Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா

குறள் 1047
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.
[பொருட்பால், குடியியல், நல்குரவு]

பொருள்
அறம் தருமம்; புண்ணியம் அறச்சாலை தருமதேவதை யமன் தகுதியானது; சமயம் ஞானம் நோன்பு இதம் இன்பம் தீப்பயன்உண்டாக்கும்சொல்

சார்தல் சென்றடைதல்; புகலடைதல்; அடுத்தல்; பொருந்தியிருத்தல்; கலத்தல்; உறவுகொள்ளுதல்; ஒத்தல்; சாய்தல்.

அறஞ்சாரா - அறம் சாராமல் - அறத்தோடு பொருந்தாத

நல்குரவு -நல்கூர் - வறுமை; வறுமையை ஒருவன் உடைவான் என்றால்

ஈனுதல் - கருவுயிர்த்தல்; உண்டாக்குதல் குலைவிடுதல்; தருதல்

ஈட்டுதல் - கூட்டுதல்; சம்பாதித்தல்

ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப் பொருளில் வரும் எண்ணிடைச் சொல்.

ஈன்றதா யானும் - தன்னை வயிற்றில் ஈன்ற தாயாக ஆனாலும்

பிறன் - மற்றையான்; அயலான்; மனம்வேறுபட்டவன்; பகைஞன்.

போல - போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.

பிறன்போல - பிறர்களை / அன்னியர் / அயலார் / மற்றவர்கள் / உறவு அல்லாத முன் பின் தெரியாத மூன்றாம் மனிதர்களை போல

நோக்குதல்பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

நோக்கப் படும் - பார்க்க படுவார் / கருதப் படுவர்

முழுப்பொருள்
அறத்துடன் பொருந்தாமல் (அநியாய வழியில் சென்று) ஒருவன் வறுமையில் வாழ்வான் என்றால் அவனை பெற்ற தாயானாலும் அவனை அன்னியராய் தான் கருதுவார். 

ஓர் அன்னையால் தன் குழந்தையின் பசியை பொறுத்துக்கொள்ள முடியாது. அவள் உடனே அக்குழந்தைக்கு உணவுக்கு ஏற்பாடு செய்வாள். ஆனால் அப்பெற்ற அன்னையே ஒருவனை அன்னியராய் கருதுவார் என்றால் அதைவிட தண்டனை வேறேதுமில்லை. 

(ஆனால், ஒருவன் அற வழியில் சென்று ஊருக்கு தருமம் செய்து செய்து வறுமையில் செல்வான் என்றால், அத்தாய் அவனை கண்டு நிறைவுற்று என் மகன் என் மகன் என்று மனம் நிறைவாள்)

ஒப்புமை
“இலாஅ அர்க் கில்லை தமர்” (நாலடி 283)
“வாழாதார்க் கில்லை தமர்” (நாலடி 290)

“பெண்டிர் மதியார் பெருங்கிளை தானது
கொண்ட விரகர் குறிப்பினின் அஃகுப
வெண்டறை நின்று வெறுக்கை இலராயின்
மண்டினர் போவர்தம் மக்களும் ஒட்டார்” (வளையாபதி)

“சுற்றமும் துணையும் மனைவாழ்க் கையும்
அற்ற போதணை யாரவர்” (அப்பர்.காட்டுப்பள்ளி.5)


குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
              உழைப்பாலும்  உண்மையாலும்  பணம்  படைத்து
                        உயர்ந்ததொரு  நற்குடும்பம்  வழி வழியாய்ச்
              சிறப்பாக  வாழ்ந்திடுவோர்  ஊருக்கெல்லாம
                        செய்வதிலே மனம்  நிறைந்து  வாழ்ந்திருப்போர்
              பொறுப்பாக  வாழ்ந்தவர்கள்  பிள்ளைகளும்
                        பொறுப்புணரச் செல்வத்தைப்  பிரித்தளித்தார்
              சிறப்பான  பிள்ளைகளில்  ஒருவர்  மட்டும்
                        செல்வமெல்லாம்  இழந்திட்டார்  ஆண்டு  ஒன்றில்


              வரப்  போகக் கூட  அந்தப்  பிள்ளை  தனக்கு
                        வழி  செய்தார் இல்லை அன்பாய்ப் பெற்ற  தாயார்
              கரம்  நீட்டி  ஊரினிலே  பிச்சையேற்று
                        கவலையிலே  வாழ்கின்றார் என்ற போதும்
              தரம்  இழந்து  அழிகின்ற  பிள்ளை  தன்னை
                        தன்  மகனாய்ப்  பார்க்கவில்லை  ஈன்ற  அன்னை
              வரம்  தந்த  வாழ்வதனில  அந்தப் பிள்ளை
                        வறுமையினைப்  பெற்ற  வழி  உணர்ந்த  அன்னை

              ஊரார்  போய்  அவருக்காய்  அன்னையிடம்
                        உதவி  கேட்டு நிற்கையிலே  அன்னை சொன்னார்
              பேரான  பேர்  பெற்ற    குடும்பம்  தன்னில்  பிறந்தானே
                        பெயரழிக்கும்  வழியிலெல்லாம
              ஊர்  ஊராய்ச்  சூதாடி  பெண்கள்  வாழ்வை
                        ஒழித்தவரை  அழித்தங்கு   வறுமை கொண்டான்
              சீராக  வாழ்ந்தங்கு  ஏழையரை  சீர்  படுத்தி
                        அதனாலா  வறுமை  கொண்டான்

              ஊரெங்கும்  குளக்கரைகள்  வெட்டினானா
                        உயர்  கல்விச்  சாலைகளைக்  கட்டினானா
              தேரோடும்  தெருக்களையைச்  சரி   செய்தானா
                        தெய்வ  வழி பாடுகளில்  அழிந்தொழிந்தானா
              சீரான  அறமற்ற  வழிகளிலே   தன்
                        செல்வமெல்லாம்  அழித்தான்  என்  மகனேயில்லை
              நேரான  வழிகளிலே  அழித்திருந்தால்
                        நெஞ்சமெல்லாம்  நிறைந்திருப்பேன் என்றாள்  அன்னை

             அறஞ் சார்ந்த  வழிகளிலே  வறுமை  வந்தால்
                        அன்னை  மனம்  பூரிக்கும் அதனை விட்டு
             புறம் போகி   தவறுகளால்  செல்வமெல்லாம்
                        போக்கி நின்றால்  மகன்  என்று சொல்லுதற்கே
             விரும்பாளாம்  அன்னையவள்  அவனைக் கண்டால்
                        வேறெவரோ  போல்  விலகி  விரைந்திடுவாளாம்
             தரும்  கருத்தைக்  குறுங் கருத்தாய்த்  தந்து  நின்றார்
                        தமிழ்த்  தாயின்  தலை மகனாம்  வள்ளுவரும்

பரிமேலழகர் உரை
அறம் சாரா நல்குரவு - அறத்தோடு இயைபில்லாத நல்குரவு உடையான்; ஈன்ற தாயானும் பிறன் போல நோக்கப்படும் - தன்னை ஈன்ற தாயானும் பிறனைக் கருதுமாறு போலக் கருதி நோக்கப்படும்.

விளக்கம் 
(அறத்தோடு கூடாமை - காரண காரியங்களுள் ஒன்றானும் இயையாமை. நல்குரவு - ஆகுபெயர். சிறப்பு உம்மை, அவளது இயற்கையன்புடைமை விளக்கி நின்றது. கொள்வதின்றாதலேயன்றிக் கொடுப்பது உண்டாதலும் உடைமையின், அது நோக்கிச் சுற்றத்தார் யாவரும் துறப்பர் என்பதாம்.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அறம் சாரா நல்குரவு-அறத்தோடு பொருந்தாத வறுமையை யுடையவன்; ஈன்ற தாயானும் பிறன்போல நோக்கப் படும்-தன்னைப் பெற்று வளர்த்த தாயாலும் அயலான்போல புறக்கணிக்கப்படுவான்.

அறஞ்சாராமை யாவது, முற்பிறப்பில் அறஞ்செய்யாமையால் கரணியத் தொடர்பும் , இப்பிறப்பில் அறஞ்செய்ய முடியாமையால் கருமியத் தொடர்பும் இன்மை. ’நல்குரவு’ ஆகு பொருளது. உயர்வு சிறப்பும்மை பெற்றதாயின் இயற்கையான அன்புச் சிறப்பைக் காட்டி நின்றது. கொள்வதொன்று மின்மையோடு கொடுக்கவும் நேர்தல் பற்றி, வறியவனை உறவினரெல்லாரும் துறப்பர் என்பதாம்.

மு.வரதராசனார் உரை
அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை
நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.

No comments:

Post a Comment