Search This Blog

திருக்குறள்

அறத்துப்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை

குறள் பால்: அறத்துப்பால் குறள் வரிசை - Index - Pointers to Kurals (Ordered) - Each Kural in Different pages பதிவு வரிசை - All Posts/Kura...

Thursday, February 8, 2018

039 இறைமாட்சி

பால் - அறத்துப்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - இறைமாட்சி

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 381
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் 
உடையான் அரசருள் ஏறு

குறள் 382
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் 
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு

குறள் 383
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் 
நீங்கா நிலனான் பவர்க்கு

குறள் 384
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு

பதிவு வரிசை

அறனிழுக்கா தல்லவை நீக்கி

குறள் 384
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா 
மானம் உடைய தரசு
[பொருட்பால், அரசியல், இறைமாட்சி]

பொருள்
அறன் -  அறம் - வேள்விமுதல்வன்; அறக்கடவுள். அறம் - ஒழுக்கம், தருமம், புண்ணியம்

இழத்தல் - தவறவிடுதல்; சாகக்கொடுத்தல்; கைவிடுதல்
இழுக்காது - தவறவிடாதல், கைவிடாதல்

அல்லவை - அறம் அல்லாதவை; பாவச் செயல்கள்; பயன் அல்லாத செயல்கள்; allavai   n. அல்¹. 1. Sin, evil;பாவம். அழுக்காற்றி னல்லவை செய்யார் (குறள், 164).2. Uselessness, fruitlessness; பயனின்மை. (பிங்.) 

நீக்கி - விலக்கல்
நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல்.

மறன் - மறம் - வீரம்; கோபம்; பகை; வலிமை; வெற்றி; போர்; கொலைத்தொழில்; யமன்; கெடுதி; பாவம்; கலம்பகத்தின்ஓர்உறுப்பு; மறவர்குலம்; மயக்கம்.

இழுக்கா - குறையாமல்

மானம் - மதிப்புடைமை; கற்பு; பெருமை; புலவி; வலிமை; வஞ்சினம்; கணிப்பு; அளவுகருவி; ஒப்புமை; அளவை; அன்பு; பற்று; இகழ்ச்சி; வெட்கம்; குற்றம்; வானூர்தி; கோயில்விமானம்; மண்டபம்; கத்தூரி; சவ்வாது; வானம்; ஒருதொழிற்பெயர்விகுதி; ஓர்இடைச்சொல்.

உடையது - கொண்டது

அரசு - அரசன்; இராச்சியம் அரசியல், அரசாட்சி அரசமரம் திருநாவுக்கரசநாயனார்.

முழுப்பொருள்
ஒரு அரசு (அரசன்) என்றால் எப்படி இருக்க வேண்டும்? 1) தனக்கு விதிக்கப்பட்ட அறத்தில் இருந்து விலகாமல், தவறாமல் இருக்க வேண்டும். தன்னுடைய அறம் எனில் கடமை என்பது ஆகும். 2) தனது ஆட்சிக்குடியின் கீழ் அறம் அல்லாதவை  நடந்தால் அதனை முற்றிலும் விலக்கிட வேண்டும். 3) ஒரு அரசுக்கு எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள வீரம் / வலிமை இன்றியமையாதது ஆகும். ஆதலால் எப்பொழுதும் தன்னுடைய நாட்டின் (படை)வீரம் குறையாமல் இருக்க செயல்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தன்னுடைய நாட்டின் (உணவு உற்பத்தி, பொருள், ஆயுதங்கள் மற்றும் பலவற்றில்) வலிமை குன்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவை மூன்றும் உடைய அரசு மானம் உடை அரசாகும். அதாவது பெருமை, வலிமை உடைய அரசாகும். அதுவே அரசாகும்.

எது அரசின் அறம்  என்பதற்கு முன்னரே திருவள்ளுவர் பதில் அளித்துள்ளார்

குறள் 381
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் 
உடையான் அரசருள் ஏறு

குறள் 382
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் 
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு

குறள் 383
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் 
நீங்கா நிலனான் பவர்க்கு

புறநானூற்று வரிகள் சொல்வது: “மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம் (55:9-10).

கம்பராமாயணப்பாடல் வீரம் சற்றும் குறையாத மானத்தை இவ்வாறு சொல்கிறது.
“மின்போன் மிளிர்வா ளொடு தோள் விழவும் 
தன்போர் தவிரா தவனைச் சலியா
என்போலி யர்போ ரெனினன் றிதுவோர் 
புன்போ ரென்நின் றயில்போ யினனால்”

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அறன் இழுக்காது - தனக்கு ஒதிய அறத்தின் வழுவாது ஒழுகி, அல்லவை நீக்கி - அறனவல்லவை தன் நாட்டின் கண்ணும் நிகழாமல் கடிந்து, மறன் இழுக்கா மானம் உடையது அரசு - வீரத்தின் வழுவாத தாழ்வு இன்மையினை உடையான் அரசன். 
(அவ்வறமாவது, ஓதல், வேட்டல், ஈதல் என்னும் பொதுத்தொழிலினும், படைக்கலம் பயிறல், பல் உயிரோம்பல், பகைத்திறம் தெறுதல் என்னும் சிறப்புத்தொழிலினும் வழுவாது நிற்றல். மாண்ட, 'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' (புறநா. 55) - என்பதனால், இவ்வறம் பொருட்குக் காரணமாதல் அறிக. அல்லவை, கொலை, களவு முதலாயின. குற்றமாய மானத்தின் நீக்குதற்கு, 'மறன் இழுக்கா மானம்' என்றார். அஃதாவது,
வீறின்மையின் விலங்காம் என மதவேழமும் எறியான் 
ஏறுண்டவர் நிகராயினும் பிறர் மிச்சில் என்று எறியான் 
மாறன்மையின் மறம்வாடும் என்று இளையாரையும் எறியான் 
ஆறன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன் (சீவக. மண்மக.159) எனவும் , அழியுநர் புறக்கொடை அயில்வேல் ஓச்சான'.(பு.வெ. வஞ்சி. 20) எனவும் சொல்லப்படுவது. அரசு: அரசனது தன்மை : அஃது உபசார வழக்கால் அவன்றன்மேல் நின்றது.).

மணக்குடவர் உரை
அறத்திற் றப்பாமலொழுகி அறமல்லாத காம வெகுளியைக் கடிந்து மறத்திற் றப்பாத மானத்தையுடையவன் அரசன்.

மு.வரதராசனார் உரை
ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.

சாலமன் பாப்பையா உரை
தனக்குச் சொல்லப்பட்ட அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில் தவறாமல் நின்று மானத்தைப் பெரிதாக மதிப்பதே அரசு.

Wednesday, February 7, 2018

பொருட்பால் - குறள் வரிசை | பதிவு வரிசை

குறள் பால்: பொருட்பால்

குறள் வரிசை - Index - Pointers to Kurals (Ordered) - Each Kural in Different pages
பதிவு வரிசை - All Posts/Kurals grouped/labeled in single page - Kural mostly not in order

அரசியல்
039 இறைமாட்சி [குறள் வரிசை] [பதிவு வரிசை]
040 கல்வி [குறள் வரிசை] [பதிவு வரிசை]
041 கல்லாமை
042 கேள்வி
043 அறிவுடைமை
044 குற்றங்கடிதல்
045 பெரியாரைத் துணைக்கோடல்
046 சிற்றினஞ்சேராமை
047 தெரிந்துசெயல்வகை
048 வலியறிதல்
049 காலமறிதல்
050 இடனறிதல்
051 தெரிந்துதெளிதல்
052 தெரிந்துவினையாடல்
053 சுற்றந்தழால்
054 பொச்சாவாமை
055 செங்கோன்மை
056 கொடுங்கோன்மை
057 வெருவந்தசெய்யாமை
058 கண்ணோட்டம்
059 ஒற்றாடல்
060 ஊக்கமுடைமை
061 மடியின்மை
062 ஆள்வினையுடைமை
063 இடுக்கணழியாமை

அமைச்சியல்
064 அமைச்சு
065 சொல்வன்மை
066 வினைத்தூய்மை
067 வினைத்திட்பம்
068 வினைசெயல்வகை
069 தூது
070 மன்னரைச் சேர்ந்தொழுதல்
071 குறிப்பறிதல்
072 அவையறிதல்
073 அவையஞ்சாமை

அரணியல்
074 நாடு
075 அரண்

கூழியல்
076 பொருள்செயல்வகை

படையில்
077 படைமாட்சி
078 படைச்செருக்கு

நட்பியல்
079 நட்பு
080 நட்பாராய்தல்
081 பழைமை
082 தீ நட்பு
083 கூடாநட்பு
084 பேதைமை
085 புல்லறிவாண்மை
086 இகல்
087 பகைமாட்சி
088 பகைத்திறந்தெரிதல்
089 உட்பகை
090 பெரியாரைப் பிழையாமை
091 பெண்வழிச்சேறல்
092 வரைவின்மகளிர்
093 கள்ளுண்ணாமை
094 சூது
095 மருந்து

குடியியல்
096 குடிமை
097 மானம்
098 பெருமை
099 சான்றாண்மை
100 பண்புடைமை
101 நன்றியில்செல்வம்
102 நாணுடைமை
103 குடிசெயல்வகை
104 உழவு
105 நல்குரவு
106 இரவு
107 இரவச்சம்
108 கயமை

038 ஊழ்

பால் - அறத்துப்பால்
இயல் - ஊழியல்
அதிகாரம் - ஊழ்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 371
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் 
போகூழால் தோன்றும் மடி

குறள் 372
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை

குறள் 374
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு 
தெள்ளிய ராதலும் வேறு

குறள் 380
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று 
சூழினுந் தான்முந் துறும்

பதிவு வரிசை

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்

குறள் 372
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை
[அறத்துப்பால், ஊழியல், ஊழ்]

பொருள்
பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.
வறிஞன் - பொருளில்லாதவன்

படுக்கும் - படுத்தல் - செய்தல்; நிலைபெறச்செய்தல்; சேர்ப்பித்தல்; வளர்த்தல்; உடம்பிற்பூசுதல்; அழித்தல்; பரப்புதல்; தளவரிசையிடுதல்; ஒழித்தல்; வீழச்செய்தல்; எழுத்துகளின்ஒலியைத்தாழ்த்திக்கூறுதல்; கிடத்தல்; பறையறைதல்.

இழவு - இழப்பு; கேடு சாவு எச்சில் வறுமை

ஊழ் - பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்; முறைமை; குணம்; தடவை; முதிர்ச்சி; மலர்ச்சி; முடிவு; வெயில்; சூரியன்; பகை.

அறிவு - ஞானம்; புத்தி பொறியுணர்வு; அறியவேண்டியவை; கல்வி ஆன்மா

அகற்றும் - அகற்றுதல் - நீக்குதல்; துரத்துதல் அகலப்பண்ணுதல், விரிவாக்கல்.

ஆகல் - ஆதல் - ஆவதுஎனப்பொருள்படும்இடைச்சொல்; நூல் கூத்து தரிசனம் நுணுக்கம் ஆசை உண்டாதல் நிகழ்தல் முடிதல் இணக்கமாதல்; வளர்தல் அமைதல் ஒப்பாதல்; ஆக்கம்

ஊழ் - பழைமை; பழவினை; தலைவிதி, பழவினைப்பயன்; முறைமை; குணம்; தடவை; முதிர்ச்சி; மலர்ச்சி; முடிவு; வெயில்; சூரியன்; பகை.

உற்ற - உற்றது - நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண்.

கடை - முடிவு; இடம்; எல்லை; அங்காடி; கீழ்மை; தாழ்ந்தோன்; வாயில்; புறவாயில்; பக்கம்; பணிப்பூட்டு; காம்பு; ஒருவினையெச்சவிகுதி; ஏழனுருபு; பின்; கீழ்; சோர்வு; வழி; பெண்குறி.

முழுப்பொருள்
பொருளில்லாதவன் / அறிவில்லாதவன் அழிந்து கேடுப் பெற்று வறுமையில் துயரப்பட வேண்டும் என்று ஊழ் இருந்தால் அது அவ்வாறே நடக்கும். அதுப்போல ஒருவனுக்கும் அறிவு (ஞானம்) விரிவாகவேண்டும் என்று ஊழ் இருந்தால் அறிவு வளர்வதற்கான சூழல் அமைந்து நடக்கும்.

இங்கே ஊழ் என்ற சொல்லுக்கு தலைவிதி என்று பொருள் இருந்தாலும், ஊழ் என்ற சொல்லுக்கு குணம், முதிர்ச்சி, முடிவு என்ற பொருள்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆதலால் நாம் கேட வேண்டும் என்றாலும் அல்லது நாம் வளரவேண்டும் என்றாலும் அது நம்முடைய முடிவின் விளைவே ஆகும்.  இங்கே கூற வேண்டிய மற்ற ஒன்றும் இருக்கிறது. நாம் எடுக்கும் முடிவு நமது கடந்த கால அனுபவங்களின் அடிப்படையிலும் நாம் சேர்த்துக்கொண்ட தகவல்களின் அடிப்படையிலும் எடுக்கப்படும். ஆதலால் அது நாம் செய்த வினையின் பயனாகும். அதுவும் ஊழே.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இழவு ஊழ்(உற்றக்கடை) அறிவு பேதைப் படுக்கும் - ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும், கைப்பொருள் இழத்தற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து, அஃது அதனைப் பேதையாக்கும், ஆகல் ஊழ் உற்றக்கடை அகற்றும் - இனி அவன் அறிவு சுருங்கியிருப்பினும்,கைப்பொருளாதற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து அஃது அதனை விரிக்கும். (கைப்பொருள்என்பது அதிகாரத்தான் வந்தது. 'இழவு ஊழ்,' 'ஆகல் ஊழ்'என்பன இரண்டும் வேற்றுமைத்தொகை. 'உற்றக்கடை'என்பது முன்னும் கூட்டப்பட்டது. இயற்கையானாய அறிவையும்வேறுபடுக்கும் என்பதாம்.).

மணக்குடவர் உரை
கெடுக்கும் ஊழ் தோன்றினால் அறியாமையை யுண்டாக்கும்; ஆக்கும் ஊழ் தோன்றினால் அறிவை விரிக்கும். இஃது அறிவும் அறியாமையும் ஊழால் வருமென்றது.

மு.வரதராசனார் உரை
பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.

சாலமன் பாப்பையா உரை
தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.

Tuesday, February 6, 2018

037 அவாவறுத்தல்

பால் - அறத்துப்பால்
இயல் - துறவறவியல்
அதிகாரம் - அவாவறுத்தல்

சுட்டியை தட்டுக (குறளே இங்கு சுட்டி)

குறள் 361
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் 
தவாஅப் பிறப்பீனும் வித்து

குறள் 362
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்

குறள் 366
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை 
வஞ்சிப்ப தோரும் அவா

குறள் 367
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை 
தான்வேண்டு மாற்றான் வரும்

பதிவு வரிசை

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை

குறள் 362
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்
[அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்]

பொருள்
வேண்டுங்கால் - ஒருவருக்கு வேண்டுமென்றால்

வேண்டும் - vēṇṭum   v. opt. id. 1. Verbmeaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை.வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும்(சீவக. 201). 2. Verb in the future tense usedin all genders, numbers and persons, meaning(a) 'will be required'; இன்றியமையாதது என்றபொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும்எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:(b) 'will stand in relation to'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய்வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்னவேண்டும்? 3. Auxilliary verb meaning 'must';அவசியம் என்பதைக் குறிக்கும் வினை.

வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

பிறவாமை - துயர் தரும் பிறப்பு இல்லாது இருத்தல்

மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

அது - அஃது; அஃறிணைஒருமைச்சுட்டுப்பெயர்; ஆறாம்வேற்றுமைஒறுமையுருபு.

வேண்டாமை - வேண்டாது இருத்தல் [அவா அறுத்தலாகிய விருப்பற்றத் தன்மையினை]

வேண்ட - விழைந்தால் மட்டுமே

வரும் - வரும்/ வந்து சேரும்

முழுப்பொருள்
இவ்வதிகாரம் அவா அறுத்தலை பற்றிக் கூறுகிறது. ஆனால் இவ்வதிகாரம் உனக்கு அவா என்று ஒன்று இருந்தால் அது இதுவாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது.

ஆசை/அவா என்பது மனிதனை வஞ்சிக்கும். நமது இலக்கு (வீடுபேறு) நோக்கி நம்மை செல்லவிடாது. ஆதலால் உனக்கு அவா(ஆசை, விருப்பம், விழைவு) என்று இருக்க கூடாது.

ஆனால் ஆசை என்று இருந்தால் அது பிறவாமை என்னும் நிலையாகவே இருக்க வேண்டும். பிறவாமை என்பது நிலையாமையில் இருந்து நமக்கு விடுதலை தந்து நம்மை இந்த பிறப்பு-இறப்பு என்னும் துன்பசுழற்ச்சியில் இருந்து விடுவிக்கும். பிறப்பு இறப்பு என்பது துயர் தருவது. ஆதலால் அது கொடியது ஆகும். பிறவாமை என்பது மீண்டும் பிறப்பு இறப்பு அல்லாதது.

ஆனால் பிறவாமை என்னும் ஆசை எப்போது சாத்தியம் என்றால் மற்ற ஆசைகள் ஏதும் இல்லாது இருக்க வேண்டும். அதாவது மற்ற ஆசைகள் அற்று (இல்லாமல்) இருக்கும் பொழுது தான் பிறவாமை என்னும் நிலை உண்டாகும்.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று திருக்குறளே கூறுகிறது. அது ஆசைக்கும் பொருந்தும். ஆசை என்று பட்டால் பிறவாமையை வேண்டு சிறுமை எதனையும் வேண்டாதே.

சுந்தரர் தேவாரத்தில்,”கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந்தேன்” என்றும், “எங்கோனே உனைவேண்டிக் கொள்வேன் பிறவாமையே” என்பார், பிறவாமையை விழைந்து.
சைவ சிந்தாந்த நூல்களில் உள்ள மெய்க்கண்ட சாத்திரங்களில், உய்யக்கொண்டார் எழுதிய  திருக்களிற்றுப்படியார் திருக்குறளை அடிப்படையாக வைத்தே நிறையப் பாடல்கள் எழுதியுள்ளது.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றமையால்
வேண்டின்அஃ தொன்றுமே வேண்டுவது – வேண்டினது
வேண்டாமை வேண்டவரும் என்றமையால் வேண்டிடுக
வேண்டாமை வேண்டுமவன் பால்.

இப்பாடலின் பொருள்: வேண்டுமிடத்துப் பிறவாமையையே வேண்டவேணுமென்று திருவள்ளுவர் சொன்னபடியினாலே, வேண்டுமானால் அந்தப் பிறவாமையொன்றுமே வேண்டுவது; விரும்பாமையை விரும்ப விரும்பினது வருமென்றும் அவர் சொன்னபடியினாலே, நம்மை விரும்பின கர்த்தாவினிடத்திலே விரும்பாமையை விரும்பிக் கேட்பாயாக. இதனுள், அவாவறுத்தலே பிறவாமைக்குக் காரணமென்பது கண்டு கொள்க

மேலும்: அஷோக் உரை

நயம்பட உரைத்தலின் அழகை குறளில் கண்டபடியே செல்லலாம்.
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்
‘வேண்டும் என்றால் பிறவா வரம் வேண்டும். பிறவாமையோ எதையும் வேண்டாமென்றில் வந்து சேரக்கூடியது’. இத்தகைய எழில்மிக்க கூற்றுகளை கவித்துவத்தின் ஆரம்பப் படிநிலை என்று சொல்லலாம். கவித்துவச்சாயல் இல்லாதவையும் நேரடிப்பொருளின்மூலம் முற்றாக கூறி நிறுத்துபவையுமான குறள்கள் மிகமிகச்சிலவே.

பரிமேலழகர் உரை
வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் - பிறப்புத் துன்பம் ஆதல் அறிந்தவன் ஒன்றை வேண்டின் பிறவாமையை வேண்டும், அது வேண்டாமை வேண்ட வரும் - அப் பிறவாமைதான் ஒரு பொருளையும் அவாவாமையை வேண்ட அவனுக்குத் தானே உண்டாம். (அநாதியாகத் தான் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களால் துன்பமுற்று வருகின்றமையை உணர்ந்தவனுக்கு ஆசை இன்பத்தின் கண்ணேயாகலின், பிறவாமையை வேண்டும் என்றும் ஈண்டைச் சிற்றின்பம் கருதி ஒருபொருளை அவாவின் அது பிறப்பீனும் வித்தாய்ப் பின்னும் முடிவில்லாத துன்பமே விளைத்தலின், அது வேணடாமை வேண்ட வரும் என்றும் கூறினார். பிறவாமையின் சிறப்புக் கூறி, பின் அதுவரும்வழி கூறத்தொடங்குகின்றமையின் 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது.).

மணக்குடவர் உரை
வேண்டுங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்: அப்பிறவாமை பொருளை விரும்பாமையை விரும்பத் தானே வரும். இது பிறவாமையும் இதனாலே வருமென்றது.

மு.வரதராசனார் உரை
ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை
பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.