Search This Blog

திருக்குறள்

அறம் பொருள் காமம் - குறள் வரிசை பதிவு வரிசை

ஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன. தேவைக்கேற்ப கீழ்காணும் சுட்டியை தட்டவும் அறத்து...

சிற்றினம் அஞ்சும் பெருமை

குறள் 451
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் 
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

சிற்றினம் - கீழ் குணத்தோடு உள்ள இனம் / குழு / மக்கள்

அஞ்சும் - பயப்படுவர்

பெருமை - சான்றோர் (சுட்டியை சொடுக்கவும்) பண்புகள் உடையவர்கள் 

சிறுமைதான் - சிற்றினம் தான்; கீழ் குணத்தோடு உள்ள இனம் / குழு / மக்கள் உள்ள மக்கள்

சுற்றமாச் - தங்கள் இனமாக, உறவாக எண்ணி

சூழ்ந்து - அவர்களுடனே சூழ்ந்து, உறவாடி

விடும் - கொண்டு இருப்பர்.

முழுப்பொருள்
நல்ல பண்புகள், குணங்கள் கொண்ட சான்றோர்கள் பெரியவர்கள் ஆவர். அத்தகைய பெரியவர்கள் கீழ் குணங்களோடு உள்ள மக்களிடம் / இனங்களிடம் உறவு வைக்க பயப்படுவார்கள், அஞ்சுவார்கள். ஆனால்  கீழ் குணங்களோடு உள்ள சிற்றினம் அத்தகைய கீழ் குணங்களோடு உள்ளவர்களையே தங்கள் இனமாக, உறவாக எண்ணி அவர்களுடனே சூழ்ந்து உறவாடி வாழ்க்கையை கழிப்பர்.

மிக பரிட்சயமாக நாம் அறிந்தவை
- சகவாச தோஷம்
- கூடா நட்பு கேடாய் முடியும் 

ஒளவையார் அவர்கள் ஆத்திச்சுடியில் இன்னும் எளிதாக இரண்டு மூன்று வார்த்தைகளிலேயே கூறியிருப்பார் 
- சான்றோர் இனத்து இரு
- இணக்கம் அறிந்து இணங்கு
- சேரிடம் அறிந்து சேர்
- தக்கோன் என திரி
- பெரியாரைத் துணைக் கொள்
- மேன்மக்கள் சொல் கேள்

( புதுவை மதர் - டென்னிஸ் விளையாடுகையில்)

எனக்கு ஒரு உதாரணம் ஞாபகத்துக்கு வருகிறது. புதுவை மதர் (The Mother - Mirra Alfassa) அவர்கள் ஒரு கதை சொல்லி இருப்பார். ஒரு விளையாட்டு (உதாரணத்திற்கு : டென்னிஸ் (Tennis)) விளையாடும் பொழுது, (விளையாட்டுத் திறனில்) சிறியவர்களுடன் விளையாடக்கூடாது. அதுவும் சிறிய நேரத்திற்கு பிறகு கண்டிப்பாக விளையாடக் கூடாது. திறனில் பெரியவர்களுடனே விளையாட வேண்டும். அப்படி விளையாடினால் தான் நாம் அதிக சோதனைகளை சந்தித்து நமது திறன் மேம்பட்டு (விளையாட்டில்) வளர்ச்சியடைவோம். அப்படி அல்லாமல் சிறியவர்களுடனேயே விளையாடிக்கொண்டு இருந்தால் அவர்களை எளிதில் வெற்றி பெற்று ஒரு பொய்யான இன்பத்தில் திளைத்து திறனில் மேம்படாமல் இருப்போம். ஆனால் இந்த உதாரணம் அனைத்திற்கும் பொருந்தும்.

மகாகவி பாரதியார் இன்னும் ஆக்ரோஷமாக சொல்லி இருப்பார்

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

நன்றி: அஷோக்
கம்பர், “சிற்றினத்தவரொடும் செறிதல் சீரிதோ?” என்று கேட்கிறார். மற்றொரு கேள்வியும் கேட்கிறார் அவரே ஊர்தேடு படலத்தில், “ தெளிந்த சிந்தையரும் சிறியார்களோடு அளிந்த போதறிதற்கு எளிதாவரோ?” என்று.
கீழ்மையான குணமுடையவர்களே வஞ்ச நெஞ்சம் கொண்டவர்களும் ஆதலின், “வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்”, ‘நஞ்சுடனே ஒருநாளும் பழகவேண்டாம்” என்றும் உலகநாதரின் உலக நீதியில் சொல்லப்பட்டிருக்கிறது.

மற்ற சில நல்ல சுட்டிகள்

சிற்றினம் சேர அஞ்சி
முற்றிலும் மறுப்பர் பெரியோர்...!
பற்றுக் கொடியாய் தழுவி
சுற்றமாய் ஏற்றுக் கொள்வர்
சற்றும் தயங்காமல் சிறியோர்...!.

In English there is proverb "Show me your friends, and I will show you who you are."

பரிமேலழகர் உரை
பெருமை சிற்றினம் அஞ்சும் - பெரியோர் இயல்பு சிறிய இனத்தை அஞ்சாநிற்கும்; சிறுமை தான் சுற்றமாச் சூழ்ந்துவிடும் - ஏனைச் சிறியோர் இயல்பு அது சேர்ந்த பொழுதே அதனைத் தனக்குச் சுற்றமாக எண்ணித் துணியும். 

விளக்கம் 
(தத்தம் அறிவு திரியுமாறும், அதனால் தமக்கு வரும் துன்பமும் நோக்கலின், அறிவுடையார் அஞ்சுவர் என்றும், அறிவு ஒற்றுமையான் பிறிது நோக்காமையின், அறிவிலாதார் தமக்குச் சுற்றமாகத் துணிவர் என்றும் கூறினார். பொருளின் தொழில்கள் பண்பின்மேல் நின்றன. இதனான் 'சிறிய இனம் பெரியோர்க்கு ஆகாது' என்பது கூறப்பட்டது.) ---

மணக்குடவர் உரை
சிற்றினத்தை யஞ்சுவர் பெரியர்; சிறியவர் அதனைச் சுற்றமாகக் கொண்டு விடுவர். இது பெருமை வேண்டுவார் சிற்றினஞ் சேராரென்றது. 

சாலமன் பாப்பையா உரை
தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.

No comments:

Post a Comment