித்தத்தை யடிக்கும்; சீரகம் வயிற்றுச் சூட்டைத் தணிக்கும்; மிளகு தொண்டைக்கட்டைத் தொலைக்கும்; பூண்டு வளியகற்றி வயிற்றளைச்சலை நிறுத்திப் பசி மிகுக்கும்; வெங்காயம் குளிர்ச்சியுண்டாக்கிக் குருதியைத் தூய்மைப்படுத்தும்; பெருங்காயம் வளியை வெளியேற்றும்; இஞ்சி பித்தத்தை யொடுக்கிக் காய்ச்சலைக் கண்டிக்கும்; தேங்காய் நீர்க்கோவை யென்னுந் தடுமத்தை(முக்குச் சளியை)நீக்கும்; கறிவேப்பிலை மணமூட்டி உணவு விருப்பையுண்டாக்கும்; கடுகு வயிற்றுவலி வராமற் காக்கும்; நல்லெண்ணெய் கண்குளிர்ச்சியும் மதித்தெளிவும் உண்டாக்கும், இவையெல்லாஞ் சேர்த்த துவரம்பருப்புக் குழம்பும், சீரகம் பூண்டு கலந்த மிளகு நீரும், சூட்டைத்தணித்துச் செரிமான ஆற்றலை மிகுக்கும் மோரும், கூடிய முப்படையற் சோற்றைக் கொழுமைப்படுத்திக் குடற்புண்ணாற்றும் நெய்யோடும் உடலுக்குரஞ்செய்து கழிமாசுக்கட்டை(மலபந்தத்தை) நீக்கும் கீரையொடும்,குளிர்ச்சிதந்து பித்தம்போக்கும் எலுமிச்சை யூறுகாயொடும், அறுசுவைப்பட வுண்ட தமிழன் 'அற்றது போற்றி யுணின்' நோயண்டாதாகலின், 'மருந்தென வேண்டாவாம், என்றார், 'யாக்கைக்கு' என்றது உடம்பைப் பொறுத்தமட்டில் என்றவாறு. உள்ளத்தைத் தாக்கும் நோய் வேறுவகைப் பட்டதாகலின், அதை பின்னர்க் கூறுவார்.

மணக்குடவர் உரை
யாக்கைக்கு மருந்தென்பதொன்று வேண்டா, குற்றமற முற்காலத்து அருந்திய உணவு அற்றமையறிந்து பாதுகாத்து உண்பானாயின். இஃது இவ்வாறு செய்யின் மருந்து தேடவேண்டாமென்றது. 

சாலமன் பாப்பையா உரை
ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.

No comments:

Post a Comment