Search This Blog

திருக்குறள்

அறம் பொருள் காமம் - குறள் வரிசை பதிவு வரிசை

ஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன. தேவைக்கேற்ப கீழ்காணும் சுட்டியை தட்டவும் அறத்து...

பிறர்நாணத் தக்கது

குறள் 1018
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.

பிறர் - மற்றவர்கள் / மேன்மக்கள்

நாணம் -  எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு,  கூசுதல்
நாணத் தக்கது - செய்ய வெட்கப்படும் செயல்

தான் - ஒருவர்

ஆனா - ஆனாமை - An abstract noun be longing to a kind of defective negative verb--that which is inseparable; not leav ing, unceasing, நீங்காமை
நாணா னாயின் - வெட்கப்படாமல் செய்வார் என்றால்

அறம் - நேர்மை
- நல்ல பண்பை உணர்த்துவது, நீதி வழுவாத் தன்மையை குறிப்பிடும் சொல்.
- சுகர்ம யோகத்தின் தனித்தமிழ் சொல்.
- ஒழுக்கம், தருமம்; புண்ணியம்; அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது;  தவம், ஆசாரம், சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்;

அறம் நாணத் தக்கது - அறம் கொண்ட நபர்கள் அவரை கண்டு கூச்சபட்டு வெட்கப்படும் விலகி

உடையது  - நிற்பர்

முழுப்பொருள்
ஒருவன் ஒரு செயலை செய்வான் என்றால் அது அறம் சார்ந்து இருக்க வேண்டும். அறம் என்றால் நேர்மை, ஒழுங்கு. அவன் செய்யும் செயல், மற்றவர்கள் செய்ய வெட்கப்படும் செயலாக இருக்க கூடாது.

அறம் இல்லாத செயல் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் சான்றோர்கள், மேன்மக்கள், நல்லவர்கள் செய்ய அஞ்சுகின்ற, வெட்கப்படுகின்ற, அறமற்ற (தீங்கு விளைவிக்கின்ற) ஒரு செயலை ஒருவர் கருணையின்றி கவலையின்றி வெட்கமேயின்றி செய்வார் என்றால், அவர்களுடைய செயல்களை கண்டு கூசி அத்தகையவரிடம் இருந்து நல்லவர்கள் விலகி நிற்பர்.

நாணில்லாதவனை அறஞ்சாராது என்பது ஆட்படையணி. நாணின்றி அறமில்லை யென்பது கருத்து.

ஆத்திச்சூடி
அறம் செய விரும்பு.
இயல்பு அலாதன செய்யேல்.
அழகு அலாதன செய்யேல்.
பழிப்பன பகரேல்.
நன்மை கடைப்பிடி.
நாடு ஒப்பன செய்.
பீடு பெற நில்.
உத்தமனாய் இரு.
வேண்டி வினை செயேல்.
நிலையில் பிரியேல்.
நுண்மை நுகரேல்.
நேர்பட ஒழுகு.
பிழைபடச் சொல்லேல்.
காப்பது விரதம்.
சக்கர நெறி நில்.
சூது விரும்பேல்.
தூக்கி வினை செய்.
குணமது கைவிடேல்.
ஒப்புரவு ஒழுகு
அஃகஞ் சுருக்கேல்.
மண் பறித்து உண்ணேல்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
ஊரோடு உலகெல்லாம் அஞ்சுகின்ற
உயிர்க்கெல்லாம் கேடுகளே தந்து நின்ற
சீரில்லா அறமற்ற செயல்களையே
செய்வதற்கு நல்லவர்கள் நாணி நிற்பார்
காரற்ற வானம் போல் கருணையில்லார்
கவலையின்றி நாணம் விட்டு அதனைச் செய்வார்
பார் போற்றும் அறமதுவோ நாணம் கொண்டு
பாவியவன் தனை விட்டு விலகிச் செல்லும்

பரிமேலழகர் உரை
பிறர் நாணத் தக்கது தான் நாணான் ஆயின் - கேட்டாரும் கண்டாரும் நாணத்தக்க பழியை ஒருவன் தான் நாணாது செய்யுமாயின்; அறம் நாணத்தக்கது உடைத்து - அந்நாணாமை அவனை அறம்விட்டு நீங்கத் தக்க குற்றத்தினையுடையத்து 

விளக்கம் 
('தான்' எனச் செய்வானைப் பிரிக்கின்றார் ஆகலின்; 'பிறர்' என்றார். நாணோடு இயைபு இல்லாதானை அறம் சாராது என்பதாம்.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பிறர் நாணத் தக்கது தான் நாணானாயின்- கண்டாருங் கேட்டாருமாகிய பிறர் நாணத்தக்க பழியை ஒருவன்தான் நாணாது செய்வானாயின்; அறம் நாணத் தக்கது உடைத்து- அந்நாணாமை அறம் நாணி அவனைவிட்டு நீங்கத் தக்க குற்றத்தை யுடையதாம்.

நாணில்லாதவனை அறஞ்சாராது என்பது ஆட்படையணி. நாணின்றி அறமில்லை யென்பது கருத்து.

மணக்குடவர் உரை
உயர்ந்தார் பலரும் நாணத்தகுவ தொன்றினைத் தான் நாணாது செய்வனாயின் அவனை அறம் நாணியடையா தொழியும் தகுதியுடைத்தாம். இது நாணமில்லாதாரை அறம் சாரா தென்றது. 

சாலமன் பாப்பையா உரை
மற்றவர் வெட்கப்படும் ஒன்றிற்கு ஒருவன் வெட்கப்படாமல் அதைச் செய்வான் என்றால், அறம் வெட்கப்படும் குற்றம் அவனிடம் இருக்கிறது.

No comments:

Post a Comment