Search This Blog

திருக்குறள்

அறம் பொருள் காமம் - குறள் வரிசை பதிவு வரிசை

ஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன. தேவைக்கேற்ப கீழ்காணும் சுட்டியை தட்டவும் அறத்து...

நறுமலர் நாணின கண்

குறள் 1231
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி 
நறுமலர் நாணின கண்.

சிறுமை - அற்பத்தனம், இழிவு; கயமைத்தனம், கீழ்மை; இளமை; நுண்மை; எளிமை; குறைபாடு; வறுமை; பஞ்சம்; இளப்பம்; குற்றம்; நோய்; துன்பம்; மிக்ககாமம்; கயமை.
- பிறர் மனத்தை வருத்துகை; நோய்; வியாதி

நமக்கொழியச்  - நமக்கு ஒழிய - நமக்குத் தான் தவிர மற்றவர்களுக்கு இல்லை. 

சேட்சென்றார், - தொலைவான் இடத்திற்கு / நாட்டிற்கு சென்றுள்ளவர் (காதலர்) - appel. n. Persons gone to a distance.
சேண் - தொலைவு, அகலம், தூரம், உயரம், நீளம், ஆகாயம்

உள்ளி  - மனதில் நினைத்து
உள் - உள்ளே - மனதில்
- demonstrative prefix, this, இந்த. As to combine. see, அ dem. Note இப்பால், இம்மாத்திரம், இத்தனை, இவ் வளவு, etc. -- are combinations; 2. a feminine appell, termination as, கூனி; 3. see any grammar for other terminations.
உள்ள' என்பது 'உள்ளி' எனத் திரிந்து நின்றது. உள்ளுதல் என்பது காரணப் பெயர் காரியத்திற்காய ஆகுபெயர்.
உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல். 

நறுமை - வாசனை, சுகந்தவருக்கம் (perfume), நன்மை
மலர் - பூ
நறுமலர் - வாசனையான மலர் / பூ

நாணின - வெட்கப்பட்டன;
நாண் -> பெண்டிர் குணம் நான்கு - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
நாணம் -> எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு,  கூசுதல்

கண் - (அழகு இழந்த, வாடிய) கண்கள்

உறுப்புநலன் அழிதல் - தன்னைப்பிரிந்துச்சென்ற கணவனையெண்ணி உடலின் உறுப்புகள் அழகையிழத்தல்

முழுப்பொருள்
கணவர்(தலைவர்/காதலர்) மனைவியை (தலைவி/காதலி) விட்டுத் தொலைவில் உள்ள ஒரு இடத்திற்கு / நாட்டிற்கு வேலை நிமித்தமாக சென்று உள்ளார்.

அப்படி சென்று இருக்கையில் மன வருத்தமும், துன்பமும், (மன)நோயும் மனைவியான எனக்கு மட்டும் தான். அவருக்கென மன வருதம் ஏதுமில்லை 
(ஏன் என்றால் அவர் தான் வேறு வேலையாக அங்கு இருக்கிறாரே. என்னை பிரிந்த எண்ணம் அவருக்கு இல்லை - என்று நாம் புரிந்து கொள்ளலாம் - நமக்கொழியச் என்று குறியமையால்). 

அப்படி துன்பத்தில் வாடும் எனது மனது அவரையே நினைத்துக்கொண்டு இருக்கிறது. இப்படி நினைத்துக்கொண்டு அவரை ஏங்கி துன்பத்தில் அழுது வாடுகையில் என் கண்கள் ஒளி இழந்து, பொலிவிழந்து இருக்கின்றன. 

அத்தகைய அழுது வாடிய கண்கள் இன்று ஒரு நறுமலரை காண கூட கூசுகிறது, நறுமலரை அழகு என்று நினைகிறது. நறுமலரில் மயக்கும் வாசனை உள்ளது என்று நினைகிறது. இது எத்தனை பெருங்கொடுமை அவளுக்கு ?

ஏன் நறுமலர் மேல் நாணம் கொள்வது ஒரு பெருங்கொடுமையாக சொல்லபடுகிறது என்றால், முன்பு ஒரு காலத்தில் நறுமலர்கள் இவள் அழகை கண்டும் இவள் மேல் உள்ள வாசனையை நுகர்ந்தும் இவளை கண்டு வெட்கபட்டன. ஆனால் இன்றோ அப்படியே தலைகீழாக நடக்கிறது. இவள் நறுமலரை கண்டு ஆச்சர்யப்படுகிறாள். இவள் கண்கள் வெட்கபடுகின்றன, கூசுகின்றன.

இவ்விளக்க உரை ஆசிரியரின் கேள்வி :
இப்படி பெருங்கொடுமை ஆற்றி வெளியுர்களிலும் வெளிநாடுகளிலும் உள்ள கணவன்மார்களை என்ன செய்யலாம் ?
குறட் கருத்து (நன்றி: திரு.தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)

காணுகின்ற மலர்கள் எல்லாம் கவிழ்ந்து கொள்ளும்
கண்மணி உன் கரு விழிகள் கண்டு விட்டால்
நாணி நிற்கும் அம்மலர்கள் உந்தனது
நளின விழி தனைக் கண்டால் என்று என்றும்
வானளவு புகழ்ந்திட்ட காதலர்தாம்
வரவில்லை என்பதனால் விழியிரண்டும்
ஆன மட்டும் அழுதழுது அழகிழக்க

ஆடி நிற்கும் மலர்கள் எல்லாம் ஆர்ப்பரித்து

பரிமேலழகர் உரை
ஆற்றாமை மிகுதியான் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி - இவ்வாற்றாமை நம்கண்ணே நிற்பத் தாம் சேணிடைச் சென்ற காதலரை நீ நினைந்து அழுதலால்; கண் நறுமலர் நாணின - நின் கண்கள் ஒளியிழந்து முன் தமக்கு நாணிய நறுமலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன. 

விளக்கம் (நமக்கு என்பது வேற்றுமை மயக்கம். 'உள்ள' என்பது 'உள்ளி' எனத் திரிந்து நின்றது. உள்ளுதல் என்பது காரணப் பெயர் காரியத்திற்காய ஆகுபெயர். 'இவை கண்டார் அவரைக் கொடுமை கூறுவர், நீ ஆற்றல் வேண்டும்,' என்பது கருத்து.) 

மணக்குடவர் உரை
நமக்குத் துன்பம் ஒழிய வேண்டி நெடுநெறிக்கண் சென்றாரை நினைத்துக் கண்கள் நறுவிய பூக்களைக் கண்டு நாணா நின்றன. பலகால் அழுதலால் நிறங்கெட்டதென்றாவா றாயிற்று.

ஞா. தேவநேயப் பாவாணர்
(ஆற்றாமை மிகுதியால் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.)

சிறுமை நமக்கு ஒழியச் சேண்சென்றார் உள்ளி- இவ்வாற்றாமை நம்மிடத்து நிற்கத் தாம் தொலைவிற்குச் சென்ற காதலரை நினைத்து நீ யழுதலால்; கண் நறுமலர் நாணின- உன் கண்கள் ஒளியும் அழகும் இழந்து, முன் தமக்கு நாணிய நன்மண மலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன.

இவை கண்டார் காதலரைக் கொடுமை கூறுவர். ஆதலால் நீ யாற்றல்வேண்டு மென்பது கருத்து. நீ யுள்ளிக் கண் நாணின என்பது தனிநிலைமுடிபாம் (absolute construction.)

சாலமன் பாப்பையா உரை
பிரிவைப் பொறுக்காத சிறுமை என்னோடு இருக்கப் பிரிவைப் பொறுத்துக் கொண்டு தொலைவில் சென்று அவரை எண்ணி அழுவதால், கண்கள் ஒளி இழந்துவிட்டன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட மண மலர்களுக்கு இப்போது கண்கள் வெட்கப்பட்டுவிட்டன.

No comments:

Post a Comment